பிரித்தா னியாவின் செனல் 4 தொலைக்காட்சி, இலங்கை இராணுவத்திற்குப் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் வீடியோக் காட்சிகள் தொடர்பாக ஜனாதிபதியின் விதப்புரைக்கமைய நான்கு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன என இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் நான் ஜெனீவாவுக்கு சென்றிருந்த போது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒலிபரப்பிய வீடியோ தொடர்பில் ஒரு மணி நேரம் அவருடன் கலந்துரையாடினேன். செனல் 4 தொலைக்காட்சி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என அவர் என்னிடம் வினவினார்.
இது போலியாகச் சித்திரிக்கப்பட்ட வீடியோக் காட்சி என்று அரசு உறுதிபடக் கூறுவதாக நான் அவரிடம் தெரிவித்தேன். வீடியோக் காட்சிகள் குறித்த அறிக்கை நாளை மறுதினமளவில் வெளியிடப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனிடம் அறிக்கை கையளிக்கப்படும்.
இவை போன்ற குற்றச்சாட்டுகள் எமக்கு ஒன்றும் புதிதல்ல. பல சர்வதேச ஊடகங்கள், வன்னியில் இருந்த 4 மருத்துவர்களின் அறிக்கையை வைத்துக் கொண்டு இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகளை சுமத்தின. சிலியன்களை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும் வைத்தியசாலைகள் மீது மோட்டார் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மருத்துவர்கள் நால்வரும் விடுதலைப் புலிகளே எம்மை இவ்வாறு அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு வற்புறுத்தியதாக அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.
இதே போன்று கனடாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள், இவை போன்ற வீடியோக் காட்சிகளை வெளியிட்டுப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தின. இதுவும் போலியானவை என நாம் உறுதிப்படுத்தினோம். மேற்படித் தொலைக்காட்சி தொடர்பிலான விசாரணைகளை டாக்டர் சுனில் ஹே வித்தாரண ( இவர் உலகளாவிய ரீதியில் பிரசித்திபெற்ற வீடியோ பரிசோதகர் ), மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தலைமை தொழில்நுட்ப விரிவுரையாளர் சத்துர டி சில்வா, சிரேஷ்ட சமிக்ஞைகள் அதிகாரி பிரசாத் சமரசிங்க, மேஜர் ஜெனரல் பி. ஏ. பண்டார போன்றோர் நடத்தினர்.
அவர்களின் அறிக்கையில், இந்த வீடியோ காட்சிகள் ‘கேம் கோடர்’ (Camcoder) மூலமாகவே ஒளிப்பதிவு செய்யப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசியில் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் போலியான ஒலிப்பதிவு (Audio) நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பதிவாக்கப்பட்டது எனவும் உறுதிப்டுத்தப்பட்டுள்ளது”