ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஆந்திராவில் இதுவரை 67 பேர் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 67 பேர் ரெட்டி மரணத்தைத் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் குண்டூர், கிழக்கு கோதாவரி, ஹைதராபாத், ரங்காரெட்டி, பிரகாசம், மேடக், நல்கொண்டா, கரீம் நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாரடைப்பால் இறந்தவர்களில் சிலர், ரெட்டி அறிமுகப்படுத்திய ஆரோக்கியஸ்ரீ என்ற இலவச இருதய அறுவைச் சிகிச்சை திட்டத்தின் கீழ் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதையடுத்து ராஜசேகர ரெட்டி மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ள தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற செயல்களால் எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையாது. அவர் எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருந்தார். ஏழைகளின் உயர்வுக்காக பாடுபட்டார். எனவே அவரது ஆத்மா வருத்தப்படும்படியான காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.