July

July

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

pattammal.jpgசுமார் 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் தமது 90 ஆவது வயதில் இன்று சென்னையில் காலமானார் இவர் சிறிது காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியுள்ளார். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமலஹாஸனின் ‘ஹே ராம்’ படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியவர் இவரே.

இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருக்கு மிகச்சிறந்த போட்டியாளராக இவர் திகழ்ந்தார். இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் இவர் பெற்றார்; என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை-தென்னாபிரிக்க ஜனாதிபதிகள் எகிப்தில் சந்திப்பு

sa-sl.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் ஸமாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு இன்று எகிப்தின் ஷார்ம் அஷ்ஷெய்க்கில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மெய்ட் இன்கோனா மஷபேன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

பயங்கரவாதம், சமாதானம் தொடர்பாக சர்வதேச சமூகம் தனது இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்

111111.jpgஅணி சேராமைக்கு நடைமுறைசார் ஆழமான முக்கியத்துவத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.  எகிப்தின் சாம் அல் சேக் இல் இடம்பெற்ற அணிசேரா நாடுகள் அமையத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் உரையாற்றுகையில்;

உலகின் மிகக் குரூரமான பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்து பொது மக்களை மீட்டு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ள இலங்கையின் வீரம்மிகு பாதுகாப்பு படைகளைப் பாராட்டினார். இலங்கையை ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுத்தி அதன் ஆட்புல ஒருமைப்பாடு, சுதந்திரம், இறைமை மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் உரிமைகள் என்பவற்றை மேலும் பலமூட்டியிருக்கும் இவ்வடைவு சாத்தியமடைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒரே குறிக்கோளுடனான கடப்பாடு, தரிசனம் மற்றும் விடாமுயற்சி என்பன வழிகோலியுள்ளன.

காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அணிசேரா கொள்கையினை திடமாக ஸ்தாபிப்பதற்கு முக்கிய பங்காற்றியமையை அவர் அங்கு தெரிவித்ததோடு, அதற்காக அன்னாருக்கு புகழாரம் செலுத்தினார்.

இன்று இக்கொள்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் ஆதரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கையின் வெளியுலகிற்கான ஈடுபாட்டில் செயல் ரீதியான நோக்கெல்லை மற்றும் ஆழமான முக்கியத்துவம் என்பன வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.

அமைதி மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒருமித்த கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றுகையில், பயங்கரவாதம், நாடுகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கான முக்கியமானதொரு சவாலென இனங்கண்டதோடு, அதனை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டினை கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய சவால்கள் ஒருமித்த பதில் நடவடிக்கைகளின் தேவையின் அவசியத்தினை வலியுறுத்திய போகொல்லாகம, இவ்வாறான ஒன்றுபட்ட முயற்சிகளை முன்னெடுக்க அணிசேரா நாடுகளின் அமையம் தலைமைத்துவத்தை தாங்குமாறு அறை கூவல் விடுத்தார்.

15 ஆவது அணிசேரா நாடுகளின் அமையத்தின் உச்சி மாநாட்டிற்கு முன்பதாக இன்று இடம்பெற்ற இவ்விரு நாள் கூட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி, சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றின் சீர்திருத்தம் மற்றும் வறுமை தணிப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆராயப்பட்டன.

நேற்று இடம்பெற்ற அமைச்சு மட்டத்திலான ஒன்று கூடலின் பின்புலத்தில் அமைச்சர் போகொல்லாகம தனது தென்னாபிரிக்க மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ராஜாங்க அமைச்சர்களும் அமைச்சருடன் இருதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டார்.

பாதாள உலகக் கும்பலை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லை

sarath-pon-eka.jpgபாதாள உலகக் குழுக்களை ஒழிக்கத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்த கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனை இரண்டரை வருடத்துக்குள் ஒழித்த படையினருக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனவும் கூறினார்.

கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக நேற்று புதன்கிழமை பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் புலனாய்வுத் துறையினருக்கு நாம் பங்களிப்புச் செய்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் எமது ஒத்துழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில் அதை தொடர்ந்தும் வழங்குவோம்.  விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் இரண்டரை வருடங்களுக்குள் ஒழித்த இராணுவத்துக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனத் தெரிவித்தார்.

இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில்.

அண்மையில் நடந்தேறிய அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தற்போது வன்னியில் தடுப்பு முகாம்களில் வசித்துவரும் தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் முகமாக ஜரோப்பிய முழுமையான அமைப்பொன்றை நிறுவுவதற்காக July 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை Germany – Stuttgart இல் கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சலாந்து, பிரான்ஸ், ஜக்கிய இராச்சியம், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து எழுபதிற்கும் அதிகமான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த பங்குனி மாதம் ஸ்ரீலங்கா விஜயம் செய்து பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்கடர் பாலித கோகன்ன ஆகியோருடன் 3 நாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், செட்டிக்குளம் தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ் விஜயத்தில் ஜக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, சவுதி அரேபியா, சுவிற்சலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து 21 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கை அரசின் அதிகாரிகளை தனிப்பட்டரீதியில் சந்தித்து பேசுவதை தவிர்த்து, ஒரு சர்வதேச அமைப்பாக இயங்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கம்.

மார்ச் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் இக்குழு இயங்கத் தொடங்கியுள்ளது. ஜரோப்பாவில் அமையவிருக்கும் இக்குழு அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் அமையவிருக்கும் குழுவுடன் இணைவாக பணிபுரியும் எனத் தெரியவருகின்றது.

வன்னி முகாம்களின் நிலை தொடர்ந்தும் மோசமானதாக உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கியூபா தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

raaul-castroooo.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கியூபாவின் ஜனாதிபதி ராஉல் கஸ்ட்ரோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு, மாநாடு நடைபெறும் ஷார்ம் அல் ஷெய்க்கிலுள்ள ரோயல் சுய்ட் சர்வதேச ஹோட்டலில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி,  இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

இம்மாநாட்டுக்கு வருகை தந்திருந்த லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் அல்கடாபியை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் புதிய இலங்கைக்கு நேசக் கரம் நீட்ட தமது அரசாங்கம் தயாராக உள்ளதாக இச்சந்திப்பின்போது லிபியத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடல்கோள் ஏற்படுமென அஞ்சத் தேவையில்லை

tsunami111.jpgஎதிர் வரும் 22 ஆம் திகதி கடல்கோள் ஏற்படுமென மக்கள் மத்தியில் பரவி வரும் செய்தியில் உண்மையில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  அத்துடன், கடல்கோள் அல்லது பூகம்பம் குறித்து பல நாட்களுக்கு முன்னரே அறிவிக்கும் முறை செயன்முறையில் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இவ்வாறு பரவிவரும் செய்திகளில் விஞ்ஞான ரீதியிலான உண்மை கிடையாதென கடற்கோள் முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜப்பானுக்கு அருகில் ஏற்படும் பூகம்பத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கமெதுவும் கிடையாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வதந்திகளால் மக்கள் பதற்றமடைய வேண்டாமெனவும் அரச நிறுவனங்களின் எச்சரிக்கைகளையே நம்புமாறும் கடற்கோள் எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

bill-gates.jpgவரும் காலத்தில் இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க கணிப்பொறியின் இயக்க மென்பொருளை முழுமையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மைக்ரோசாப்ட் வடிவமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில்  இலங்கை அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அதிபர் ராஜபக்சேவின் அலரிமாளிகையில் நடந்தது.

விழாவில் பேசிய ராஜபக்சே, ‘பிராந்திய மொழிகளில் கம்ப்யூட்டர்களை இயக்கும் முறை வந்துவிட்டால் இலங்கையின் கிராமப்புற மக்கள் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

அதில், இலங்கை இப்போது நல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகவும், எதிர்காலத்தில் மிகச் சிறந்த வளர்ச்சியை அந்நாடு எட்டும் என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஐடி துறையில் சாதனைகள் படைக்க இலங்கை தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 450 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வவுனியா யாழ்ப்பாணம் தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அசம்பாவிதங்களோ இல்லை.

election.gifவவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ இல்லை என வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியா நகர சபையில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்தி்ப்பின் பின்னர் அந்தப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செய்தியளார்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகிய இந்தத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கூட செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.

maical-jak.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மறைவைத் தாங்க முடியாமல், இதுவரை உலகம் முழுவதும் 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம். மேலும், ஏராளமான ரசிகர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவர உதவுமாறு அதற்கான ஹாட்லைன் வசதியைத் தொடர்பு கொண்டபடி உள்ளனராம். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளதாக மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனைச் சேர்ந்த ஜாக்சனின் ரசிகரான கேரி டெய்லர் என்பவர் ஜாக்சனுக்கான இன்டர்நெட் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், இதுவரை 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைகரமானது. மைக்கேல் ஜாக்சன் இதுபோன்ற மரணத்தை விரும்ப மாட்டார். அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஜாக்சனின் விருப்பம் என்றார்.

ஜாக்சனின் மரணத்தால் அவரது பல ரசிகர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனராம். இதுபோன்ற பிரபலங்கள் மரணமடையும்போது அது மனதளவில் பலரையும் வெகுவாக பாதித்து விடுகிறது என்கிறார் லைப்லைன் என்கிற மன நல ஆலோசனை அமைப்பின் தலைமை செயலதிகாரி டான் ஓ நீல்.

இதற்கிடையே, ஜாக்சனின் குடும்ப நண்பரான ஜெசி ஜாக்சன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், யாரும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளக் கூடாது. இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஜாக்சனின் மரணம் பெரும் வலிதான். ஆனால் ஜாக்சனின் வாழ்க்கையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் ஜாக்சனுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றார்.