பிலிப் பைன்ஸ் தலைநகரில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தை தொடர்ந்து சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. கெட்சானா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சூறாவளியை தொடர்ந்த வெள்ளத்தால் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளனர். கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் இதுவே மிக அதிக அளவு பெய்த மழையாகும். பருவகால சூறாவளியால் ஒரு மாத காலத்தில் பெய்ய கூடிய மழை, ஆறே மணி நேரத்தில் தலைநகர் மணிலாவில் கொட்டியுள்ளது. இன்னும் பல இடங்களில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
தலைநகர் மணிலாவில் கூரைகள் மீது அமர்ந்துள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.உள்ளூர் தொலைக்காட்சிகளில், கூரை மேல் நின்று கொண்டிருந்த மக்கள் நீரில் அடித்து செல்லப்படுவது காண்பிக்கப்படுகிறது.
தலைநகர் மணிலா மற்றும் இருபத்து நான்கு மாகாணங்களில் அரசாங்கம் பேரிடர் காலநிலையை அறிவித்துள்ளது.