வவுனியா தெற்கு 1000 குடும்பங்களைச் சேர்ந்த 5320 பேர் – சொந்த இடங்களில் மீளக் குடியமர்வு – 48 சிங்கள குடும்பங்களும் குடியேற்றம்

210909va-re-set.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5320 பேர் நேற்று சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டனர்.

தமது சொந்த இடங்களில் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டவர்களுள் 489 பேர் வவுனியா வடக்கு பகுதியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த சிங்களவர் ஆவர்.  நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த 1000 குடும்பங்களும் நேற்று மீள்குடியேற்றத்துக்காக வவுனியா தெற்கு பிரதேச செயலக பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந் நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் வவுனியா கலாசார மண்டபத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ எம். பி. தலைமையில் நடைபெற்றது. 15 பஸ் வண்டிகளில் இவர்கள் நேற்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வவுனியா சைவப் பிரகாச வித்தியாலய மைதானத்திலிருந்து பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. இவர்களுக்கான உலர் உணவுகளை பசில் ராஜபக்ஷ எம். பி. வழங்கினார்.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் பிரம்மமடு, அருகம்புல்வெளி, பாவற்குளம் ஆகிய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்த மேற்படி 489 சிங்களவர்களே மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *