தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளைக் கழித்துவிட்ட அனைவரையும் விடுதலை செய்வதே அறவழிப்பட்ட, நேர்மையான பொது மன்னிப்பாகும் என்று தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயஸ், ஜெயக் குமார், இரவிச்சந்திரன், நளினி ஆகியோர் உட்பட தமிழக சிறைகளில் 14 ஆண்டுகளைக் (ஆயுள் தண்டனையைக்) கழித்த பலர் இன்னும் சிறையில் இருப்பதை கண்டித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மணியரசன், இவர்களை விடுவிப்பது தொடர்பாக தகுதி ஆய்வு மன்றம் அமைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட பின்னரும் அதனை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசைக் கண்டித்துள்ளார்.
தங்களை விடுவிக்க தகுதி ஆய்வு மன்றம் அமைக்குமாறு கோரி வேலூர் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளில் ஒருவரான இராபர்ட் பயஸ் காலவரம்பற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் அளித்த உறுதிமொழிக்கேற்ப, 10 ஆண்டுகளைக் கடந்த சிறைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யாமல், கோவை குண்டு வெடிப்பில் தண்டனையளிக்கப்பட்ட 10 பேரை மட்டும் தமிழக அரசு விடுவித்துள்ளது ஏமாற்று வேலை என்று சாடியுள்ள பெ.மணியரசன், சிறப்பு நாட்களுக்காகப் பொது மன்னிப்பு வழங்கும்போது, எத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்றிருந்தாலும் அவர்களிடையே வேறுபாடு காட்டாமல் பத்தாண்டுகள் தண்டனைக் கழித்த அனைவரையும் விடுதலை செய்வதே ஞாயம் என்று கூறியுள்ளார்.
“இராஜீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் 18 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடுத்தார். அப்போது, புதிதாகத் தகுதி ஆய்வு மன்றம் அமைத்து அவரது விடுதலை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டார். ஆனால் இதுவரை தமிழக அரசு அம்மன்றத்தை அமைக்கவில்லை.
இப்பொழுது அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த சிறையாளிகளை விடுதலை செய்யப் போவதாகத் தமிழக முதல்வர் அறிவித்து, தமிழகம் முழுவதற்கும் பத்துப் பேரை மட்டுமே விடுவித்தார். இது ஒரு கண்துடைப்பு நாடகமாகவே முடிந்தது. பத்தாண்டுகள் சிறையில் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும் விடுதலை செய்வதே அறவழிப்பட்ட, நேர்மையான பொது மன்னிப்பாகும். அவ்வாறு செய்யாமல் சுமை தாங்காமல் திணறும் ஒட்டகத்தின் முதுகிலிருந்து ஒரு துரும்பை எடுத்துக் கீழே போட்டு ஒட்டகத்தை ஏமாற்றுவது போல் பத்துப் பேரை மட்டும் விடுதலை செய்த நிகழ்வு அமைந்துள்ளது.
சிறப்பு நாட்களல்லாத போதும், வழக்கமாக 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் விடுதலை குறித்து முடிவு செய்ய ஆய்வுமன்றம் நிறுவுவதே மனித உரிமையை மதிக்கும் செயலாகும். ராபர்ட் பயாஸ் தொடங்கியுள்ள காலம் வரம்பற்ற உண்ணாப் போராட்டம் அவர்களுக்கு மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 14 ஆண்டுகள் தண்டனை கழித்த அனைவர்க்கும் நீதி கோரும் போராட்டமாகும். எனவே மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், மனித உரிமையில் அக்கறை உள்ள கட்சிகளும் இப்போராட்டக் கோரிக்கையை ஆதரித்துத் தமிழக முதல்வர் கவனத்தை இதன்பால் ஈர்க்க வேண்டும்.
தமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகள் கழித்த அனைத்துச் சிறையாளிகளையும், குற்றப்பிரிவு விதிவிலக்கு எதுவுமின்றி, விடுதலை செய்ய வேண்டும் என்றும், குறைந்த அளவாக அவர்கள் விடுதலை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக மன்றம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் மணியரசன் கூறியுள்ளார்.