ஏழை நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்காக தன்னிடம் உள்ள தங்க இருப்பிலிருந்து 403 டன்னை விற்கிறது சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப். இதன் மூலம் 13 பில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு, அது ஏழை நாடுகளுக்குப் பிரித்து அளிக்கப்படும். ஐஎம்எப்பின் இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலை அதன் செயற்குழு வழங்கியுள்ளது.
ஏற்கெனவே ஜி 20 உச்சி மாநாட்டின் போது, ஐஎம்எப்பிடமுள்ள தங்க இருப்பை விற்று நிதி ஆதாரத்தைப் பெருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இப்போது தங்கத்தை விற்பனை செய்து, அதன் மூலம் திரளும் தொகையை ஏழை மற்றும் வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வசதியை மேம்படுத்த கடனாகத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நிதி கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று வாஷிங்டனில் நடந்தது. அதில் கை இருப்பில் உள்ள தங்கத்தில் 403 டன் தங்கத்தை விற்பதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. 186 உறுப்பு நாடுகளில் 85 சதவீத நாடுகள் இந்த முடிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. மேலும் கடன் வாங்கிய சில நாடுகள் வட்டி தொகை செலுத்த இயலவில்லை என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வட்டி தொகையை சர்வதேச நிதிக்கழகம் ரத்து செய்வதாக ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் தெரிவித்தார்.
ஐஎம்எப்பிடம் தற்போது 3217 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது!