ஐக்கியம், சமாதானம், சகிப்புத்தன்மை நட்புறவு என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் நாட்டின் சமாதான முன்னேற்றங்களுக்கான பங்களிப்பையும் நாம் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது:- உலகெங்கிலுமுள்ள முஸ்லிம் மக்கள் இன்று பேருவகையுடன் கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய மாதங்களில் புனிதமிகு மாதமான ரமழான் மாதத்தின் மிக முக்கியமான மார்க்கக் கடமையான ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்து ஈதுல் பித்ர் பெருநாள் கொண்டாட்டங்களில் உலகெங்கிலும் வாழும் தமது ஈமானிய சகோதரர்களோடு இணைந்து கொள்கின்றார்கள். புனித அல்குர்ஆனினதும் இறைத் தூதர் முஹம் மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளுக்கேற்ப ஒரு உயர்ந்த மார்க்கக் கடமையை நிறைவேற்றி முடித்ததன் பின்னர் மகிழ்ச்சிக்குரிய நாளாக இன்றைய தினம் உள்ளது.
இலங்கையில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் சிங்களவர்கள், தமிழர்கள், பெளத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்த நாட்டை தாய்நாடகக் கொண்டிருக்கும் ஏனைய எல்லா சமூகத்தவர் களுடனும் நட்புறவுடன் வாழ்ந்து வந்துள்ளதோடு, நாட்டின் முன்னேற்றதிற்கும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
கடந்த வருட ஈதுல் பித்ர் கொண்டாட்டத்தின்போது நாம் கிழக்கு மாகாணத்தையும் அங்கு வாழும் பெருந் தொகையான முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்திருந்தோம். இன்று முழு நாடுமே பயங்கரவாத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதோடு வட மாகாணத்தில் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீளச்சென்று சுதந்திரமாக தமது சமய பாரம்பரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.