மாகாண சபைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதிகளைப் பெற்றுக் கொள்வதுடன் சில விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். மாகாண முதலமைச்சர்களின் 26வது மாநாடு நேற்று (19) ஆம் திகதி ஹபரன விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாநாடு நடைபெற்ற ஹோட்டல் முன்பாக ஏழு மாகாண சபைகளின் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. மாகாண சபையின் பிரதான செயலாளர்கள், திறைசேரி மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
விவசாயத்துறை, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அவ் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்குத் தேவையான கூடுதலான நிதியைப் பெறுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாக 13ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக அமைச்சின்அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் “நாம் பயிர் வளர்ப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம்” தேசிய வேலைத் திட்டம் ஊடாக விவசாயிகளின் பொருளாதார துறையை முன்னேற்றுவதற்கு மாகாண சபைகள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
சமூக சேவைத் திணைக்களத்தின் மூலம் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கும் மாகாண சபையின் கீழுள்ள குளங்களை புனரமைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.
மாகாண சபையின் கீழுள்ள வீதிகள் புனரமைப்பில் ஏற்பட்டுள்ள இன்னல்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள வட மத்திய மாகாண சபைக்கு சொந்தமான ஆயுர்வேத மத் திய மருந்தகங்களை மீள வடமத்திய மாகாண சபைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனோடு பேசியுள்ள தாகவும் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார். இறுதியாக 27 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டை வடமேல் மகாணத்தில் நடத்துவதற்கும் அதன் தலைவர் பொறுப்பை மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்கவுக்கு வழங்கவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.