பாகம் 5
ஜனநாயகமயப்படுத்தல்
19/5 இலங்கைத் தீவின் அரசியலில் பாரிய திருப்புமுனை என பல அரசியல் அவதானிகளால் கணிக்கப்படுகிறது. தமிழர்களது இன்றைய நிலை, அவை குறித்து புலிகளது நேரடி/மறைமுகமான பங்கு, சாதக/ பாதகமான விளைவுகள், என்பவற்றைக் கொண்டு இக் கணிப்புக்கு வருபவர்கள் உள்ளனர். இவற்றின் மேல் ஜனநாயகம், தொழிலாளர் உடமைகள் அவர் வாழ்க்கைத்தரம், பிராந்தியத்தின் பாதுகாப்பு அதன் ஸ்திரம் என்பவற்றைக் கொண்டு இம் முடிவக்கு வருபவர்களும் உண்டு.
எவ்வழி தேர்ந்தாலும், இவர்கள் இடது/வலது எனக் கடைப் பிடிக்கும் இடைவெளி அற்றுப்போவதும், அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின் விளக்கங்கள் பல விடயங்களில் ஈற்றில் ஒருவகைப்படுவதும் ஆச்சரியமானவை. மேலும், இந்நிலமைக்கான அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்கியது நாமே என ஜே.வி.பியும், சில தமிழ் ஆயுதக்குழுக்களும் உரிமைகோருவது வியப்பூட்டுபவை ஆயினும் எமது கவனத்திற்கு ஆழமாக உட்படுத்தப்பட வேண்டியவை.
புலிகளது ஒட்டு மொத்தமான கட்டுப்பாட்டின் ஆக்கிரமிப்பின் உள்ளே தமிழ் பேசும் சமுதாயங்கள் பேச்சற்ற ஊமைகளாக, மூச்சு விடமுடியாத நெருக்கடிகளுள் வாழும் பிராணிகளாக, அறிவிலும் ஆற்றல்களிலும் தேக்கம் கண்ட மனித முண்டங்களாக மடக்கப்பட்டு வாழ்ந்தார்கள் என்பது உண்மை. எமது தாயகங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் புகலிகள் கூட அரசியற்-கூட்டங்கள் நடத்த முடியாத மனோவியல் நிலைப்பாட்டை உருவாக்கி வைத்திருந்ததையும் நாம் அறியாமல் இல்லை. இலண்டனில் இந்நிலமையை தாண்டுவதற்கு ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகரது இறப்பும், அதனைத் தொடர்ந்து அவர் பெயரிலான ‘இரத்தினா நினைவு மாகாநாடு’ ஒன்றும் தேவைப்பட்டது என்பதிலும் பார்க்க, அதற்கான காலம் பங்குனி 2007 வரை ஆகிற்று என்பதே குறிப்பிட வேண்டியது. இவ்வாறு புலிகளது அடக்கு முறையின் ஆழத்தை அதன் வீச்சை என்றுமே ஏற்றுக் கொண்ட போதிலும், புலிகளது அழிவு ஜனநாயக-மறுமலர்ச்சியின் தொடக்ககாலம் என்று யாராவது கூறுவதை எம்மால் ஏற்று கொள்ள முடியாமலே உள்ளது.
புலிகளது அழிவு தமிழ் பேசும் மக்களது கைகளில் இருந்திருந்தால், மேற்கத்திய நாடுகளது உதவிகள் இந்தியாவின் ஆதரவு சீனாவின் ஈடுபாடு என உலகாளாவிய ‘சதி’ போல அமைந்திராவிட்டால், சிறீ லங்கா அரசிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையே உள்ள சரித்திர பூர்வமான உடமைப் பிரச்சனைக்கான தீர்வுடன் இடம் பெற்றிருந்தால், ஏன், சில புலி எதிர்ப்புவாதிகளது வெறியுடன் கூறினால், குறைந்தபட்சம் ஆயிரம் ஆயிரம் மக்களது படு கொலைகளுடன் முடிந்திராவிட்டால், சிலர் சில வேளைகளில் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கும்.
ஆனால் விசித்திரங்கள் இவற்றிலும் மேலானவை. மிக-அண்மையில் இலண்டன் வந்த ஜே.வி.பி பா.உறுப்பினர் “நாம் மற்றவர்கள் போல புலிகளது இனவாதப் போருக்கும், இனவாதங்களுக்கும் எதிராக வாய்ப் பேச்சுடன் நின்று விடவில்லை. அதற்காக அயாராது நிலத்தில் கருமமும் ஆற்றினோம். புலிகளை அழிக்க வேண்டும் அல்லது பலவீனப்படுத்த வேண்டும் என்பது எமக்கு முதலாவது கருத்தாக இருந்தது. எனவே, மகிந்தாவை பதவிக்கு கொண்டுவருவதே தகுந்த உபாயமாகவும் எம்மால் கணிக்கப்பட்டது. எமது உழைப்பு இல்லாது மகிந்தா வென்றிருக்க முடியாது.” என்ற தமது விளக்கத்தை தருகிறார். மறுகணமே, “புலிகளுடன் அழிக்கப்பட்டது பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களது ஆயிரமாயிரம் வருடங்களான சரித்திரமும் அவர்களது பலமும் வீரமும் தமது நிலம் மீதான ஆளுமையும் கூடவே அழிக்கப்பட்டன” என்கிறார்.
இவை இரண்டையும் இணைத்தப் பார்ப்பவர்கள் இவற்றிடையேயான முரண்பாடுகள் உள்ளதைப் புரிந்து கொள்வர். ஆனால், அவை அரைவாசி விளக்கமே. “நாம் சிறீலங்காவின் தேசிய விடுதலைக்காகப் போராடுகிறோம்”; (1நாம் சிறீலங்கா என்ற தேசியத்தைக் கட்டப் போகிறோம். 2அதாவது, சிறுபான்மையினரது தேசிய அந்தஸ்துக் கோரிக்கையை நிராகரிக்கிறோம்), “இந்திய-ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதால் நாம் 13ம் சீர்-திருத்தத்தை நிராகரிக்கிறோம்”, “அதிகார/ நிர்வாகப் பரவலாக்கம் என்பது பொறுப்பற்ற விடயம்” (அதாவது, 1அதிகாரம் மத்திய அரசுடன் மட்டுமே இருக்க முடியும். 2ஆனால், பிரித்தானிய ஏகாதிபத்தியம் தண்டவாளங்களையும் சாலைகளையும் கட்டி ஒரு நாட்டையே உருவாக்கினார்களே, அவர்கள் போனதும் ஏன் அந்த ஒற்றை அரசியல் நிலைப்பாட்டை குலைத்து எறிந்திடவில்லை? குறைந்தபட்சம் ஏன் தண்டவாளங்களையும் சாலைகளையும் உடைத்தெறியவில்லை?), “தமிழர்களது பூர்வீக-நிலம் என்ற கோரிக்கையை நாம் ஏற்க முடியாது” (1தமிழர்களும் இஸ்லாமியரும் வடகிழக்கு பிரதேசங்களின் வெளியே வாழும்போது இது நியாயமற்றது. 2அப்படியானால் பூர்வீக-நிலம் சமூகச்-சொத்து என்ற உடமைகள் மக்களுக்கு இல்லையா?), ஜே.வி.பி அரசுக்கு வந்தால் தமிழ் பேசும் சமுதாயங்கள் இன ரீதியில் முன் வைக்கும் கோரிக்கைகள் அவசியமற்றவை ஆகிவிடும்”; (2நல்லவிடயம்தான், ஆனால் அவர்கள் எவற்றை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? ஜனநாயக ரீதியில் அவர்கள் அரசு மாறக் கூடடி நிலையில், தமது நடவடிக்கைகளை எப்படி நிலைநிறுத்தப் போகிறார்கள்?), என்ற கூற்றுக்களுடன் இணைத்துப் பார்க்கும் போது அவை சித்தாந்த, தர்க்க, தத்துவார்த்த ரீதிகளில் முரண்பாடுகளாக அமைந்துள்ள போதிலும் அவர்களது உள்-நோக்கங்கள் நன்கு புலனாகும். (மேலே, கூற்றுகளுடன் அவர் தந்த 1விளக்கமும், தொடர்ந்த எமது 2கேள்விகளையும் இணைத்துள்ளோம்.)
புலிகளை அழிக்க அல்லது பலவீனப்படுத்த மகிந்தாவை ஜனாதிபதியாக்கிட தமது தோழர்களது உழைப்பையும் பணத்தையும் விரையம் செய்கிறார்கள் ஜே.வி.பியினர். ஆனால், புலிகளோ அதே மகிந்தாவை ஜனாதிபதியாக்கி தம்மை அழித்துக் கொள்ள அவரிடமிருந்து பணத்தையும் பெற்று தம் மக்களது வாக்குரிமையும் ‘ரத்துச்’ செய்கிறார்கள். இவை இரண்டையும் எவ்வாறு இணைத்துக் கொள்வது, புரிந்து கொள்வது? அரசியல்வாதிகளால் நிச்சயமாக அது முடிந்த காரியம்தான் ஆனால், வாழ்வே அரசியல் என்று உணர்ந்து கருமம் ஆற்றுபவர்களால் அது எப்படிச் சாத்தியம்?
இவ்வாறான குழப்பவாதங்களுள் ஜனநாயகப்படுத்தல் எனும்போது நாம் எவற்றைக் குறிப்பிட முடியும், அவற்றை எவ்வாறு வரைவிடுவது என்பவை அத்தியா அவசியமான காரியங்கள் ஆகிவிடுகின்றன.
முதலில், எமது கட்டுரைகளில் நாம் முழுமையான-ஜனநாயகம் (அல்லது பூரண-ஜனநாயகம்) எனும் பதத்தை பிரயோகிப்பதை வாசகர்கள் அவதானித்திருப்பர். இவ்வழியில், ஜனநாயகம் எனும்போது நாம் முதலாளித்துவ-ஜனநாயகத்தை குறிப்பிடுகின்றோம் என்பதையும் அவர்கள் புரிந்திருப்பர். அப்படியானால் முழுமையான ஜனநாயகம் என்றால் என்ன?
பூரண-ஜனநாயகம்
“சமுதாய-உடமைகள் சார்ந்த உரிமைகளுடன், கூட்டாகவும் தனிமனிதனாகவும், தத்தமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வழிமுறைகளையும் அவற்றின் உத்தரவாதங்களையும் தன்னியக்கமாகக் கொண்ட ஸ்தாபனமயப்படுத்தலை பூரண-ஜனநாயகம் எனக் கொள்ளலாம்.”
பூரண-ஜனநாயகம் பற்றிய எமது வரையறுப்பு இதுவாக, அவற்றுள் அமைந்துள்ள சில பதங்களது விளக்கமும் அவசியம்.
சமுதாய-உடமைகள்: “தலைமுறைகளாக மனிதரது உழைப்பினால் உருவாக்கப்பட்டு பல நுகர்வுத் தன்மைகளிலும் பெறுமதி கொண்ட பொதுச் சொத்துக்கள் அவையாகும்.”
தலைமுறைகளது உழைப்பின்றி காட்டு நிலம் பயிர்நிலமாக மாறியிருக்குமா? நிலத்தின் கீழ் புதைந்து கிடைக்கும் தாதுப் பொருட்கள் புகையிரத வண்டிகளாகவும் அவை ஓடும் தண்டவாளங்களும் ஆகுமா?
தலைமுறைகளாக சேர்க்கும் அறிவின்றி, பதப்படுத்திய நிலங்களில் எவற்றைப் பயிரிடுவது என்பது எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்? தலைமுறைகளாக மனிதரது சிந்தனைகளின் தொடர்பில் விளையும் அறிவு இல்லாவிடில், இன்றைய விஞ்ஞான தொழி-நுட்பங்கள் என அழைக்கப்படும் மனிதனது கைங்காரியம் எப்படி இடம்பெற்றிருக்க முடியும்?
பல நூற்றாண்டுகளாக மனிதரது சிந்தனை-முயற்சியும் உழைப்புமே, தலைமுறையாக அதன் சேகரிப்புமே எமது அறிவு என்பதையும், அவனது உழைப்பின்றி சடப் பொருட்கள் பயன்தரும் ஏதுக்கள் கருவிகள் வளங்களாக உருவாகி விடுவதில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். இவ்விடத்தில் தனிச் சொத்துப்பற்றிய வரைவைத் தரவேண்டியதும் எமது கடமை.
தனிச்-சொத்து: “மனிதன் தனதென்று கொள்வதெல்லாம், அவை அவன் கையில் இருக்கும்போது அவற்றில் ஏற்படக்கூடிய பாராமரிப்புக்கும் இயன்றால் முன்னேற்த்திற்காகவும், அவனது நுகர்வுக்கும், தற்காலிகமாக அவன்வசம் உள்ள சமுதாயத்தின் பொதுச் சொத்துகளேயாகும்.”
ஜனநாயகப்படுத்தல் எனும்போது முதலாவது கேள்வி எதனை? யாரை? என்பதே.
மகிந்தா ராஜபக்ஷா பதவி ஏறியமை ஜே.வி.பியினர் தமது உழைப்பைக் கொட்டியதாலா, அல்லது புலிகள் தமது மக்களது வாக்குகளைப் பறித்தமையாலா என்ற கேள்விகளில்தான் தங்கியிருக்குமாயின், எமது சமூகம் பொருளாதாரம் இலட்சியச்-சரித்திரம் சர்வதேசிய நிலைப்பாடு என்பவை பற்றிய அறிவோ தெளிவோ அவசியம் அற்றவை ஆகிவிடும்.
சரித்திரத்தை வெறும் கதையாக (narrative), தனிமனிதரது அல்லது குழுக்களது நடத்தைகளுடாக அவதானித்து, அதன் முக்கிய பாகங்களை அந்நடத்தைகளின் விளைவுகளாகக் கற்பிப்பதையே சரித்திரமாக ஏற்று இயங்குபவர்களே மேலதிகமானவர்கள். இது காலம் கடந்த, சரித்தித்தைக் கணிப்பது பற்றிய விஞ்ஞான வளர்ச்சியை அறியாத வழி, என்பவற்றிலும் பார்க்க இது தவறான வழி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட வழி என்பதே முக்கியமான விடயம்.
மாற்றாக, தனிமனிதரையும் குழுக்களையும் சரித்திரத்தின் விளைவுப் பொருட்களாகவும், அதனுடன் ஒட்டி-உராயும் (interacting) அதன் அங்கங்களாகவும் கொண்டு “மூலதனத்தை உழைப்பவர் யார் – அதனைச் சேமிப்பவர் யார்” என்ற அடிப்படைக் கேள்வியுடன் நிகழ்வுகளைக் கணிப்பீடு செய்வதை இலட்சியச்-சரித்திரம் (objective-history) என்பர்.
ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சியின் முன்னர் இலங்கைத் தீவு நிம்மதியான வாழ்வில் இருந்தது. அதுவரை படு-கொலைகளை அறியாத மக்களும், குறிப்பாக இளைஞர்களும், பாதுகாப்புத் துறையினரும் கொடூரமான மனிதர்களாக மாறினர். வன்முறையை இலங்கையர் வாழ்வில் அவர்கள் புகுத்திய பின்னரே நாடு பாழாகத் தொடங்கியது. இவ்வாறான வன்முறைபற்றிய சரித்திரக் கதை சொல்லபவர்கள் உண்டு. அதுபோலவே, புலிகள் தோன்றியதாலேயே தமிழ் பேசுவோர் வன்முறையை அநுபவிக்க நேரிட்டது என அதே கதை சொல்பவர்களும் உண்டு.
ஆனால், இவை சில சம்பவங்களை தெட்டங்களாகத் தொடர்புபடுத்தும் காரியங்களே அன்றி இலட்சியச்-சரித்திரமல்ல. ஜே.வி.பி அல்லது புலிகள் எக்காரணிகளின் வழித்தோன்றல்கள்? ஆகாயத்திலிருந்து குதித்தார்களா? அவற்றின் தலைவர்கள் விஜய்வீரா, பிரபாகரன் போன்றோரை எவ்வாறான சூழ்நிலைகள் பெற்றுத் தந்தன? அவற்றிலும் மேலாக, அரசியலில் வன்முறை வழி ஈடுபடுவதற்கான காரணிகள் என்ன? என்றவாறான கேள்விகளுக்கோ சிந்தனைக்கோ சம்பவங்களுக்கு காரணம் கூறும் சரித்திரத்தில் அமைப்பு-ரீதியில் (structural) இடமில்லை என்பது தெளிவு.
பாக்கிஸ்தான்-மயப்படல்
“மக்களது அதிகாரங்கள் ஆளுமைகளுக்கு அப்பாற்பட்ட, அவர்களது அபிலாசைகளின் வரைவுகளுள் இல்லாத, உள்ளார் வெளியார் ஸ்தாபனங்களது அதிகாரப் போட்டிகளிடையே அகப்பட்டும் அவைமீது தங்கியும் உள்ள அரசுகள், அவற்றின் ஸ்தாபனங்கள் யாவும் பாக்கிஸ்தான்-மயப்படுத்தலுக்கு உட்பட்டவை எனலாம்”.
இலங்கைத் தீவின் வாழ்வும் இவ்வகையுள் நழுவிக் கொண்டுள்ளது என்ற கணிப்பது பொருத்தமானதா?
பாக்கிஸ்தான் பல மொழி பேசும் சமூகங்களைக் கொண்டு மதம் என்ற பொது உணர்வில் இயற்றப்பட்ட பிரதேச-அமைப்பு (geographical entity). அதன் பிரதேசம் குறிப்பாக சிந்து, பஞ்சாபி, காஸ்மீரி மக்களது சமூகச் சொத்துக்களின் பாகப் பிரிவுகளால் ஏற்படுத்தப்பட்டது. அதன் மக்கள் காலாகாலமாக அங்கு வாழ்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் எஞ்சியவர்களதும் இந்தியா என இன்று அழைக்கப்படும் பிரதேசங்களிலிருந்து வெளியேறியவர்களையும் கொண்ட சமூகக் கூட்டங்களாகும். அதனது, ஆளுமை மக்களது மத-அடையாளத்திலும், இந்தியாவுடனான சரித்தரக் குரோதங்களாலும், தன்உணர்வாகிவிட்ட பலவீனங்களாலும் வரைவு செய்யப்பட்டு, அதன்படி அமைந்த வெளிநாட்டு உறவுகளால் நிச்சயிக்கப்படுவது.
மதத்தின் பெயரில் அமைந்த அதிகார-அமைப்பினுள் தமது அதிகாரப் பங்கை நிலைநாட்டிக் கொள்ள இஸ்லாமிய மத-முதலாளிகள் முன்வருவதை எதிர்பாரக்க வேண்டியதே. ஆனால், இந்தியாவுடனான சரித்திரச் சர்ச்சைகள் போர்களாகவும் அவையே அதனது அடையாத்தின் பெரும் பகுதியை வழங்குவதாலும் பாக்கிஸ்தானிய இராணுவம் அதனது அதிகாரப் பங்கு போடுவதில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. மேலும், இப்பிரதேசத்தின் விளை நிலங்களை தமதாக்கிக் கொண்ட பத்து அல்லது பதினிரண்டு முதற்-குடும்பங்கள் (oligarchs) தமது அதிகாரப்-பங்கினைக் கோருவதும் தர்க்கமாகிறது. எனவே, இஸ்லாமிய மத-முதலாளிகள், இராணுவம், முதற்-குடும்பங்கள் ஆகியவை மூன்றுமே பாக்கிஸ்தானின் மக்களை ஆழும் அரசியல்-ஸ்தாபனங்களது மூலங்களாகி, அதன் அதிகாரத்துக்கான போட்டியில் ஈடுபட வேண்டியவையும் ஆகின.
ஆரம்ப காலங்களில் தமது மதம் சார்ந்த விடயங்கள் கருதி, அவைக்கேற்ப்ப தம்மை முதற்-குடும்பங்களுடனோ அல்லது இராணுவத்துடனோ பக்கம் சார்ந்து கொண்டனர் மத-முதலாளிகள். எனவே, அவர்கள் முதற்-குடும்பங்களின் பக்கமாகும்போது ஜனநாயகம் என்ற பெயரில் பாராளுமன்ற நாடகங்களையும், இரணுவம் பக்கம் சாயும் போது இராணுவ-சர்வாதிகாரப் பலவான்களது நடனங்களையும் காணலாம். அண்மைக் காலங்களில் இஸ்லாமிய மத-முதலாளிகள் தமது தொகுதி மீதான ஆளுமையை இழக்கத் தொடங்கியமையையும் அது தலிபான்மயப்படல் (Talibanisation) என்ற மதவழிப் போக்குள் அகப்பட்டதும், அதனால் தன்னுள் பல வகைகளில் பிளவுற்றமையும் நாம் அறிவோம். இவற்றினால், வழமைப்பட்ட அரசியற் அதிகாரப் போட்டியில் இஸ்லாமிய அணி வலுவிழந்தது போல காணப்பட்டாலும், மாற்று அரசியல் அதிகாரக்-கட்டு (alternative power centres / referred to as non-state actors) என்றவாக்கில் மிக்க வலிமை பெற்றதையும் அவதானித்து இருப்போம். இவற்றுடன் பாக்கிஸ்தானிய அரசாங்கம் தனது அரசியல் இறைமையை பகிர்ந்து கொள்ள முன்வந்தமையையும் அறிவோம்.
அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாகினும் அதனது பிரதேசத்துள் அமரிக்கா இராணுவப் பிரவேசம் செய்வதை பாக்கிஸ்தான் தடுக்கமுடியாது உள்ளது. அதனது வடக்குப் பிரதேசத்தில் உள்ள அவ்ப்கனிஸ்தானில் NATO நாடுகளால் நடத்தப்படும் போரில் அதனது பங்கு தனது பாதுகாப்பு அல்லது எதிர்பார்புகளுக்காகவன்றி மேல்நாட்டாரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாகவே உள்ளது.
இவற்றினால், தன்நாட்டில் தனக்கேற்ற வழிகளில் தனது உள்நாட்டு அல்லது பிரதேசப் பிரச்சனைகளை தீரக்க முடியாது, அவற்றிக்கு எதிரான பலமான புறக்காரணிகளால் பாக்கிஸ்தான் அரசாங்கம் தனது-தலிபானுடன் படையெடுப்புப் போர் நடத்தியதையும் கண்டிருப்போம். இப்புறக் காரணிகள் இராணுவத்தையும் முதற்-குடும்பங்களது அரசியற் அமைப்புகளையும் ஒன்றாக்கிட முனைவதையும் ‘அரசினைப்’ (state) பலப்படுத்தும் வேலைத் திட்டத்தில் அவற்றினை ஈடுபடுத்த நிர்ப்பந்திப்பதையும் நாம் அவதானித்திருப்போம். இவாறான புறக் காரணிகளின் விளைவுகளுடன் பாக்கிஸ்தானின் சமூக-பொருளாதார, சமூக-அரசியற் புள்ளி விபரங்களையும் சேர்த்துப் பார்க்கும் போது அதனை ஒரு தூர்ந்து போன அரசு (failed state) எனக் கணிப்பது சரியானதே.
இலங்கைத் தீவில் உள்ள நிலைமைகள் என்ன? மேற் குறிப்பிட்டவை யாவும் சிறீலங்காவிற்கும் பொருந்துமா? சிறீலங்கா பாக்கிஸ்தான்-மயப்படலில் உள்ளாகிவிட்டதா?
சிறீலங்காவின் சமுதாய-வீழ்ச்சி புலிகளுடனோ ஜே.வி.பியினருடனனோ ஆரம்பமாகவில்லை. பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற முன்னரே அதற்கான அத்திவாரம் அங்கிருந்தது. சமுதாயங்களின் கீளோட்டங்களாக இருந்த பல மக்கள்-விரோத மனிதாபிமான-விரோத வழக்குகள், நியதிகள், உறவுகள் ஆக இவை இருந்த போதும், கலாச்சார-வெளிப்பாடுகளால் மறைக்கப்பட்டு இருந்தன.
பாக்கிஸ்தான் போலவே இலங்கைத் தீவும் (சிங்கள தமிழ்பேசும்) பல சமுதாயங்களைக் கொண்ட அன்னியர்களால் வரையப்பட்டு நிறுவப்பட்ட நாடு. பாக்கிஸ்தானில் நிர்ப்பந்தமான புதிய இயங்கில் உறவுகள்; பல சமூகங்களை கொண்டதாக இருக்கும் போது, இலங்கையிலோ அது இரு சமூகங்களிடையே உள்ள உறவில் தங்கியதால் உருவத்தில் வேறாகிறது. பாக்கிஸ்தானை ஒன்றுபடுத்தும் ஸ்தாபனங்களாக மதமும் இராணுவமும் முன் வைக்கப்பட்டது, ஆனால் இலங்கையிலோ அவை மக்களைப் பிரிவுபடுத்தும் ஸ்தாபனங்களாகவே முன்னெடுக்கப்பட்டன. பாக்கிஸ்தான் நடைமுறை ரீதியில் பஞ்சாபி இனத்தவரின் கைகளில் இருப்பதாக அவதானிக்கப்படும் போதிலும், பௌத்த-சிங்களச் சித்தாந்தம் இலங்கையை தனதெனக் கோருவது போல பஞ்சாபியரிடம் ஒரு சித்தாந்தம் இல்லை. ஆயினும், மத ரீதியில் ஒரு நாட்டினை, அதன் மக்களை அடையாளம் காண்பது என்பதில் இவ்விரு நாடுகளும் ஒப்பிடக் கூடியவை. ஆகவே, அதனை பாக்கிஸ்தானிய மயப்படல் என்பதற்கான அத்திவாரமாகக் கொள்வது தப்பல்ல.
பாரளுமன்ற அரசு என்பதில் இலங்கை பாக்கிஸ்தானிலும் வேறுபட்டதாகினும், பாராளுமன்றங்கள் சர்வாதிகாரங்களின் கரங்களாகின. இலங்கையில் அது பெரும்பான்மையோரின் பேரில் சோவனிசவாதிகளது, அதாவது மத – குட்டி முதலாளித்துவர் கூட்டின் கைகளிலும் பாக்கிஸ்தானில் அது இராணுவம்-இஸ்லாமியவாதிகள்-முதற் குடும்பங்களின் சர்வாதிகாரமுமானது. அண்மைக்காலம்வரை இலங்கையில் இராணுவம் பாரளுமன்ற அரசியலில் நேரடித்தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும் அந்நிலையில் உள்ள மாற்றங்களையும் அவதானிப்போர் அதனையே இலங்கை பாக்கிஸ்தானிய மயப்படுகிறது என்பதற்கு முதலாவது சான்றாக கூறுவர்.
தனது மக்கள் மீது ஏதாவது காரணங்களுடன் முப்படை கொண்ட போரை நடத்துவதிலும் இவ்விரு நாடுகள் ஒன்றுபடுவதால், இது பாக்கிஸ்தானிய மயப்படலின் இரண்டாவது சான்றாகக் கணிக்கப்படும். நாட்டைக் காப்பாற்றுவது என்றவாறு அதிகார வர்க்கங்கள் படுகொலைகள் நடத்தாத நாடுகள் எங்கும் இல்லை, ஆனால் அவை யாவும் முப்படை கொண்ட போர் தொடுப்புக்களால் ஏற்படுபவை அல்ல. மேலும், இந்நிகழ்வுகள் காலத்தின் பேரில் எடை போடப்படும் போது பிரத்தியேகமானவை என்பதும் கவனிக்க வேண்டியது. அதாவது, 200 வருடங்களின் முன்னர் இடம் பெற்ற அமரிக்காவின் உள்நாட்டுப்போரை, ஐ.நா, ஜெனீவா ஒப்பந்தங்கள் என்ற சர்வதேசிய ஸ்தாபன மயப்படுதல்களின் பின்னர் இன்று இலங்கையில் பாக்கிஸ்தானில் இடம்பெற்ற முப்படைப் போர்களுடன் ஒப்பீடு செய்வது பொருத்தமற்ற போலிவாதம் என்கிறோம்.
மக்களது கூட்டுப் பாதுகாப்பு நாட்டின் பேரில் நிராகரிப்பதற்கு, இந்நாடுகள் பதுகாப்பு என்ற நியாயப்படுத்தலை முன்வைக்கும் போதிலும், நடைமுறையில் தனிமனிதரின் பாதுகாப்பு துச்சமாக்குவதையே காண்கிறோம். வெள்ளை வான்கள் மக்களது பாதுகாப்பிற்காக ஓடித் திரிவதில்லை என்பதும், மக்கள் காணாது போவதும், அரச-நிர்வாக ஸ்தாபனங்கள் நேரடியாகவே தமது மக்கள் மேல் இரகசியப் போர் நடத்துவதற்கான அத்தாட்சிகளும் இருப்பதனால், இந் நிலைப்பாடு இலங்கையின் பாக்கிஸ்தான்-மயப்படுதலுக்கு மூன்றாவது சான்றாகிறது.
பல பின் தங்கிய நாடுகளில், (1) அரசு-மக்கள் (2) ஆளுமை-அதிகாரம் என்பவற்றின் உறவுகளில் உள்ள குழப்பங்கள் ஒரு புறத்திலும், (3) உற்பத்தி உறவுகள்-மூலதனம் என்பவற்றின் இடையேயான சச்சரவுகள் மறு புறத்திலும் பினைந்த குழப்பவாத நிலைகளைப் பிறப்பிக்கின்றன. இதனால் பல நாடுகளிலால் அந்நியத் தலையீடுகள் என்பது தவிர்க்க முடியாது போய்விடுகிறது. ஆனால், மேற்படியான மூன்றில் ஏதாவது இரண்டின் சீர் அமைப்பால் இத் தலையீடுகளின் விசையினை குறைத்துக் கொள்ள முயலும் நாடுகளே பெரும்பாலானவை. ஆனால், இம்மூன்று விடயங்களின் குளப்ப நிலையைக் கடைப் பிடிப்பதாலேயே தமது அதிகாரத்தை நீடிக்கலாம் என்றவாறு இலங்கை அரசின் நிலைப்பாடுகள் அமைவது அதனது பாக்கிஸ்தான்-மயப்படலுக்கு நான்காவது சான்றாகிறது.
இலங்கையின் உள்நாட்டுப் போர்கள், கிளர்ச்சிகள், இனக் கலவரங்கள் காலத்துக்குக் காலம் (periodically) இடம் பெறுவதால், அவை நாட்டின் புத்தி-ஜீவிகள், கல்விமான்கள், திறமை பெற்றவர்கள் (skilled people) போன்ற மனித வளத்தின் வெளியேற்றக் காலமாக அமைவதும் வழக்கமாகிவிட்டது. தன்னிசையில் பொருள்வளம் தேடி புகலிடம் தேடுபவர் எப்போதும் உள்ள போதிலும், இப்போக்கினை ஒரு சாதாரண மக்களது நடவடிக்கை ஆக்கிவிடுவது மேற்குறிப்பிட்டவை போன்ற சமுதாய-அசம்பாவிதங்களே. இவ்வகையில், மனித வளங்களை இழப்பதில் ஒற்றுமை காண்பதால் பாக்கிஸ்தான்-மயப்படல் என்தற்கு இது ஐந்தாவது சான்றாகிறது.
எனவே, ஜனநாயக மயப்படுத்தல் எனும்போது நாம் இலங்கை பூரான ஜனநாயகம் பற்றிக் கருத வேண்டும் என்பது தெளிவாகிறது.
சமுதாய-மாற்றங்கள்
இலங்கையின் பொருளாதாரம் கடந்த 30 ஆண்டுகளில் தனது உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டிலும் அடியொட்டிய மாற்றங்களைக் கண்டுள்ளது. இவைபற்றிய புள்ளி விபரங்களுடனான ஆய்வினை இன்னுமொரு காலத்தில் தர விளைகிறோம். ஆனால், சமுதாயங்களின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களையும் அவற்றிக்கான சில காரணிகளையும் அவதானிப்புகளாகத் தர வேண்டியது இவ்விடத்தில் அவசியமாகிறது.
காலனித்துவ காலத்தில் பெருந் தோட்ட ஏற்றுமதிப் பொருட்களில் தனது 90% மேலான அந்நிய வருமானத்தை பெற்றது. இன்று அவை தரும் அந்நிய செலவாணியிலும் பார்க்க வெளிநாடுகளில் வீட்டு-வேலைக்காரர்காளாக பணியாற்றும் பெண்கள், கட்டிடத் துறையின் தொழிலாளிகள் போன்றோரது உழைப்பினால் பெறும் வருவாய் மேலாகிவிட்டது. இவர்களைப் போல விசேட-பொருளாதார-வலையங்களுள் அடிமை ஊழியத்தில் தொழில் செய்வோர் தொகையும் அதிகரித்துள்ளது. மேற்கு மாகாணமும் அதனை அண்டிய பகுதிகளும் வெளிநாட்டுப் பணத்தின் உள்வரவால் வளர்ச்சி கண்டதாக உள்ளன.
மேலும், வேலை தேடுவோர்களில் 15% மேலானோர் அரச பாதுகாப்புத் துறையில் தமது ஊழியத்திற்கு தங்கி உள்ளனர்.
மாகாண ரீதியில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரித்ததில் இருந்து பிராந்திய மக்கள் அறிவு திறமை (skills) போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர். இவ்வாய்ப்பு வடகிழக்கில் நடந்த போரினால் அங்கு வாழ்பவர்க்கு பூரணமான தொடர்ந்த பலனைத் தரமுடியாது போகிலும், அவர்களின் சமுதாயங்களின் இடையான உறவுகளின் விதிகளை ஓரளவு மாற்றி அமைக்க உதவி உள்ளது. மலையகத்துத் தமிழர்களிடம் இன்று கல்விவளமும், அதனை ஒட்டிய தன்நம்பிக்கையும் சுயஉணர்வும், வளர்ந்து உள்ளன. அதனால், தமது கொத்தடிமை வேலைகளை விட்டகன்று பட்டினியாகினும் சுயவாழ்வு தேடும் முனைப்புக் கொண்ட தன்மை அவர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளதைக் காணலாம். நாடு பூரான மக்களது வறுமைக்-கோட்டு விகிதாசாரத்தில் 6% முன்னேற்றம் உள்ளபோது மலையகத்தில்மட்டும் 56% பின்னடைவு ஏற்பட்டு உள்ளமைக்கான காரணிகள்பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டிய போதிலும் இளம் சந்ததியினரது நகரப்புற வெளியேற்றமும் அவற்றுள் ஒன்றாகும் எனக் கூறுவதில் தவறில்லை.
தமிழர் மீது சிறீலங்கா நடத்திய போரினாலும், புலிகளால் நடத்தப்பட்ட ஈழப் போர்களினாலும், அவற்றினாலான தாக்கங்களாலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் பாரிய சமுதாய மாற்றங்களை அடைந்து உள்ளனர். பல இலட்சக்கணக்கான தமிழர்களது வெளியகற்றல் அங்கே பல ஊர்களை, சிறு நகரங்களையே அளித்துள்ளன. எனவே, அதே அளவிலான தாக்கத்தை இம்மாநிலங்களின் பொருளாதாரத்தில் காண்பது ஆச்சரியமானதல்ல. ஆண்-பெண் வயோதிபர்-இளையவர் கற்றோர்-கல்வி இழந்தோர் என்ற சகலதுறைகளிலும் மனதவளத்தின் வீழ்ச்சி ஒரு புறத்திலும், மேற்கத்தைய நாடுகளில் புகல்களாகி அங்கு முன்னேற்றம் கண்டவரது தொடர்புகள் மறுபுறத்திலும் ஊக்கு சக்திகளாக அமைய இங்குள்ளவர் மனோவியல் ரீதியில் தமது எதிர்பார்புகளில் பலபடிகளை ஒரே வீச்சில் தாண்டி உள்ளனர்.
இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பதில் உள்ள பிளறுகள், அதிலும், பிராந்திய ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் ஒரு புறத்தில் கணக்கில் கொள்ப்பட வேண்டியவை. மேலும், அவ்வகைப்பட்ட வளர்ச்சியால் அதன் மக்களது வளர்ச்சி அங்குள்ள ஏற்றத்தாழ்வுகள் என்பன பிறம்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை.
இவ்வகையில் மனித-வளங்களையும் மனிதத்தின்-வளர்ச்சியையும் கணிப்பிட்டு அவைசார்பில் போராடுவது என்பதே எமது வாழ்கையின் அடிப்படை வாதம். எனவேதான் சமுதாய-ஜனநாயகம் (social-democracy) சமூக-ஜனநாயகம் (peoples-democracy) பற்றிய கவனம் எமக்கு அவசியமாகிறது.
தமிழ் பேசும் மக்களது ஜனநாயகம்
ஜனநாயகம் என்பதை ஒரு நாட்டின் அரசில்-அதிகாரத்தினைக் கைப்பற்றும் அரசியல்-வழியாக நாம் கருதுவதால் அதனை ஒரு ஸ்தாபனத்தின் பொறுப்பு என்றவாறே செயற்படுகின்றோம். அதாவது, குடும்பத்துள்ளேயோ, மற்றைய மனிதர்களுடனா உறவுகளின் செயற்பாடுகளின்போதோ பாவனையில் கொள்ள வேண்டியதில்லை என்பதை உணர்வு.
மேலும், ஜனநாயகம் என்பதை வெற்று அரசியல் நடத்தையாக, சமுதாய-சிந்தையற்ற பொருளாதார நடைமுறைகளை ஊர்ஜிதம் செய்யும் கருவியாகக் கருதும் வழக்கே உலகெங்கும் உள்ளதால், இலங்கையோ அங்குள்ள சமுதாயங்களோ அதன் தாக்கங்களுள் அகப்படாது போக முடியாது. ஆனால், அந்நிலைப்பாட்டினையே நியதி என ஏற்றுக் கொள்வதில், அவற்றினை ‘கடவுளின்’ உத்தரவுகளாக செயற்படுத்துவதில் உள்ள ஆர்வங்களிலேயே முன்னேற்றகரமான சமூகங்கள் வேறுபடுகின்றன.
ஆதலால்,
(1) சாதியம் என்பதை மக்களது அடிப்டையான ஜனநாயகப் பிரச்சனையாகக் கருதுவதில்லை.
(2) எம்மிடையே சொந்த நிலமற்று, நீக்கல் கூரை கொண்ட குடில்களுள், குனிந்து வளைந்து தலைமுறைகளாக சீவனம் நடத்துபவர்களது ஜனநாயக உடமைகள் பற்றிய சிந்தனைகளும் இருப்பதில்லை.
(3) பிராந்தியங்களாக வேறுபடும் எமது சமுதாயங்களது சமுதாய-பொருளாதார நிலைகள் பற்றியோ அவர்களது அபிலாசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதும், அவையும் ஜனநாயகம் என்ற நடைமுறைகளுக்கு உள்ளேயே அடங்குகின்றன என்பதையும் அவதானிப்பதில்லை.
(4) மொழிவாரி இன அடிப்படையிலான ஒடுக்கு முறைகளுள் அடக்கப்பட்டு விட்டதால், மாற்று இன மக்களது ஜனநாயக உடமைப் பிரச்சனைகளை எம்முடன் இணைத்துப் பார்ப்பதும் இல்லை.
(5) பெண்களும் ஆண்களைப் போன்றே சகல ஜனநாயக உடமைகளுக்கும் உரித்தானவர்கள் என ஏற்றுக் கொள்வதில்லை.
(6) சிறுவர்களுக்கும் ஜனநாயக உரித்துகள் உண்டு என்பதை அறிந்ததும் இல்லை.
தழிழ் பேசும் சமுதாயங்கள் பிறம்பான இனங்களா? தேசங்களா? என்ற விவாதங்களின் காரம் சிறிது சிறிதாக அற்றுப்போக, அவை தமது ஒன்றுபட்ட பொதுப்பட்ட ‘தேசத்துவத்தை’ (statehood) நோக்கிய தேடல் அவசியமா என்ற வாதம் மேலோங்க, எமது கரிசனமோ அவர்களிடையேயும் அவர் மத்தியிலும் இடம்பெற வேண்டிய ஜனநாயக மயப்படுத்தல் பற்றியதாக அமைய வேண்டும் என்பது திண்ணம்.
சுருங்கக் கூறின்:
ஜனநாயக மயப்படுத்தல் என்பது,
(1) இலங்கையின்,
(2) சமூக, சமுதாய-பொருளாதாரத்தின்,
(3) தமிழ் பேசும் சமுதாயங்களின்,
பேரில் இடம்பெற வேண்டிய நடத்தைகள் செயற்பாடுகள் பற்றியவை என்கிறோம்.
இவற்றினை எப்படிச் சாதிப்பது, எவ்வாறான அணுகுமுறைகளைக் கொள்வது, அவை எவ்வாறான தத்துவார்த்த சித்தாந்தங்களில் தளம் கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் ஒரு வாய்ப்புக் கிட்டும் போது அவதானிப்போம்.
பின் குறிப்பு:
இக் கட்டுரையின் சாராம்சம் கடந்த சனிக்கிழமை- புரட்டாசி 02 Eastham இல் இடம்பெற்ற குறைந்தபட்ச புரிந்துணர்வு ஏற்பாட்டுச் செயற்குழுவின் கருத்துகளுக்கு உள்ளாக்கப்பட்டது என்பதை வாசகர்களுக்கு அறியத்தர வேண்டும்.
நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary- ASATiC
10 புரட்டாசி 2009