வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை – சச்சின் டெண்டுல்கர்

sachin-tendulkar.jpgகப்டன் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்று என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியில் “மேட்ச் வின்னர்கள் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது அணியில் அதிக அளவில் மேட்ச் வின்னர்கள் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதன் ரகசியம் இதுவே.

துடுப்பாட்டத்திலோ அல்லது பந்து வீச்சிலோ திறமையானவர்கள் அணியில் இருக்கும் போது அணிக்கு வெற்றி நிச்சயம்தான். இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. போட்டியின் போது குறைகள் அங்கொன்றும்,  இங்கொன்றுமாக இருந்தன. இருந்தபோதும் மொத்தத்தில் இந்தியா சிறப்பாக விளையாடியது.

கடந்த 20 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். இதில் தோனி தலைமையிலான இந்திய அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. நான் யாருடைய தலைமையையும் ஒப்பிட்டுப் பேசவில்லை. ஏற்கெனவே சிறந்த அணிகள் இருந்துள்ளன. அதில் ஒன்றுதான் இது என்று கூறுகிறேன்.

36 வயதில் நான் 44 வது சதம் அடித்துள்ளேன். இலங்கை மூத்த வீரர் சனத் ஜயசூரியா 40 வயதிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வயது என்பது ஆண்டுகளின் எண்ணிக்கைதான். வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் சிறப்பாக விளையாடி சாதனை படைக்க முடியும். அணிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்.  நீங்கள் அணிக்காக சாதனை படைத்தீர்களா என்பது முக்கியம்.

என்னுடைய இந்த 44வது சதம் மறக்க முடியாத சதங்களுள் ஒன்றாகிவிட்டது. இதை என்னுடைய சிறப்பான சதம் என்று சொல்வேன். இலங்கையில் இறுதி ஆட்டத்தை விளையாடுவது கடினமாக இருந்தது. அங்குள்ள சீதோஷ்ண நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதிகப்படியான வெப்பத்தால் விளையாடுவதற்கு சிரமப்பட்டோம். ஆனால் அதையெல்லாம் நாங்கள் உடைத்தெறிந்து விளையாடினோம்.

நீங்கள் மனதளவில் உறுதியாக இருக்கும்போது நீங்கள் நிச்சயம் ரன் குவிக்க முடியும். அதைத்தான் நான் இலங்கையுடனான ஆட்டத்தில் செய்தேன்.நான் இன்னும் எத்தனை நாட்கள் விளை யாடுவேன் என்ன லட்சியத்தை கொண்டுள்ளேன் என்பது முக்கியமல்ல. கிரிக்கெட்டை எந்த அளவுக்கு நேசித்து அதை விளையாடுகிறேன் என்பதுதான் முக்கியம். இலங்கையுடனான இறுதி ஆட்டத்தின் போது நாங்கள் 319 ஓட்டங்கள் குவித்தோம். ஆனால் இலங்கையின் துவக்கம் அதிரடியாக அமைந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *