ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள்.
ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர். குரு, ஆசான், ஆசிரியர், வாத்தியார், இப்படி பல அவதரங்கள் கொண்ட மொத்த உருவம் ஆசிரியர். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப்பதம் உண்டு. ஆனால் ஆசான் என்ற ஒரு வார்த்தைக்கு இலக்கன வித்தகர்கள் எதிர்மறை வார்த்தை தரவில்லை
ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. பொதுவாக இந்நாள் ஒக்டோபர் மாதம் 06 ம் திகதி அநேக நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 5ஆம் தேதி 1888ஆம் ஆண்டு திருத்தணியில் பிறந்தார் ராதாகிருஷ்ணன். சென்னை பல்லைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன், பிரசிடென்சி கல்லூரியில் தத்துவப் பாடத்திற்கான விரிவுரையாளராக பணியாற்றினார். அன்று முதல் இந்தியாவின் தத்துவம் மற்றும் ஆன்மீகத் துறையைப் பற்றி விரிவாக கற்கத் துவங்கினார். தத்துவத்தின் ஆசிரியனாகத் திகழ்ந்தார். அதன் பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார் ராதாகிருஷ்ணன். இதன் தொடர்ச்சியாக 1946-52ஆம் ஆண்டுகளில் யுனெஸ்கோவின் இந்திய குழுத் தலைவராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்.
ராதாகிருஷ்ணனின் திறன் அவரை மென்மேலும் வளர்த்து, 1952ஆம் ஆண்டு முதல் 1962 ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகித்தார். அதன்பின்னர் 1962 முதல் 1967 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தார்.
டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் பேராசிரியராக இருந்தபோது அவரது பிறந்த நாளைக் கொண்டாட, மாணவர்களும், அவரது நண்பர்களும் விரும்புவர். ஆனால் ராதாகிருஷ்ணன் எனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம். அன்றைய தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என்று கூறியுள்ளார். அதன்படியே இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியை மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.
ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
ஆண்டு தோறும் ஆசிரியர் தினத்தன்று இந்தியா முழுவதும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இன்றைய தினம் தமிழக முதல்வர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்…’ “பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடராய் எழுந்திட முடியும். அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை உலகத்துக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்’ மிகுந்த எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
சீரிய சிந்தனைகளோடு கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரது வாழ்விலும் வளம் செழித்து நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்… “கல்வியைக் கற்பிப்பது மட்டுமன்றி கொள்கைகள் மற்றவர்களிடம் பழகும் விதம் உள்ளிட்ட விஷயங்களையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்கின்றனர். மாணவர்களின் நண்பராக போதனையாளராக வழிகாட்டியாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். இளைய சமுதாயத்தினருக்கு முன்னுதாரணமாக அவர்கள் இருக்கின்றனர்’. என்று தெரிவித்துள்ளார்.
தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்கமுடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாராட்ட வேண்டும். சிறு குழந்தைகளுக்குச் பாடங்களை அடித்தோ, அல்லது மிரட்டியோ கற்றுக் கொடுக்க முடியாது. அப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏறாது. குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அசிரியர்கள் குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் தங்களின் முழுக்கவனத்தையும் ஆசிரியர்கள் மீது விழும். அப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலை பேச்சும், மழலைச் சரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர்; உன்னத உணர்வு மனதில் ஏற்படும். அதே போல் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளில் பணியாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி சற்று வித்தியாசமானது. அங்கு ஆரம்பப் கல்வி படிக்கும் மாணவன் பின் வாழ்வின் எத்தகைய உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அப்பள்ளியையும் ஆசிரியர்களையும் மறப்பது இல்லை.
ஆசிரியர் பணியில் சேர்ந்த பொழுது ஆரம்ப கல்வியை மாணவ, மாணவிகள் முடித்துச் செல்லும் பொழுது உண்மையிலேயே பெரிய இழப்பாக இருந்தது. அது தற்பொழுது பழகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒரு குணம், மாறுபட்ட குணாதிசயங்கள், மாறுபட்ட சிந்தனைகள் என்று ஓர்; இனிய கலவைகளை ஒரே இடத்தில் பார்க்க நினைத்தால் பள்ளிகளுக்குச் செல்லலாம்.
ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்கப்படுகிறது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் என்பவர்கள் செயலுக்கும் சொல்லுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் ஆசிரியர் பணி சிறப்பாக போற்றப்படும். அதே போல் மாணவர்களை சிறந்த பண்போடு உருவாக்க நினைக்கும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் எட்டின அளவிற்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர் என்று ஒரு கருத்து இருக்கிறது இதனை உணாந்து செயல்பட்டால் ஆசிரியர் பணி சிறக்கும், அதனால் நாடு, சிறக்கும்.
பிற பணிகளில் இல்லாதது ஆசிரியர் பணியில் இருக்கிறது. மாதா பிதா குரு தெய்வம் என்று தான் சொல்கிறோம்.
தமிழ்சிறப்பாயிரம் பாடலில் சொன்னது போல் அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு ஆசிரியன் உலகத்தையே குழந்தைகளுக்கு தருகிறான். இந்த உண்மைகள் நிலைத்து நிற்க வேண்டும். ஆசிரியர் சமூகம் மேன்மேலும் வளர வேண்டும் என்று அனைவருமே நினைக்கின்றனர். மொத்தத்தில் இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார்.
அதற்க்கு அந்த மாணவன், இந்த இந்த அலக்சாண்டர் போனால், ஆயிரம் அலேக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.