தற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது. அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல என்று அரசியல் யாப்பு விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியிருந்த நேர்காணலில்.தெரிவித்திருந்தார்
கேள்வி : நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது?
பதில் : முப்பது வருடகால பயங்கரவாதம், 30 வருட கால யுத்தம் நாட்டின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை மாற்றியமைப்பதே இப்போதைய தேவையாக உள்ளது. இரண்டாவதாக 1977 காலப் பகுதியில் ஆரம்பித்த திறந்த பொருளாதாரக் கொள்கையானது 2006இல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பொருளாதார வழிமுறைகளில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் சரிவு நிலை ஏற்பட்டிருப்பினும் கூட எமது தேசிய உற்பத்திகளைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.
விசேடமாக தேசிய உற்பத்தியை கிராமிய, மாகாண மட்டத்தில் அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சிறந்த முறையில் செயற்படுவதற்கு ஏதுவாய் அமைந்தது. தேசிய உற்பத்தியில் 50 சதவீத அதிகரிப்பை மேல் மாகாணமும், 2.9 வீதம் வட மாகாணமும், கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் 4 சதவீத அதிகரிப்பையும் காட்டுகின்றன. இதேவேளையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தல், மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் இவற்றின் பெறுபேறுகளிலேயே தங்கியிருக்கின்றன.
கேள்வி : யுத்தத்தின் பின்னரான சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில் : தற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.
அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல. வேறு நாடுகளில் அகதிகளைப் பராமரிப்பதில் நிலவும் பிரச்சினைகளைப்போல நமது நாட்டில் இல்லை. அமெரிக்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிறிய தீவான எமது நாட்டில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை நிவாரணக் கிராமங்களில் வைத்து பராமரிப்பதென்பது சாதாரண விடயமல்ல.
முதலில் மக்கள் மீளக்கூடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் பிரதான பாதைகள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். அப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறந்த போக்குவரத்து வசதிகள் இருந்தால்தான் அப்பகுதிகள் பொரு ளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.
அடுத்த கட்டமாக அப்பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கூடியதொரு நிலைமை ஏற்படும். மன்னார் மாவட்டத்தில் 45 பொலிஸ் நிலையங்கள் இருந்தன. அவற்றில் பல முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் பொலிஸார் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். படிப்படியாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றையும் தனியொரு அமைச்சினால் மட்டும் செய்துவிட முடியாது. அனைத்து அமைச்சுக்களினதும் முழு ஒத்துழைப்புடனேயே இவ்வாறான பணிகளைச் செய்ய முடியும். வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. அடையாள அட்டை இல்லாமல் அவர்களால் எந்தவொரு தேவையையும் பூர்த்திசெய்துகொள்ள முடியாது. இவ்வாறு பிரச்சினைகள் அதிகம்.
கேள்வி : பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி?
பதில் : இது ஒன்றும் புதிய விடயமல்ல: 1987ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செயற்படும் மாகாண சபை முறை 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக ஏற்று சட்ட ரீதியாக செயற்படுத்துவது 13ஆவது திருத்தத்தின் கீழ் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆயினும் கடந்த 20 வருடங்களாக தமிழ் மொழியை அமுலாக்க முடியாது போய்விட்டது. தற்போதைய ஜனாதிபதி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.
அதற்கமைய நான் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், பிரத்தியேக முயற்சிகள் ஆகியன காரணமாகவும் அதனை முன்னெடுக்க ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாகவும் தமிழ் மொழியை அரச கரும மொழியாக முழு அளவில் முன்னெடுக்க அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மொழியை அரச கரும மொழியாக முன்னெடுப்பதற்கான அரசியல் தடைகள் முற்றாக நீங்கியுள்ளன.
எனினும் தமிழ் மொழியை அரச திணைக்களங்களில் உரிய முறையில் அமுல்படுத்துவதற்கேற்ற ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தாய்மொழி தமிழாக இருப்பின் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைக் கற்றிருத்தல் அவசியமாகும். அதுபோல் தாய் மொழி சிங்களமாக இருப்பின் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை கற்றிருத்தல் அவசியமாகும். அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் உயர் அதிகாரிகள் மட்டத்திலிருந்து சாதாரண ஊழியர்கள் வரையிலானோர் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்துக் கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.
2007 ஜுலை முதலாம் திகதியிலிருந்து அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் மொழியை கற்றிருக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சம்பள அதிகரிப்புப் பெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது அரச திணைக்களங்களில் இரண்டாம் மொழி தொடர்பாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தெற்கே சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் கற்பிக்கும் அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரச உத்தயோகத்தர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தெற்கில் சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் அதேவிதமான பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பான்மை சமூகம் முங்கொடுக்கிறது. இதுவே கள யதார்த்தமாகும்.
இந்த வாரம் தொடக்கம் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொழி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க செயலாளர் மட்டத்திலான அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளார். அந்தந்த அரச நிறுவனங்களில் அரசகரும மொழித் திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு அவரையே சாரும். நமது நாட்டில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் இருக்கின்றனர். இதுவொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான செயலாக அமையும்.
கேள்வி : எப்போதும் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்து வரும் தெற்கில் உள்ள அரசியல் தடைகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்?
பதில் : அதற்கு நாம் கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். எமது அரசியல் பிரச்சினைகளை இதுவரை தீர்க்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் சிறுபான்மையினர் அல்ல என்பதையும் இவ்விடத்தில் கூற வேண்டும். இதுவரை காலமும் நாட்டை ஆண்டுவந்த பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கிடையே இது தொடர்பில் ஒரு இணக்கம் ஏற்படாமை இதற்கு முக்கிய காரணமாகும்.
தேசியப் பிரச்சினை தொடர்பாக மொழி, மதம், இனம் ஆகிய விடயங்களில் ஒரு இணக்கம் ஏற்படத் தவறியமையும் முக்கிய காரணமாகும். அனைத்துக் கட்சிகளின் மாநாட்டை ஜனாதிபதி கூட்டுவதற்கான காரணம் இந்தப் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கேயாகும். இவ்விடத்தில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் குறைந்த பட்ச இணக்கப்பாட்டுக்காவது வரவேண்டும்.
கேள்வி : இதற்கு பதின்மூன்றாவது திருத்தம் எந்த வகையில் உதவியாக அமையும்?
பதில் : பதின்மூன்றாவது திருத்தம் புதிய விடயமல்ல. நமது அரசியல் யாப்பின் ஓர் அங்கமாகவே இருக்கிறது. அதனைக் கொண்டுவருவதற்கான முக்கிய நோக்கமே வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதாகும். ஆனால் கடந்த 17 வருடகாலமாக அம் மாகாணங்கள் தவிர்ந்த வேறு மாகாணங்களில் அது செயற்பட்டு வருகிறது. யுத்தத்தின் பின்னர் கிழக்கில் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல், பின்னர் மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் கிழக்கு மாகாண சபை இயங்கி வருகிறது.
வடக்கில் ஏற்கனவே நான் கூறியதுபோன்று அனைத்து விடயங்களையும் கட்டம் கட்டமாகவே செய்ய வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு தெற்கில் இருக்கிறது. முக்கியமாக காணி, பொலிஸ் ஆகிய விடயங்களில் அதிகாரம் தொடர்பான பீதி அர்த்தமற்ற ஒன்றாகும். வடக்கு, கிழக்கில் சிறு தொகை காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் தனிநபர்களுக்குச் சொந்தமானதாகும். அப்பிரதேசங்களில் சொற்ப அளவிலான நிலங்களே அரசுக்கு சொந்தமானதாகும்.
கேள்வி : 13ஆவது திருத்தம் தொடர்பில் அரச தரப்பினருக்கிடையே ஒருமித்த கருத்தை எட்டமுடியாதுள்ளதே?
பதில் : ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய, விமல் குழு இவர்கள்தான் 13ஆவது திருத்தம் தொடர்பான எதிர்ப்பை முன்வைக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மொழிப் பிரச்சினை தொடர்பான எதிர்ப்பைச் சமாளித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது போன்று இதனையும் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே நான் கருதுகிறேன்.
கேள்வி : இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென கருதுகிறீர்கள்?
பதில் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நாம் 88, 89 களில் இருந்தது போன்ற நிலையிலேயே இருந்து வந்தனர். அவர்களால் சுயாதீனமாக செயல்பட முடியாமல் இருந்தது. கடந்த காலங்களில் நிலவிய யதார்த்த நிலை அது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இந்நிலையில் அவர்களின் செயற்பாடுகளும் மாற வேண்டும். நிச்சயம் மாறும் என்றே நானும் கருதுகிறேன். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் அந்த மாற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்து புலிகளை ஏசுவதையோ, விமர்சிப்பதையோ விடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட விடுவதே சிறந்தது. அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரையில் அவர்கள் அப்பகுதி மக்களால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அவர்கள் உண்மையான பிரதிநிதிகளா இல்லையா என்ப தையும் அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். அது வரையில் அவர்களை அப்பிரதேச ஜனநாயக பிரதிநிதிகளாக ஏற்றுச் செயற்பட வேண்டும்.
கேள்வி : இடதுசாரிக் கட்சிகளின் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன?
பதில் : வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஐந்து இடதுசாரிக் கட்சிகள் எப்போதும் இணைந்தே செயற்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயற்படுவது பற்றிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஒருவர் இன்னொருவரின் மனம் புண்படாதவாறு செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.
கேள்வி : வடபகுதி மக்களின் மனங்களைத் தெற்கு எவ்வாறு வெற்றிகொள்ளலாம்?
பதில் : வடக்கில் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டிவரும் தெற்கு மக்களின் கரிசனையிலிருந்தே மக்களின் மனங்களை வென்று பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை சந்தோஷத்திற்குரியதாக இருப்பினும் அளவுக்கு மிஞ்சி அதைத் தூக்கிப்பிடிக்காமல் ஏற்பட்டிருக்கும் சுமுக நிலையை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
முப்பது வருட காலமாக இடம்பெறாத சுமுக அரசியல் நிலையை ஏற்படுத்தி அதற்கான களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு, பொது மக்கள், சமூகக் குழுக்கள், அரசியல் வாதிகள் உட்பட அனைவருமே இதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
நேர்கண்டவர் : பி. வீரசிங்கம்