ஜீ. எஸ். பி. பிளஸ் நிவார ணத்தைத் தொடர்ந்து பெறு வது தொடர்பாக ஐரோப் பிய நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்து மாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஆடைத் தொழிற்துறை சார்ந்த வியாபாரிகளின் பங்களிப்புடன் இந்த நிவாரணத்தை மீளப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதிநிதி அமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஜீ. எஸ். பி. பிளஸ் எம க்குக் கிடைப்பதை தடுக்க முற்பட்ட ரணில் விக்கிரம சிங்க, இன்று கரு ஜயசூரிய மூலமாக ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை வழங்குமாறு கோரியுள்ளார். ஏன் ஐ.தே.க. தலைவருக்கு இந்தக் கோரிக்கையை முன் வைக்க முடியாது. இந்த வருட இறுதி வரை ஜீ.எஸ்.பி பிளஸ் நிவாரணம் எமக்குக் கிடைக்க உள்ளது. தொடர்ந்து இந்த நிவாரணத்தை பெற சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறந்த நிலை யில் உள்ள நாடாகும். நாம் வறிய நாடல்ல. எமது நாட்டின் தனிநபர் வருமானம் 1500 அமெரிக்க டொலராகும். இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலை யில் இருந்து முன்னேறி மத்திய நிலையை அடைந்துள்ளது. வறிய நாடுகளுக்கே ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணம் வழங்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதிய கடன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.
பொருளாதாரம் தொடர்பாக ரணில் கூறி வரும் எதிர்வு கூறல்கள் ஒரு போதும் நடந்தது கிடையாது. இலங்கைக்குக் கிடைக்கும் உதவிகளை தடுக்க அவர் முயன்ற போதும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.
மூன்று மாதத்துக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் அளவு நிதியே வெளிநாட்டுக் கையிருப்பில் இருக்கும். ஆனால் தற்பொழுது 4 மாதங்களுக்கு போதிய நிதி எமது கையிருப்பில் உள்ளது. இந்தத் தொகை விரைவில் 6 மாதத்துக்கு போதியதாக உயரும். 1977 இல் ஒரு கிழமைக்குத் தேவையான நிதியே கையிருப்பில் இருந்தது.
தற்பொழுது வட்டி வீதம் குறைந்துள்ளது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. இலங்கை திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்ய எட்டு வங்கிகள் முன்வந்துள்ளன.
உள்நாட்டு நெல் உற்பத்தி 23 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதிச் செலவு குறைந்துள்ளது. எமது பொருளாதாரம் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதோடு ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருகிறது. அரச ஊழியர்களின் தொகையை 10 இலட்சத்தில் இருந்து 6 இலட்சமாகக் குறைக்க ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டது.
ஆனால் நாம் 10 இலட்சமாக இருந்த அரச ஊழியர்களின் தொகையை 12 இலட்சமாக அதிகரித்துள்ளோம். அரச ஊழியர்களை அழிக்க முயன்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரச ஊழியர்கள் குறித்து பேச அருகதை கிடையாது என்றார்.