பிரித்தானிய தொழிலாளர் கட்சி (லேபர் கட்சி) தொழிலாளர்க்கு எதிராகவே செயற்படுகிறது என ஊடகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான. CWU (Communication Workers Union) குற்றம்சாட்டி உள்ளது. CWUவின் உறுப்பினர்கள் தமது தொழிலாளர்கள் ஒன்றியம் தொடர்ந்து லேபர் கட்சியுடனான தனது தொடர்புகளையும் நிதி உதவி செய்வது பற்றியும் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.
கொன்சர்வேற்றிவ் கட்சியின் தனியார் மயமாக்கலைத் தொடர்ந்து லேபர் கட்சியும் தனது பங்கிற்கு தனியார் மயமாக்கலை தொடர்ந்து செய்வது பிரிட்டனில் உள்ள பல தொழிலாளர் சங்கங்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.
தனியார் மயப்படுத்தல், சம்பளம் வெட்டு, ஒய்வூதியம் தவிர்ப்பு போன்றவற்றில் ஏற்படுத்திய மாற்றங்களும் கடந்த பல வருடங்களாக தொழில் புரிந்தவர்களின் உரிமைகளையும் ஜீவாதார நம்பிக்கைகளையும் லேபர் கட்சி தகர்த்துள்ளது. தொழிலாளர்கள் எதிர்கால நம்பிக்கையற்றலை உணர்ந்தும் சில பண முதலைகளுக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கும் லேபர் கட்சியிலிருந்து CWU தனது உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
2001 ஆண்டிலிருந்து இந்த வருடம் வரையில் 6 மில்லியன் பவுண்களை CWUவிடமிருந்து பெற்றுக் கொண்ட லேபர் கட்சி தொடர்ந்தும் எந்த தொழிலாளர்களின் பணத்தை பெற்றதோ அந்த தொழிலாளர்களை அவமானப்படுத்தும் செயல்களில் இறங்கியுள்ளது.
இந்த தொழிலாளர்களின் வேலை நேரங்களில் மாற்றம், இரவு 10 மணி வரையில் வேலைக்கமர்த்தல், நிரந்தரமற்ற தொழிலாளர்களை ஒரு கிழமை அறிவிப்புடன் வெளியேற்றல், அதிகளவு பழுக்களை தொழிலாளர்கள் மீது சுமத்துதல் போன்ற மனிதாபிமானமற்ற முறையில் தொழிலாளர்களை நடாத்துகின்றதை CWU உறுப்பினர்கள் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல CWU உறுப்பினர்கள் அண்மையில் நடாத்திய வேலைநிறுத்தத்தின் போது பிரித்தானியப் பிரதமரின் ‘வேலைக்கு போ’ என்ற வாசகம் CWU தொழிலாளிகளை கேவலப்படுத்தியுள்ளது. இந்த CWU உறுப்பினர்களின் லேபருடனான உறவை முறிக்கும் செயற்பாடுகளுக்கு CNWP ஆதரவளித்து வருகிறது.
அரசும் லேபர்கட்சியும் தமது உறுப்பினர்கள் பணி தபால் சேவைகளை முற்றாக தனியார் மயப்படுத்தும் வேலைகளை கைவிடாது போனால் லேபர் கட்சிக்கு கொடுக்ம் ஆதரவு பற்றிய ஒரு பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என பல CWU மேல்மட்ட உறுப்பினர்கள் 2009 CWU மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ளது மிகவும் முக்கியமானதாகவே கருதப்படுகிறது. இது லேபர் கட்சிக்கு ஒரு தலையிடியாகவும் அமையலாம்.
இதற்கிடையில் லேபர் கட்சி தனது தனியார் மயப்படுத்தும் முயற்சியில், தொடர்ந்தும் தபால் சேவைகளை தனியார் மயப்படுத்தும் பணிகளை செய்து வருவதும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகவும் மோசமான காலகட்டத்தில் உள்ள போது இந்த CWUன் முடிவுகள் மிகவும் அவதானமாக பார்க்கப்படுகின்றது.
இதே போன்று தொழிலாளர் சங்கங்களுக்கான சட்டவரையறை மாற்றங்களும் பொது மக்கள் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் முக்கியமாக சுகாதார சேவைகள் கல்வி வீடமைப்பு சேவைகள் விடயத்தில் பாரிய சிக்கல்களை அரசும் லேபர் கட்சியும் எதிர்நோக்கும் இந்தகாலத்தில் CWU லேபர் உடைவுகள் பலவீனமான லேபர் கட்சியை தோற்றுவிக்கும். இந்த லேபர் கட்சியினால் தாழ்ந்து போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டி எழுப்புமா? என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.