13

13

மட்டு. ஆஸ்பத்திரி பெண்தாதி டெங்கு நோய்க்குப் பலி – மகனும் கடுமையாகப் பாதிப்பு

aedes_aegypti.jpgடெங்கு நோய்க்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.  அதே வேளை இவரது மகன் டெங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதி, வெள்ளாள வீதியைச் சேர்ந்த திருமதி சாந்தினி சுவர்ணநாதன் என்ற 39 வயதுடையவரே மரண மானவராவார். சம்பவ இடத்திற்கு உடனடியாக விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரதிச் செயலாளர் பூ. பிர சாந்தன், ஆரையம்பதி பிரதேச செயலாளர் கலாநிதி எஸ். அமலநாதன், பிரதேசசபைத் தலைவர் திருமதி கிருஷ்டிணா உட்பட உயர் மட்ட அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் விஜயம் செய்து, டெங்கு பரவும் இடங்களைப் பார்வையிட்டனர். விசேட அதிரடிப்படையினரும் சமுகமளித்திருந்தனர்.

யாழ். குடாவில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர் ஆர்வம்

Jaffna_Mapயாழ்ப் பாணக் குடாநாட்டில் முதலீடுசெய்வதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்களென முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் துவதற்கும், உயர்ந்த கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அவர்கள் முன்வருகிறார்களெனவும் அவர் கூறினார்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இது தொடர்பான வேலைத் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளன. கனடா, அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளில் இலட்சக் கணக்கான இலங் கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் இவர்கள் மத்தியில் மேற்படி முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சுட்டிக் காட்டிய முதலீட்டுச் சபையின் தலைவர், “அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழு அடுத்த வாரம் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று புலம் பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து இதற்கான முன்னெடுப்புகளைத் தெளிவுபடுத்தவுள்ளது” என்றார்.

இலங்கை உயர் மட்டக்குழுவின் இந்தச் சந்திப்புகளின் போது, “யாழ்ப்பாணத்தை உங்களது இரண்டாவது வாழ் விடமாக்குங்கள்” என்ற தொனிப்பொருளைக் கொண்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தம்மிக்க பெரேரா கூறினார். யாழ். குடா நாட்டுக்கான முதலீட்டு மற்றும் உட்கட்டமைப்பு யாழ். குடாநாட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்களுக்கான கட்டடங்கள் அமைத்தல், புதிய வீடமைப்புக்களை ஏற்படுத்துதலும் இதில் அடங்கும்.

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய வகையில் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என கூறிய முதலீட்டுச் சபைத் தலைவர் பல்வேறு முதலீ ட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தனியார் பாடசாலைகள், மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகங்கள், மருத்துவ மனைகளை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் முதலீடு செய்பவர்க ளுக்கு நீண்டகால அடிப்படையில் வரிச்சலுகை வழங்கப் படவுள்ளதோடு, பல்வேறு சலுகைகளையும் வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. முதலீட்டுச் சபையின் மலேஷிய விஜயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முதலீட்டுச் சபைத் தலைவர் தம்மிக்க, அது மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தது. இந்த விஜயத்தின்போது இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.

ஒன்று அரசியல் மற்றது பொருளாதார விடயமாக இருந்தது என தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

விமான நிலைய பார்வையாளர் மண்டபம் – மீண்டும் திறப்பு

bandaranaikeairport.jpgபயங் கரவாத நடவடிக்கைகள் காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூடப்பட்டிருந்த பொது மக்களுக்கான பார்வையாளர் மண்டபம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தில் புலிகள் பல முறைகள் தாக்கதல்களை நடத்தியதையடுத்து பொது மக்கள் பாதுகாப்புக் கருதி இந்த பார்வையாளர் மண்டபம் மூடப்பட்டது. தமது உறவினர்களை வெளிநாடுகளுக்கு வழியனுப்ப வரும் பொது மக்கள் இந்த பார்வையாளர் மண்டபத்தை இனிமேல் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓமந்தையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பொருளாதார மையம் – அமைச்சர் பந்துல தகவல்

bandula_gunawardena.jpgவடக்கிற் கும், கிழக்கிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஓமந்தையில் பாரிய பொருளாதார மையமொன்றை அமைக்கவிருப்பதாக வர்த்தக நுகர்வோர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.

இதற்கென கடந்த சனிக்கிழமை 20 ஏக்கர் நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும்,  ஏ-9 வீதிக்கும்,  ரயில் பாதைக்கும் அருகிலேயே இந்த நிலப்பரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் இந்த வர்த்தக மையம் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான ஒரு கேந்திரஸ்தானமாக விளங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்ற பின்னர் இந்தத் திட்டத்திற்கான செலவுகள் குறித்து மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனம் அறிந்துகொள்ளும் எனவும்,  ரயில் பாதையைப் பயன்படுத்தி வடபகுதியின் விவசாய உற்பத்திப் பொருள்கள் தென்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

பெல்ப்ஸ் மற்றுமொரு உலக சாதனை

pelps.jpgஅமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மைக்கல் பெல்ப்ஸ் 100 மீற்றர் பட்டபிளை நீச்சல் போட்டியிலும் உலக சாதனை படைத்தார். இந்தியானா போல்ஸில் நடைபெற்றுவரும் அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலேயே பெல்ப்ஸ் இந்த உலக சாதனையை படைத்தார். இதன்போது அவர் 100 மீற்றர் படர்பிளை போட்டியை 50.22 வினாடிகளில் முடித்தார்.

முன்னதாக தனது சக நாட்டு வீரரான இயன் கிரொக்கர் நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 மீற்றர் பட்டபிளை போட்டியை 50.40 வினாடிகளில் முடித்ததே சாதனையாக இருந்தது.

இதன்படி பொல்ப்ஸ் தனிநபர் பிரிவில் படைத்த உலக சாதனைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முன்னர் அவர் 200 மீற்றர் பிரீஸ்டைல், 200 மீற்றர் பட்டபிளை, 200 மற்றுர் 400 மீற்றர் மெட்ளே நீச்சல் போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளார்.

சிவகீதா உட்பட ஐவர் ஸ்ரீ.ல.சு.கட்சியில் இணைவு

மட்டக் களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் உட்பட சபையின் 5 உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டனர்.

தேசிய நல்லிணக்க அமைச்சரும் அக்கட்சியின் துணைத் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். மாநகர முதலவர் சிவகீத்தா பிரபாகரன்,உறுப்பினர்களான கனகசபை பிரேமன்,செல்வராஜா சசிக்குமார், வெலிங்டன் ராஜேந்திரபிரசாத், நமசிவாயம் கருணானந்தம், கந்தையா அருமைலிங்கம் ஆகியோரே குறிப்பிட்ட மாநகர சபை உறுப்பினர்களாவர்.

இவர்களில் கந்தையா அருமைலிங்கம் ஏற்கனவே ஈ.பி.டி.பி.கட்சியில் அங்கத்துவம் பெற்று அக்கட்சி சார்பில் மாநகர சபைக்கு உறுப்பினராகவும்,ஏனையோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு – அமைச்சர் புகார்

hisbullapillaiyan.jpgஇலங் கையில் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் தொடர்ந்தும் ஆளுனரின் தலையீடு இருப்பதால் சில சந்தர்ப்பங்களில் மாகாண சபை நிர்வாகம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக அம் மாகாண சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குற்றம் சுமத்துகின்றார்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட அதிகாரிகளுக்கு ஆளுனர் தொடர்ந்தும் உத்தரவுகளையும் பிறப்பிப்பதாகவும் கூறும் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மாணங்களைக் கூட அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கூறுகின்றார்.

இது தொடர்பாக பல தடவைகள் ஆளுனரிடம் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் சுட்டிக்காட்டியபோது ஒரு கட்டத்தில் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் முதலமைச்சரும் அமைச்சர்களும் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

இன்றைய யுத்த வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஐ.தே.கட்சியையும் அதன் தலைவரையுமே சாரும்

“முப்பது வருட போராட்டத்தின் மூலம் படையினர் வட கிழக்கில் பெற்றுக் கொண்ட வெற்றியை அரசாங்கம் தனதாக்கிக் கொண்டு அதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்றது. இன்றைய வெற்றிக்கு வித்திட்ட பெருமை ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையுமே சாரும்’

இவ்வாறு மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார தெரிவித்தார். மாத்தளை ஐ.தே.க. அலுவலகத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய ரஞ்சித் அலுவிகார எம்.பி.;

2002 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. அரசு அரசியல் சாணக்கியத்துடன் செயற்பட்டு விடுதலைப்புலிகளிடையே பிளவை ஏற்படுத்தி அவர்களைப் பலமிழக்கச் செய்தமையாலேயே தற்போதைய அரசால் அவர்களை வெற்றி கொள்ள முடிந்தது.

இன்றைய பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் தமது நிர்வாகத்தில் இருப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி செயலிழந்து போயுள்ளது என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று இந்த மாயையை உடைத்தெறியும். அதற்கேற்றவாறு ஐ.தே.க. தேசிய மட்டத்தில் அடி மட்டத்திலிருந்தே மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது.

இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மக்கள் பாவனைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளாந்தம் மலைபோல் உயர்வடைகின்றது. பொருளாதாரப் பிரச்சினையால் செலவு செய்ய முடியாமலிருக்கும் நாட்டு மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். இதனை நாம் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீடு வீடாகச் சென்று அனைத்துக் குடும்பத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும். குறிப்பாக மாற்றுக் கட்சியினரையும் சந்தித்துப் பேச வேண்டும். பொறுப்புகளை தொண்டர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடக் கூடாது. கட்சியின் தலைமைத்துவத்தின் அறிவுறுத்தலுக்கேற்ப வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

சின்னமுத்துவிலிருந்து இடம்பெயர்ந்த குழந்தைகளை பாதுகாக்க திட்டம்

வவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளை சின்னமுத்து நோயிலிரு ந்து பாதுகாக்கவென அரசாங்கம் விசேட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தியுள்ளது.

இதேநேரம் இங்கு சமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும், மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும், நெருப்புக் காய்ச்சலுக்கு உள்ளானவர்களின் உறவினர்களுக்கும் நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்தூசி வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இந்நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி இருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளையும், சிறுவர்களையும் சின்னமுத்து நோயிலிருந்து பாதுகாக்கவென விசேட திட்டமொன்றை சுகா தாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சு நடைமுறைப்படுத்தி இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபன மருத்துவ நிபுணர் டாக்டர் நவரட்னசிங்கம் ஜனகன் கூறி னார்.

இத்திட்டத்தின் கீழ் நடைமுறையிலுள்ள சின்னமுத்து தடுப்பு மருந்து வழங்கல் அட் டவணைக்கு மேலதிகமாக இக்கிராமங் களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கி இருக்கும் ஆறு மாதம் முதல் மூன்று வய துக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தடுப்பு மருந்து வழங்குப்படுகின்றது. இது சின்ன முத்து நோயைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலான முன்னோடி பாதுகாப்பு நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

சின்னமுத்து நோய்க்கு பிறந்து ஒன்பது மாதம் முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே தடுப்பு மருந்து வழங்கப்படுவது வழமை என்று குறிப்பிட்ட அவர், இக்குழந்தைகளுக்கு வழமையான அட்டவ ணைக்கு மேலதிகமாகவே பிறந்து ஆறு மாதம் முதல் வழங்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் வழமையான அட்டவணைப்படி உரிய காலத்தில் அத்தடுப்பு மருந்தை பெறுவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தின் பிரதான அதிகாரியும், வட மாகாண அபிவிருத்திக்கான தகுதிவாய்ந்த அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக நேற்று சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

வட மாகாணத்திற்கான ஆளுநராக பதவிவகித்த டிக்சன் தால மாலைத்தீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் ஆளுநர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

இதையடுத்து ஏற்பட்ட வட மாகாண ஆளுநர் பதவி வெற்றிடத்திற்கே மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் நடைபெற்றது.