நாட்டில் வாழும் ஏனையவர்களைப் போல் உள்ளூரில் இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கும் சகல வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் 12 ஆவது கூட்டத் தொடரில் நேற்று உரையாற்றிய அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள், இடம்பெயர்ந்த மக்களுக்கான அரசாங்கத்தின் உதவிகள் ஆகியன பற்றி அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ. நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள், சரணடைந்த புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள், செனல் – 4 அலை வரிசை வீடியோ ஆகியன குறித்தும் அமைச்சர் தனது உரையின் போது தெளிவுபடுத்தினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.
இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து நிவாரணம், மீள்கட்டுமானம், மீள்குடியமர்த்தல், மீள் ஒருங்கிணைத்தல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய 05 கட்டங்களின் கீழ் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்தும் மோதல்களிலிருந்தும் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் புலிகளினால் இயக்கத்துக்கு வேலை செய்யுமாறு பலவந்தப்படுத்தப்பட்டவர்கள். புலி பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதையடுத்து இவர்கள் தற்காலிகமாக பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் தங்க வைக்கப்பட்டு பின்னர் நிவாரணக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களுக்குத் தேவையான அவசர உணவுகள், கூடாரங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர், மலசல கூட வசதிகள் ஆகியன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் பெய்யக்கூடிய பருவப் பெயர்ச்சி மழையினால் நிவாரணக் கிராமத்தில் வெள்ளம் ஏற்படாத வகையில் அனர்த்த நிவாரண முகாமைத்துவ அமைச்சு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மீள்கட்டுமானப் பணிகள்
மோதல்களின் போது சேதமடைந்த உட்கட்டமைப்புகளின் மீள்கட்டுமானப் பணிகளுக்காக அரசாங்கம் இதுவரையில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது.கடந்த செப்டெம்பர் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 75.009 குடும்பங்களைச் சேர்ந்த 167.908 பேர் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக 110.000 தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மே மாதமளவில் 14.500 இற்கும் அதிகமானோர் தமது உறவினர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பிரிந்த தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றம்
ஓகஸ்ட் மாதமளவில் 695 குடும்பங்களைச் சேர்ந்த 5.331 பேர் வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மீள குடியமர்த்தப்பட்டனர். இன்னும் 9.994 பேர் எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியினுள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 60 மாணவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரச நிறுவனங்களுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்புக்கள் இணைந்து நிவாரணக் கிராமங்களில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
சுகாதாரம்:
நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரின் சுகாதாரத்துக்கு அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. வவுனியாவில் நிவாரணக் கிராமங்களில் 81 வைத்தியர்கள் சேவையாற்றி வருகின்றார்கள். சுகாதார அமைச்சு இதனை 100 வைத்தியர்களாக அதிகரிப்பதற்கும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் 28 வைத்தியர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு நடமாடும் மருத்துவ முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.
கல்வி:
வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி முக்கியத்துவம் கருதி தேசியக் கல்வித் திணைக்களம் க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 1236 மாணவர்களுக்காக 10 விசேட பரீட்சை நிலையங்களை வவுனியாவில் அமைத்திருந்தது. கடந்த மாதம் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் 166 முன்னாள் புலி உறுப்பினர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.
கண்ணிவெடி அகற்றல்:
மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்த முடியும். இதற்காக ஐ. நா. அமைப்புகள் உட்பட பல நிறுவனங்கள் எமக்கு உதவி வருகின்றன. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக புதிதாக பெறப்பட்டுள்ள 10 இயந்திரங்களின் உதவியுடன் எதிர்வரும் வாரங்களில் அதற்கான வேலைகளை துரிதப்படுத்தவுள்ளோம்.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம்:
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இலங்கை ஊடகவியலாளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகம் இலங்கை சட்ட திட்டங்களுக்கு அமையவே தண்டனை பெற்றுள்ளார்.
செனல் 4
வடக்கிலிருந்த தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கொலைசெய்வது போன்று வெளியான வீடியோ போலியானதென்பது விசாரணைகள் உறுதி செய்துள்ளன. இது போன்ற போலியான வீடியோ அலைவரிசைகள் இனிமேலும் ஒளிபரப்பப்படாமலிருப்பதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.