அதிகாரியின் விசா ரத்து செய்யப்பட்டது குறித்து யுனிசெவ் விளக்கம் கோருகிறது

uni4444.jpgஇலங்கை யில் பணியாற்றும் ஐக்கியநாடுகள் சிறுவர் நிதிய பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரின் விசாவை ரத்து செய்வதென இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு காரணம் கூறுமாறு யுனிசெவ் நிறுவனம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இலங்கையில் மிக மோசமாக இடர்களை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள், சிறுவர்களுக்காக ஒரு பாரபட்சமற்ற தன்னார்வ பணியாளராக எல்டர் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டுமென தாங்கள் திடமாக நம்புவதாக புதுடில்லியிலிருந்து பணியாற்றும் யுனிசெவ் பிராந்திய தொடர்பாடல் அதிபர் சாரா குறோவ் ஏஎப்பி செய்தி ஸ்தாதபனத்திடம் தெரிவித்தார். சிறுவர்கள் மற்றும் மிக மோசமாக ஆபத்தை எதிர்நோக்கும் நாதியற்ற மக்களின் விமோசனத்திற்காக யுனிசெவ் சார்பில் பாடுபட்டுவருபவர் எவ்டர் என்று அவர் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராக அண்மையில் நடந்து முடிந்த யுத்தம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் காரணமாக இலங்கையில் பணியாற்றும் சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக அரசாங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.இலங்கையில் இரத்தக் களறியை ஏற்படுத்திவரும் இன யுத்தம் குறித்தும் இளம் பராயத்தவர்கள் மீது அதன் தாக்கம் குறித்தும் ஜேம்ஸ் எல்டர் அண்மைக் காலமாக வெளிநாட்டு தொலைக்காட்சி செய்தி அலைவரிசைகளிலும் அச்சு ஊடகங்களிலும் அடிக்கடி கருத்து தெரிவித்து வந்துள்ளார்.

செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதியிலிருந்து அவரது விசா ரத்து செய்யப்பட்டதுடன் அவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் கால அவகாசம் கோரியதன் பேரில் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி வரை அவரது விசாகாலம் நீடிக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டதிகாரி பி.பி.அபேக்கோன் தெரிவித்தார். ஜேம்ஸ் எல்டர் பாதகமான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்ததால் அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னரே அவரை நாட்டிலிருந்து வெளியேற்றும் தீர்மானத்தை எடுத்தது என்றும் அபேக்கோன் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *