டேவிஸ் கோப்பைடென்னிஸ்தொடரில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் அபாரமான ஆட்டத்தைக் காட்டி இந்தியாவுக்கு சாதனை வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் உலக பிரிவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று நான்காவது ஆட்டமான மாற்று ஒற்றையர் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தென் ஆப்ரிக்காவின் ரிக் டி வோஸ்ட்டை எதிர்கொண்டார்.
இதில் முதல் இரண்டு செட்களையும் 3-6, 6-7 என பறிகொடுத்த சோம்தேவ் விடாமல் போராடி அடுத்த மூன்று செட்களையும் 7-6, 6-2, 6-4 என வென்றார். இறுதியில் 3-6, 6-7, 7-6, 6-2, 6-4 என்ற செட்களில் வென்றார். கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் இந்தப் போட்டி நடந்தது. தோல்வியுறும் நிலைக்குப் போய், வீறு கொண்டு அடுத்தடுத்து 3 செட்களைப் பறித்த சோம்தேவின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
மற்றொரு போட்டியில் யூகி பாம்பிரி 3-6, 6-3, 6-3 என தென் ஆப்ரிக்காவின் இயான் வான் டெர் மெர்வியை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 4-1 என்ற போட்டி கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதையடுத்து சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை உலக பிரிவு ஆட்டத்துக்குள் இந்தியா நுழைந்துள்ளது.