வாஸின் மனைவி, மகனுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் – நால்வர் நேற்று விடுதலை

தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவனின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் ஆகியோருடன் மேலும் எட்டுப் பேரையும் எதிர்வரும் 29ம் திகதிவரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மேலும் நால்வர் நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். கடுவலை நீதிமன்றத்தினால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்படி தீர்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் மகன், தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவனை தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மகன் உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் நால்வரே நேற்று சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்றைய வழக்கின்போது, ஒரு சமயம் காணாமற் போனதாக கூறப்படும் தகவல் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *