போர் ஓய்வுக்கு வந்துவிட்ட நிலையில் நீண்டகாலமாக தடுப்பு காவலிலே வைக்கபபட்டுள்ள கைதிகள் மற்றும் கடந்த மூன்று வருடங்களிலே கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர் தொடர்பில் உரிய தீர்வுகளை காணவேண்டிய வேளை வந்துள்ளது.
இந்த இரண்டு தரப்பினரின் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி புதன்கிழமை காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு காவல் கைதிகள் ஆகியோரது குடும்பத்தவர்களை அழைத்து கொழும்பிலே ஒரு மாநாட்டை நடத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளதாக குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவும், ஏற்பாட்டாளர் மனோகணேசனும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது.
கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனருத்தாபன பயிற்சி வழங்கப்படுகின்றது. அதேபோல் வடக்கில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர்களது மீள் குடியேற்றம் இன்று முதன்மை பிரச்சினையாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் இதே காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்ட நிலையில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளினதும், காணாமல் போனவர்களினதும் பிரச்சினைகளை நமது சமூகம் மறந்து விட முடியாது. வெளியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் கைதிகளுக்கும், காணாமல் போனவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.