08

08

சிறிலங்காத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற பத்திரிகையாளர்கள் கைது

img080909.jpgதமிழ் பத்திரிகையாளர் ஜே.எஸ். திசைநாயகத்தை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டித்து சிறையில் அடைத்துள்ள சிறிலங்கா அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், சிறிலங்காத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்றுபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க அவர்கள் மீது போர் தொடுத்த சிறிலங்க அரசு, முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கு உணவு கூட கொடுக்காமல், உணவையே போர் கருவியாக்கி தமிழர்களை ஒடுக்குகிறது என்று பத்திரிக்கையாளர் திசைநாயகம் எழுதினார். இதற்காக அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து 20 ஆண்டுக் கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திசைநாயகத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரவீந்திர தாஸ் தலைமையில் சென்னையிலுள்ள சிறிலங்காத் துணைத் தூதரகம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன், துணைச் செயலர் சி.மகேந்திரன், இலட்சியத் திமுக தலைவர் டி. இராஜேந்தர், சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் செளந்தரராசன், பத்திரிக்கையாளர்கள் பாஸ்கரன், அய்யநாதன் ஆகியோர் சிறிலங்க அரசின் மனித உரிமை மீறல்களையும், பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அது மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் கண்டித்துப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமிழர்களை இனப் படுகொலை செய்துவரும் ராஜபக்ச அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பிக் கொண்டே பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிறிலங்கத் துணைத் தூதரகத்தை நோக்கி முன்னேறினர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ராஜபக்ச அரசைக் கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.

அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பத்திரிகையாளர்களை காவல் துறை வாகனங்களில் ஏற்றிச் சென்று தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் தங்க வைத்தனர்..

டி. இராஜேந்தர், பாஸ்கரன், பாஸ்கர தாஸ் ஆகியோர் உட்பட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

நன்றி ;வெப்துனியா

கதிர்காமர் கொலை வழக்கு : பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்களை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

00000court.jpgமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை வழக்கில் அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகநாதன் சிவசங்கர் ஆகிய இருவரும் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டமையினால் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு இன்று உயர் நீதி மன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பு காவல் கைதிகள் காணாமல் போனவர்கள் தொடர்பில் கொழும்பில் அடுத்த வாரம் மாநாடு – மனோ கணேசன்

mono.jpgபோர் ஓய்வுக்கு வந்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக தடுப்பு காவலிலே வைக்கபபட்டுள்ள கைதிகள் மற்றும் கடந்த மூன்று வருடங்களிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தொடர்பில் உரிய தீர்வுகளை காணவேண்டிய வேளை வந்துள்ளது.

இந்த இரண்டு தரப்பினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு காவல் கைதிகள் ஆகியோரது குடும்பத்தவர்களை அழைத்து கொழும்பிலே ஒரு மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஏற்பாட்டாளர் மனோகணேசனும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனருத்தாபன பயிற்சி வழங்கப்படுகின்றது. அதேபோல் வடக்கில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களது மீள் குடியேற்றம் இன்று முதன்மை பிரச்சினையாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் இதே காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்ட நிலையில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளினதும், காணாமல் போனவர்களினதும் பிரச்சினைகளை நமது சமூகம் மறந்து விட முடியாது. வெளியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் கைதிகளுக்கும், காணாமல் போனவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 

“சனல் – 4” புதிய வீடியோப்படங்கள் – துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்

sanal4_uk.jpgவன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘சனல் – 4’ தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது.

கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது.
 
வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார காலத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  மழை காலம் தொடங்கியிருப்பதால் இந்த முகாம்களின் நிலைமை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் இந்த காணொலி வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்-ஜே.வி.பி. யின் செயலாளர் அறிவிப்பு

நிறைவேற்று ஜனாதிபதி முறையினை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி இன்று முதல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்த செயற்றிட்டம் விரைவில் பொது மக்களின் போராட்டமாக மாறும் என்று ஜே.வி.பி. யின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிராக ஜே.வி.பி.யினரால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கையில் தற்போது ஜனநாயகம் தொடர்பில் பல்வேறு வகையான கேள்விகள் எழுந்துள்ளது. சகல தரப்பினரது செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தக் கூடியவாறு அதிகாரம் ஒரு இடத்தில் மையப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவது மிகவும் ஆபத்தான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

தற்போது காணப்படும் நடைமுறை அரசியலும் அவ்வாறானதாகவே காணப்படுகின்றது. நாட்டை ஜனநாயக சூழலில் தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரம் தடையாகவே உள்ளது. எனவே தான் இம்முøறக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றுக்கு ஜே.வி.பி. செல்கின்றது. எதிர்வரும் நாட்களில் பொதுமக்களுடன் இணைந்து பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

4 மாவட்ட செயலகங்களுக்கு சர்வதேச தரச்சான்றிதழ்:

slpr080909.jpgபுது மாத்தளனில் இறுதி வெடிச் சத்தம் பயங்கரவாத ஒழிப்பின் வெற்றியை நிர்ணயித்தது போல சிறந்த அரச துறையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குக் கிடைத்த முதல் வெற்றியே நான்கு மாவட்டச் செயலகங்களுக்கும் கிடைத்த சர்வதேசத் தரச் சான்றிதழென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐ. எஸ். ஓ- 9001 சர்வதேச தரச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ள கண்டி, குருநாகல், மாத்தறை, காலி மாவட்டச் செயலகங்கள் சார்பில் அம் மாவட்டச் செயலர்களை வாழ்த்தி விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றதுடன் அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த காலங்களில் அரச நிர்வாகத்தின் ஒரு பகுதி அரசாங்கத்திடமும் மறுபகுதி பிரபாகரனிடமும் இருந்தது. இங்கு வந்தால் எமது அரச அதிகாரியாகச் செயற்படுபவர்கள் அங்கு சென்று பிரபாகரனின் வழி நடத்தலைச் செயற்படுத்துவோராக இருந்த காலம் ஒன்றிருந்தது.

அந்நிலைக்கு தற்போது முடிவுகட்டப்பட்டுள்ளதுடன் முழுநாட்டிலும் அரச நிர்வாகம் அரசாங்கத்திடமே தற்போதுள்ளது. அரச சேவையை மட்டுப்படுத்தி அரச துறைகளைத் தனியாருக்கு வழங்கிய கடந்த கால ஆட்சியாளர்களின் அரச துறையை வீழ்ச்சியடையச் செய்வதிலேயே கருத்தாகச் செயற்பட்டனர்.

நாம் நாட்டைப் பற்றி புதிதாகச் சிந்தித்ததன் பிரதிபலனே இந்த சர்வதேச தரச்சான்றிதழ். கடந்த காலங்களில் எமது நாட்டைச் சிலர் தோல்வியுற்ற நாடாக வர்ணித்தனர். இதற்குக் காரணம் வெல்ல முடியாத யுத்தமும் ஒழுங்கற்ற அரச சேவையும் தான்.

இன்று நாடு பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றிகண்டு இரண்டாவது நடையான அரச துறை வீழ்ச்சியையும் வெற்றிகொண்டு சர்வதேச சான்றிதழ் பெறும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அன்று யுத்தம் புரிந்த அதே படையினரே எமது தலைமைத்துவத்தின் கீழும் யுத்தம் புரிந்தனர்.

எனினும் அன்று தலைமைத்துவம் வழங்கியவர்கள் பிரபாகரனோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவருடன் கைகோர்த்துச் செயற்பட்டவர்கள். நாமோ பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி அதனை வெற்றிகொண்டுள்ளோம்.

தலைமைத்துவம் வழங்கும் நாம் முன்னேறிச் செல்லும்படி பணித்தால் படையினர் முன்னேறிச் செல்வார்கள். நாம் பின்னே வரச்சொன்னால் பின்னடைவே கிட்டும். இதற்கான பொறுப்பு தலைமைத்துவத்திடமே உள்ளது. யுத்தத்தை வென்றமை போன்றே நாம் சிறந்த அரச சேவையைக் கட்டியெழுப்புவதிலும் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறோம். அரச ஊழியர்கள் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குதல் அவசியம்.

12 லட்சத்துக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம் பொது மக்களின் வரியிலிருந்தே வழங்கப்படுகிறது. அதனால் கண்ணீருடன், பிரச்சினைகளுடன் வரும் மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டியது அரச ஊழியர்களின் பொறுப்பாகும். இந்த சவாலை வெல்வது அவசியம்.

இத்தகைய சர்வதேச தரச் சான்றிதழ்கள் தனியார் துறை நிறுவனங்களுக்கே வழங்கப்படுவது வழக்கம். அவர்கள் தமது வர்த்தகத்தின் இலாப நோக்கம் கருதியே அதனைச் செய்வர். அரச துறையினருக்கோ எல்லா நிலையிலும் குறைவில்லாமல் சம்பளம் கிடைக்கிறது.

அவர்கள் விரும்பினால் மக்களுக்கு நல்லதைச் செய்யலாம் விரும்பாவிட்டால் எதையும் செய்யலாம். எனினும் இன்று நல்லதைச் செய்கின்ற மனதுடன் அரச ஊழியர்கள் செயற்படும் காலம் உருவாகியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை விரைவில்!

ships000.jpgஇலங் கைக்கும்  இந்தியாவுக்குமிடையிலான பயணிகள் கப்பல் சேவையை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய கப்பல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சேவை தொடர்பான இறுதி அறிவுறுத்தலை மத்திய அரசாங்கத்திடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக கொச்சின் துறைமுக ஆணையக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கும் தென்னிந்திய கொச்சின் துலைமுகத்திற்கும் இடையேயான இந்த சேவையினை ஆரம்பிப்பது குறித்து சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டிலும் ஆராயப்பட்டது. இதனையடுத்தே தற்சமயம் இந்த சேவை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக கொச்சின் துறைமுக ஆணையக தலைவர் என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கப்பலில் வரும் பயணிகளை கையாள்வதற்கான சகல வசதி மற்றும் தரத்தையும் கொச்சின் துறைமுகம் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் ஏற்கனவே பல வெளிநாட்டு சிறிய மற்றும் நடுத்தர பயணிகள் கப்பல்கள் இந்த துறைமுகத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவித்தார்.  இலங்கையுடன் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் கப்பல் சேவைகள் போன்ற சேவைகள் அந்தமான் தீவுகளுடன் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் இந்திய இலங்கை வர்த்தக சமூகங்களுக்கிடையில் மேலும் நெருக்கமானதும் உறுதியானதுமான உறவுகளை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பம்! முதல் போட்டியில் இலங்கை வெற்றி

cricket_stadium.jpgஇலங்கை,  இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்குபற்றும் முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது போட்டி இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இச்சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு அணியும் ஏனைய இரு அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

‘கொம்பக்’ கிண்ணத்துக்கான இந்தச் சுற்றுத் தொடரில் இறுதி ஆட்டம் உட்பட மொத்தம் 4 போட்டிகள் நடைபெறவுள்ளன. சகல போட்டிகளும் ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டங்களாகவே இடம்பெறும்.

இத்தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகளிடையே 11ஆம் திகதியும் மூன்றாவது போட்டி இலங்கை-இந்திய அணிகளிடையே 12ஆம் திகதியும் இடம்பெறும். இறுதி ஆட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியபோதும் இரு அணிகளுக்குமிடையில் நடந்த இருபது ஓவர்களைக் கொண்ட இரண்டு ‘ருவன்டி-20’ போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றியீட்டியது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள இன்றைய முதலாவது ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாந்தீவு குஷ்டரோக வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து – 13 நோயாளிகள் விமானப்படையினரால் மீட்பு

மட்டக்களப்பு மாந்தீவுப் பகுதியில் அமைந்துள்ள குஷ்டரோக வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தை இலங்கை விமானப்படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வைத்தியசாலை மட்டக்களப்பு விமானப்படை முகாமிலிருநிது அரைக் கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. வைத்தியசாலையில் இருந்த 13 நோயாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களை இலங்கை விமானப்படை வீரர்கள் மும்முரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுக் காப்பாறினர்.

விமானப் படையின் 212 ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி தீ அணைக்கும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதையடுத்து நிலைமைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள முழுமையான சேத விபரம் இன்னும் மதிப்பிடப்படவில்லையெனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஒபாமாவுக்கு ஈரான் ஜனாதிபதி பதில்

அணு சக்தியை உற்பத்தி செய்வது ஈரானின் தார்மீக உரிமை. இந்த உரிமையை; விட்டு கொடுக்க தயாரில்லை என,  ஈரான் ஜனாதிபதி அகமது நிஜாத் தெரிவித்துள்ளார்.
 
ஈரான், அணு ஆயுதம் தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அஞ்சுகின்றன. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கேள்விப்பட்ட மேற்கத்திய நாடுகள், அந்நாட்டின் மீது கடந்த 2006ம் ஆண்டு முதல் பொருளாதார தடை விதித்துள்ளன.
 
ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்தி கொண்டால், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை விலக்கி கொள்வது குறித்து பரிசீலிப்போம்; இல்லாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்திருந்தார். அணு சக்தி உற்பத்தி என்பது ஈரானின் தார்மீக உரிமை. இந்த உரிமையை விட்டு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அமைதி பணிக்கு தான் அணு சக்தியை ஈரான் பயன்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகள் பயப்படுவது போல் நாங்கள் அணு ஆயுதம் எதையும் தயாரிக்கவில்லை.அணு ஆயுத பரவல் தடை,  அமைதி பணிக்கு அணு சக்தி என்ற விஷயத்தில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.

இந்த மாத இறுதியில் ஐ.நா., பொது சபையில் பேச வரும் போது,  அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று அகமது நிஜாத் மேலும் தெரிவித்துள்ளார்.