August

August

வடக்கில் செய்கை பண்ணப்படாமல் 4700 ஏக்கர் விளைநிலம்

north-governor.jpgவட மாகாணத்தில் செய்கை பண்ணப்படாத அனைத்து விளை நிலங்களையும் விளைச்சல் மிகுந்த பகுதியாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

முதற்கட்டமாக யாழ் குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி உட்பட அனைத்து பகுதிகளிமுலுள்ள விளை நிலங்கள், தரிசு நிலங்கள் தொடர்பான கணக்கெடுப்பொன்றை நடத்தவுள்ளதாகவும், கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் செய்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தென்மராட்சி பகுதியில் சுமார் 4700 ஏக்கர் விளை நிலம் செய்கை பண்ணப்படாமலுள்ளது என இனங்காணப்பட்டுள்ளது.

வடபகுதியிலுள்ள விவசாயிகள் தமது விளை நிலங்கள் குறித்த தகவல்களை யாழ் அரச அதிபரிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

விளை நிலங்களின் உரிமையாளர்களின் பங்களிப்புடன் கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் அனைத்து விளை நிலங்களும் செய்கை பண்ணப்படும், உரிமையாளர்கள் அல்லாத காணிகள், தரிசு நிலங்கள் கமநல சேவைகள் திணைக்களத்தினாலேயே செய்கை பண்ணப்படும்.

வறண்ட பகுதில் செய்கை பண்ணக்கூடிய மரமுந்திரி போன்ற உப பயிர்களையும் வடமராட்சி பகுதியில் செய்கை பண்ணவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

கனமழையால் இடைத்தங்கல் முகாம் மக்கள் பாதிப்பு

flood.jpgஇலங் கையின் வடக்கே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் இன்னும் சிரமங்களை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென பெய்யத் தொடங்கியுள்ள மழை காரணமாக 21 ஆயிரம் பேர் முதலில் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் மழையினால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் இன்னும் குறையவில்லை என்றே இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என நேற்றைய பீ.பீ.ஸி செய்தியரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது

அநுராதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்றுடன் மழை – 35 வீடுகளுக்கு பாரிய சேதம்

அநுராதபுர மாவட்டத்தின் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடந்த 13ம் திகதி மாலை ஆரம்பித்த மழை தொடர்ந்தும் மாலை வேளையில் இடிமின்னலுடன் பெய்து வருகிறது.

கடும் காற்றுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்ததால் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அநுராதபுரம் நிவந்தக சேத்திய விகாரைப் பகுதியிலுள்ள மரங்கள் உடைந்து வீழ்ந்ததால் மின் கம்பிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இதனால் இவ்வீதி ஊடான போக்குவரத்தும் சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

தந்திரிமலை பகுதியிலுள்ள குடாஹல் மில்லவெவ, மஹஹல்மில்லவெவ கிராமங்களில் கடும் காற்றினால் பதினைந்து வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. மேலும் சுமார் இருபது வீடுகள் சிறு சேதங்களுக்கு உட்பட்டன. உடன்ஸ்தலத்துக்கு விரைந்த பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டப்ளிவ் பீ. ஏக்கநாயக்க மற்றும் மத்திய நுவரகம பகுதியில் பிரதேச செயலாளர் ஜீ.ஏ. கித்சிரி ஆகியோர் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டதுடன், இவர்களுக்கான நஷ்ட ஈடுகளை வெகு விரைவில் பெற்றுத்தருவதாக வாக்களித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க இப்பிரதேச விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இம்மழையினைத் தொடர்ந்து ரஜரட்ட பகுதி விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய காட்டு யானைகளின் தொல்லையும் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

நிவாரணக் கிராமங்களில் வெள்ளம் வடிகிறது; நிலைமை வழமைக்கு திரும்பியது – கழிவு நீர்க்கான் வேலைகளை துரிதப்படுத்த பணிப்பு

flood.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் வெள்ளம் வடிந்தோடி வருவதால் நிலைமை வழமைக்குத் திரும்பி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

கூடாரங்களுக்குள் வெள்ளம் வந்தமையால் வேறு இடத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டிருந்த 400 பேரும், நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து அவர்களுடைய கூடாரங்களுக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் வவுனியாவில் ஓரளவு மழை பெய்ததை தொடர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 400 பேர் உடனடியாக வேறொரு பாதுகாப்பான இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் நேற்று முதல் நிலைமை ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ளது. இதேவேளை, யு.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனெப்ஸ் ஆகிய தன்னார்வு தொண்டு அமைப்புகள் ஏற்கனவே தாம் பொறுப்பு எடுத்துக்கொண்ட வகையில் கவழி நீர்கான் தொடர்பான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதமும் மழைநீர் தேங்குவதற்கு காரணமாகவிருந்தமையினால் அதனை நிறைவேற்றுவதற்கான வேலைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ரிசாட் பதியுதீன் குறித்த நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் பாரிய மழை பெய்யுமாயின் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர்க்கு மாற்று வசதிகளை செய்வது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது மழையின் காரணமாக கூடாரங்கள், மலசலகூடங்கள் மற்றும் சமையல் நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர், வலயங்களுக்குப் பொறுப்பான தளபதிகள், முகாமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் அரசாங்க செயலகத்தில் கைவிரல் அடையாளம் மூலம் வரவைப் பதியும் இயந்திரம் அறிமுகம்

hsecurity_hand222.jpgஅரசாங்க ஊழியர்கள் கைவிரல் அடையாளத்தின் மூலம் வரவுப் பதிவு செய்யும் இயந்திரத்தின் அறிமுக நிகழ்வு நேற்றைய முன் தினம் யாழ் செயலகத்தில் இடம்பெற்றதுடன் அந்த இயந்திரத்தை வழங்கிய கொழும்பு மெற்ரோ பொலிட்டன் நிறுவனத்தின் விரிவுரையாளர் திலக் பனாண்டோ யாழ் அரசாங்க அதிபர் கே. கணேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கைவிரல் அடையாளம் மூலம் வரவுப் பதிவு இயந்திரத்தை விரிவுரையாளர் திலக் பனாண்டோ வைபவரீதியாக யாழ் அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன் அந்த இயந்திரத்தின் செயற்பாடுகள் பாவனை என்பன தொடாபாகவும் அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை தற்போது முதற் கட்டமா வழங்கப்பட்டுள்ள 16 இயந்திரங்களும் யாழ் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பொறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்க மேலும் – 5 நிலையங்களை நிறுவ முடிவு

முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக மேலும் ஐந்து புனர்வாழ்வு நிலையங்களை அமைக்க நடவடிககை எடுத்துள்ளதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது. சுமார் 10 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பனர்களுக்கு தற்பொழுது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு மட்டங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதோடு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொழில் தொழிற்பயிற்சி அளிக்கவும், சிறுவர்களுக்கு கல்வி வசதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்தில் 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 106 சிறுவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. இவர்களில் 55 சிறுவர்கள் 5-6 வருடங்களுக்கு மேலாக தமது பெற்றோரை கண்டதில்லை எனவும், இவர்களுக்கு தமது பெற்றோரை

சந்திக்க அண்மையில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. 12 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 455 சிறுவர்களும் 1,700 பெண்களும் பல்வேறு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.

நீதி நீதிமறுசீரமைப்பு அமைச்சின் பங்களிப்புடன் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதோடு, புதிய புனர்வாழ்வு நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகளை இந்த மாதத்தினுள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு அதிகாரி தெரிவித்தார்.

தென் மாகாண தேர்தல்; தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி 28 வரை நீடிப்பு

election000.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பம் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது.

தென் மாகாண சபைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட அரசாங்க ஊழியர்கள் பொலிஸார் மற்றும் முப்படையினர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக

விண்ணப்பிப்பதற்கு 17 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மேலும் பலருக்கு விண்ணப்பிப்பதற்கு அவகாசம் வழங்குவதற்காக இந்தக் காலக்கெடுவை நீடித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

4 நாள் மற்றும் ஒன்றரைவயது குழந்தைகளை விற்பனை செய்ய முயன்ற எழுவர் கைது

நான்கு நாள் வயதுடைய சிசு ஒன்றையும் ஒன்றரை வயதுடைய குழந்தையொன்றையும் விற்பனை செய்ய முயன்ற இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக காலி மற்றும் சிலாபம் பகுதிகளில் வைத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு வயதுடைய சிசுவை வெறும் ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக சிசுவின் தாய், காலி மகமோதர மகப்பேற்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் உட்பட 5 பேரை காலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். இந்த குழந்தை கடந்த 9 ஆம் திகதி மகமோதரை ஆஸ்பத்திரியில் பிறந்துள்ளது.

4 நாட்களின் பின்னர் மேற்படி சிசுவை தாய் இமதுவ பகுதி குடும்பமொன்றுக்கு விற்பனை செய்துள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பாட்டி பொலிஸில் முறையிட்டுள்ளார். இதன்படி செயற்பட்ட பொலிஸார் இமதுவ பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இசுவை மீட்டெடுத்ததோடு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை ஒன்றரை வயதுடைய குழந்தையொன்றை விற்பனை செய்ய முயன்ற இருவர் சிலாபம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கல்கமுவ உனம்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இருவரும் குழந்தையொன்றை விற்க தயாராவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் குழந்தையை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர். சந்தேக நபர்களின் உறவுக்காரக் குழந்தையையே பணத்துக்காக விற்க முயன்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏ-9 ஊடாக பயணம் செய்ய ஆசன முன்பதிவு

25sri-lankan-road.jpgயாழ். மாவட்டத்தில் இருந்து ஏ-9 பாதையூடாக இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்களில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளின் வசதி கருதி முன்பதிவு செய்து கொள்ளும் ஏற்பாடுகள் இன்று திங்கள் முதல் (17ம் திகதி) முன்னெடுக்கப்படவுள்ளன.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது ஆலோசனைக்கு அமைவாக இன்று 17ம் திகதி முதல் மேற்படி முன்பதிவு நடவடி க்கைகள் யாழ். பஸ் தரிப்பு நிலையத்திலும் பருத்தித்துறை மற்றும் காரைநகர் இ. போ. ச. பஸ் சாலைகளிலும் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் ஏ – 9 பாதையூடாக பஸ் பயணங்களை மேற்கொள்பவர்கள் கட்டாயமாக முன்பதிவுகள் செய்து கொள்வது அவசியமாகும் என்பதுடன் அவசர பயணங்களை மேற்கொள்ள வேண்டியதாயின் சிவில் அலுவலகத்துடன் தொடர்புகொள்ள இயலும். முன்பதிவு செய்து கொள்வதற்காக ஒரு பதிவுக்கு பத்து ரூபா வீதம் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

காலி, ஹெயார பகுதியில் நேற்று முன்தினம் (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காலி, கராபிடிய வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். கடமை முடிந்து வீடு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பொலிஸ் பொறுப்பதிகாரி கே.பி. சுமனசிறி பயணித்த மோட்டார் சைக்கிளும் மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஸ்தலத்தில் பலியானதோடு மற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கராபிடிய பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் பிரேத பரிசோதனை நேற்று (16) நடைபெற்றது. அவரது இறுதிக் கிரியைகள் இன்று (17) ஹெயாரயில் நடைபெறவுள்ளதாக கராபிடிய ஆஸ்பத்திரி பொலிஸார் கூறினர்.