பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார்.
நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கில் செயற்படுகின்ற மனிதாபிமான அமைப்புகள் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் தேவையின் அடிப்படையில், தடையின்றிக் கிடைக்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பயங்கரவாத அமைப்பிலிருந்து சரணடைந்துள்ளவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கே இதன் போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் முடிவடையும் பட்சத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த முடியுமென அமைச்சர் கூறினார். கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உதவி வரும் பட்சத்தில் இன்னும் பல நாடுகளின் உதவிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.
இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் அமைச்சர் குச்னர் மற்றும் மிலிபான்ட் ஆகியோருக்கு விளக்கமளித்துள்ளார்.