சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான நடிகை அனார்கலியின் காலி அலுவலகத்தை கும்பலோடு சென்று தாக்கிஇ சேதம் விளைவித்ததாக தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் மற்றுமொரு காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம மீது இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து தென் மாகாண சபை தேர்தலில் சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் காலி மாவட்ட வேட்பாளர் நிஷந்த முத்துஹேட்டிகம இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்தும் பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்துக் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மெதிவக்க தெரிவித்தார்.
கடந்த வாரம் நிஷந்த காலி பிரதம மாஜிஸ்திரேட் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவரைக் கடுமையாக எச்சரித்த பிரதம மாஜிஸ்திரேட் நீதவான் 2 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்திருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷந்தவை நாளை (22ஆந் திகதி) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.