வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், வடமாகாண பிரதம செயலர் இளங்கோ உட்பட பிரமுகர்கள் துரையப்பா விளையாட்டரங்கு நுழைவாயிலிருந்து மேள தாளங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மாகாண கொடியை ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. முதலாவதாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிம்பிக் தீபத்தை வவுனியா, யாழ். மாணவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத் தக்கது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இவ்விளையாட்டுப் போட்டிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.