நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. ஊழியர்கள் இருவரை விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. ஊழியர்களான சார்ள்ஸ் ரவீந்திரன், கந்தசாமி சுரேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்றும் இம்மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளன என்றும் மனித உரிமைகள் சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.செலஸ்டின் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஐ.நா. ஊழியர்கள் இருவரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வவுனியாவில் வைத்து இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்றும், தற்போது இவர்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா. வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.