நான்கு நாள் வயதுடைய சிசு ஒன்றையும் ஒன்றரை வயதுடைய குழந்தையொன்றையும் விற்பனை செய்ய முயன்ற இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக காலி மற்றும் சிலாபம் பகுதிகளில் வைத்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு வயதுடைய சிசுவை வெறும் ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக சிசுவின் தாய், காலி மகமோதர மகப்பேற்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் உட்பட 5 பேரை காலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். இந்த குழந்தை கடந்த 9 ஆம் திகதி மகமோதரை ஆஸ்பத்திரியில் பிறந்துள்ளது.
4 நாட்களின் பின்னர் மேற்படி சிசுவை தாய் இமதுவ பகுதி குடும்பமொன்றுக்கு விற்பனை செய்துள்ளதோடு இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பாட்டி பொலிஸில் முறையிட்டுள்ளார். இதன்படி செயற்பட்ட பொலிஸார் இமதுவ பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இசுவை மீட்டெடுத்ததோடு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை ஒன்றரை வயதுடைய குழந்தையொன்றை விற்பனை செய்ய முயன்ற இருவர் சிலாபம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கல்கமுவ உனம்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இருவரும் குழந்தையொன்றை விற்க தயாராவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் குழந்தையை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர். சந்தேக நபர்களின் உறவுக்காரக் குழந்தையையே பணத்துக்காக விற்க முயன்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.