பாராளு மன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அல்லாமல் நாட்டிற்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டை ஆதரிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டைக் காட்டிக் கொடுத்து நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் இதுபோன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவரா இந்நாட்டுக்குத் தேவை? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; தென் மாகாணத் தேர்தலை முழு நாடும் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி சர்வதேசமும் இத்தேர்தலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருகின்றது. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவரை உருவாக்கித் தந்தமை தொடர்பிலேயே இம்மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாவட்டத்தில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்ட வாக்குகள் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தன.
நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்படும் இரண்டாவது தேர்தல் இது. முதலாவது ஊவா மாகாண சபைத் தேர்தலும் இரண்டாவதாக தற்போது தென் மாகாண சபைத் தேர்தலும் இடம்பெறப்போகிறது. முப்பது வருடகால பயங்கரவாதம் முழு மையாக ஒழிக்கப்பட்டு அபிவிருத்தியில் நாடு கட்டியெழுப்பப்படும் இன்றைய சூழலில் சர்வதேச நாடுகளில் எமது நாட்டை விற்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
எமது எதிர்க் கட்சித் தலைவர் பாராளுமன்றத்துக்கு எதிர்க் கட்சித் தலைவராக இல்லாமல் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு நாட்டுக்கு எதிர்க் கட்சித் தலைவராகச் செயற்படுகிறார். இப்படியொரு எதிர்க் கட்சித் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அவருக்கு மக்கள் சிறந்த பதில் கொடுக்கும் யுகம் தற் போது உருவாகியுள்ளது.
தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கன்றி இரண்டாவது இடத்தையாவது தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்கிறது.
முப்பது வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் நாம் இல்லாதொழித்துள்ளோம். புலிகள் ஸ்ரீமாபோதி மீதும், தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தியதை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. இது முழு இனத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றே நாம் கருதவேண்டும். எமது அடையாளத்தையே அவர்கள் அழிக்கத் துணிந்தார்கள்.
அப்பாவித் தாய்மார், குழந்தைகள், மதத் துறவிகள் என சகலரையும் கொன்றுகுவித்த அவர்கள் கொழும்பில் மட்டுமன்றி தென் மாகாணத்தில் அக்குறஸ்ஸவிற்கும் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றனர். அத்தகைய பயங்கர வாதம் ஒன்றையே நாம் ஒழித்துள்ளோம்.
பாரிய அபிவிருத்திப் பயணமொன்றை முன்னெடுக்கும் இவ்வேளையில் மக்களின் பூரண ஆதரவு எமக்குத் தேவை. அம்பாந் தோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பிரேரணையொன்றை பாராளுமன்றத்திற்கு முன்வைத்து அதனை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எமது எதிர்கால சந்ததியினர் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற் கான பொறுப்பும் எமக்குள்ளது. இவற்றிற் கெல்லாம் சிறந்த தலைமைத்துவம் அவசியம். அதற்கு அம்பாந்தோட்டை மக்களின் பூரண ஆதரவு அவசியம். தென் மாகாணத்தில் வன்முறை இல்லாத தேர்தல் இடம்பெறவேண்டும்.
எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்