ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதயநோய் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதய நோய்களும், பக்கவாதமும் உலகில் இறப்புகளுக்கான முக்கியமான காரணம் என்பதையும் அது வருடமொன்றுக்கு 17.2 மில்லியன் உயிர்களைக் காவு கொள்கின்றது என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதற்காகவே உலக இதயநோய் தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான (2009) உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தின் (செப். 27) தொனிப்பொருள் “இதயபூர்வமாக செயல்படு’ என்பதாகும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும். எனவே இதயத்தோடு இணங்கி செயற்படுவோம் என்ற செய்தியை ஊட்டுவதற்காக 2009 உலக இதயநோய் தினம் உலகளாவிய ரீதியில் உணர்வலைகளை அவிழ்த்துவிட்டுள்ளது.
இதய நோய் பற்றி ஆராய முன்பு ‘இதயம்’ பற்றிச் சிறு விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதயம் முள்ளந்தண்டுளிகளில் காணப்படும் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக்குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவதாகும். இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை, வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் ஒருவித பாய்மம் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.
இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் இரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு சோணை அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு இதயஅறைகளை, கீழ்ப்புற இதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.
இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து இரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும். அப்படி தள்ளப்படும் இரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் இரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன.
வலது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு முக்கூர் வால்வு என்றும், இடது சோணை மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு இருகூர் வால்வு என்றும் வழங்கப்படும்.
வலது சோணை அறையில் இருந்து வலது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் வலது சோணை அறைக்குத் திரும்பாமல் ‘முக்கூர் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது சோணை அறையில் இருந்து இடது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் இடது சோணை அறைக்குத் திரும்பாமல் இருகூர் வால்வு’ தடுக்கிறது.
வலது இதய அறை சுருங்கும்போது, அவ் அறையில் இருக்கும் இரத்தம் நுரையீரல் நாடியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் அரைமதி வால்வு என்று பெயர். அதேபோல், இடது இதய அறை சுருங்கும்போது, பெருநாடிவில்லினூடு செல்லும் இரத்தம் திரும்பிவராமல் தடுக்கும் வால்வுக்கு ‘பெருநாடி அரைமதி வால்வு’ என்று பெயர்.
உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஒட்சிசன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே இரத்தத்தைத் தரும் இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை முடியுருநாடி எனப்படும். இதன்மூலம், இதயம் தனக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த இரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.
உலகெங்கிலும் நாளாந்தம் பல்வேறு வகையான புதிய புதிய தொற்று நோய்கள் பற்றிக் கேள்வியுறுகின்றோம். பன்றிக் காய்ச்சல், டெங்கு, எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். பொதுவாக தொற்று நோய்களைத் தடுப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தொற்றா நோய்கள் என்பவை எவை என்பதை அறிந்திருப்பது முக்கியமானது.
இதயம் மற்றும் குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, நீண்ட காலம் நீடிக்கும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என்பனவற்றை தொற்றா நோய்களாக வகைப்படுத்தலாம். உலகில் ஏற்படும், மரணங்களுக்கான முதன்மைக் காரணியாக இருதய நோய்களும், பாரிசவாதமும் அமைகின்றன. முழு உலகிலும் இந்நோய்களால் வருடாந்தம் 17.2 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலக இருதய கூட்டமைப்பானது அதன் அங்கத்தவர்களோடு இணைந்து இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு காரணமாகவும் பக்கவாதம் காரணமாகவும் நிகழும் அகால மரணங்களுள் குறைந்த பட்சம் 80சதவீதத்தை முக்கிய ஆபத்துக் காரணிகளான புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல் உடல் செயற்பாடின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்தவுதன் மூலம் குறைக்க முடியும் எனும் செய்தியைப் பரப்புகின்றது.
நமது உடலில் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த இரத்தம் தூய்மையாகாது. உடல் இழையங்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் இழையங்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துபோகும்.
இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது. இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரிரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.
இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.
அட்ரீனலின் – இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, இரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
தைராக்ஸின் – இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்ச்சி மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.
நாளக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் இரத்தத்தின் அளவைப் பொறுத்தும், இரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யும்.
இதயத் துடிப்பு என்பது இதயம் இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருநாடியில் இரத்த ஒட்டம் ஏற்பட்டு இரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்படுவதே நாடித் துடிப்பு. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும். இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.
இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.
உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைந்து விடும். தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும். ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு (உயர்குருதி அமுக்கம்) என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு (தாழ்குருதி அமுக்கம்) என்றும் சொல்வார்கள். மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.
24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளில் 80 வீதம் இறக்க நேரிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும்இ மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 வீதம் 55 வயதுக்குள் இருக்கின்றனர்.
மாரடைப்பைத் தடுப்பதற்கு முன்னேற்பாடாக பின்வரும் வழிகளை கையாளலாம்.
ஆரோக்கியமாக உணவு உட்கொள்ளல் : பொதுவாக ஒரு சராசரி மனிதனில் “எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், கெட்ட கொழுப்புகள் 140 மி.கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே கொழுப்புள்ள பொருள்களையும் எண்ணெயையும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.
சுறுசுறுப்பாக இருங்கள். இதயத்தைப் பேணுங்கள். 30 நிமிட நேர உடற்பயிற்சிகள் மாரடைப்புகளையும் பக்கவாதத்தையும் தவிர்க்க உதவும். அது உங்களது வேலையிலும் அனுகூலமாக அமையும். படிக்கட்டு வரிசையைப் பயன்படுத்துங்கள். இடைவேளைகளில் உலாவுங்கள்.
உப்பைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். உங்களது உப்பு பாவனையை நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவுக்கு மட்டுப்படுத்துங்கள். பதப்படுத்திய’ உணவைத் தவிருங்கள். அவை பெரும்பாலும் உயர் உப்பு அடக்கத்தைக் கொண்டவை. குறிப்பாக தந்தைக்கோ அல்லது தாய்க்கோ உயர் இரத்த அழுத்த நோய் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உப்பு உட்பட உப்பு நிறைந்த உணவுப் பொருள்களை இளம் வயதிலிருந்தே குறைத்துச் சாப்பிடுவது அவசியம். இதன் மூலம் நோய் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.
புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள். முடியுரு நாடி செயலிழப்பு, இதய நோய், மாரடைப்பு போன்ற ஆபத்துகள் ஒரு வருட காலத்துள் பாதியளவுக்குக் குறையும். காலப்போக்கில் சாதாரண நிலையை அடைந்துவிடும்
ஆரோக்கியமான உடல் நிலையைப் பேணுங்கள். குறிப்பாக உப்பு உள்ளெடுப்பைக் குறைப்பதால் ஏற்படும் நிறை குறைதலானது குருதியமுக்கம் குறைவடைய வழி செய்யும். பக்கவாதத்துக்கான முதன்மையான ஆபத்துக்குக் காரணம் உயர் குருதி அமுக்கமாகும்.
உங்களது தரவு எண்களை அறிந்து கொள்ளுங்கள். உங்களது குருதி அமுக்கம், கொலஸ்ரோல் மட்டம், குளுக்கோசு மட்டம், இடுப்பு இடை விகிதம், உடல் திணிவுச் சுட்டி போன்றவற்றை அளக்கக்கூடிய மருத்துவ நிபுணர் ஒருவரை நாடுங்கள். உங்களுக்கு ஒட்டுமொத்த ஆபத்து நிலையை அறிந்து கொள்வதால் உங்களது இதயச் சுகாதாரத்தை மேம்படுத்தத்தக்க குறிப்பான திட்டத்தை நீங்கள் விருத்தி செய்து கொள்ளலாம். சவால் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கு பரபரப்புத் தன்மை உள்ளது. நன்கு சிந்தித்து அன்றாட நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுக் கொள்வதன் மூலம் பரபரப்பைக் குறைத்துக் கொள்ள முடியும். என்றைக்காவது ஒரு நாள் பரபரப்படைந்தால் தவறில்லை. தொடர்ந்து ஒருவர் பரபரப்படைந்தால் தொடர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடல் நலன் கெடும். இரத்தக் குழாய்கள் சுருங்கும்.
முன்பு இதய நோய், மாரடைப்பு போன்றன குணப்படுத்த முடியாத நோய்களாக கருதப்பட்டன. ஆனால் இதய அறுவைச் சிகிச்சை முறை இன்று விருத்தி கண்டுள்ளது. இதய அறுவைச் சிகிச்சையில் இரண்டு முறைகள் உள்ளன. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வது, மற்றொன்று இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே அறுவைச் சிகிச்சை செய்வது.
இதயத்தை நிறுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது என்பதுதான் பரவலாகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை. இதில் இதயத்தை நிறுத்திவிட்டு அறுவைச் சிகிச்சை செய்வார்கள். அப்போது இதயம் செய்யும் பணியை இதய – நுரையீரல் இயந்திரம் (HEART – LUNG MACHINE) செய்யும். இம் முறையில் வெளியிலிருந்து இரத்தம் செலுத்த வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்குப் பல்வேறு சிரமங்கள் வர வாய்ப்புகள் உண்டு. ஆனால் இதயத்தை நிறுத்தாமல் துடித்துக்கொண்டிருக்கும்போதே அதன் இயக்கத்துக்கு இடையூறு செய்யாமல் அறுவைச் சிகிச்சை செய்வது “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’ ஆகும்.
இச் சிகிச்சை முறையில் நோயாளிக்கு இரத்தம் செலுத்தும் தேவை 99 சதவீதம் இருக்காது. இதனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பு இரத்தம் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை. இரத்தம் வாங்கும் செலவும் மிச்சம். சர்க்கரை நோய், நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் முதியவர்களுக்கும் “பீட்டிங் ஹார்ட் சர்ஜரி’யில் ஆபத்து மிகவும் குறைவு. இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்வதற்கு தேர்ந்த பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லோராலும் செய்துவிட முடியாது.
இத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து ஆயுளை நீடிக்க நவீன ESMR சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது அறுவை சிகிச்சை இல்லாமல், வலியின்றி, அதிக செலவு பிடிக்காத ஒரு புதிய நவீன சிகிச்சை முறையாகும். ESMR என்பதன் விரிவாக்கம், Extracorporeal Shock – wave Myocardial Revascularization என்பது ஆகும்.
இந்த நவீன சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட இதயத் தசையின் மீது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒலி அதிர்வுகள் செலுத்தப்படும்போது பல புதிய இரத்தக் குழாய்கள் உருவாகி இரத்த ஓட்டம் சீராகிறது. தீவிர நெஞ்சு வலியால் அவதிப்பட்டு, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்போருக்கு இந்த நவீன சிகிச்சை மூலம் முழு நிவாரணம் கிடைக்கும். இரத்த ஓட்டம் சீர்பெற்று இதயம் நன்கு இயங்குகிறது. மருந்துகள், பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி போன்றவை இதயக் கோளாறுக்கு உதவும் என்றாலும்கூட, ESMR போன்று முழுமையான தீர்வை அளிக்காது என்று கூறப்படுகிறது.