இனிமேல் இந்த நாட்டில் இன, மத, குல, பேதம் எதுவும் இருக்க முடியாது. இனங்கள் மத்தியில் நிலவிய உறவை இல்லாமல் செய்ய பயங்கரவாதிகள் எண்ணினார்கள். ஆனால் எமது உறவு அன்றுபோல் என்றும் உறுதியாக இருக்கும். இதை யாரும் மறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம் இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்ப முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று (07) முஸ்லிம் சமயப் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி தமிழ் மொழியில் இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள் உட்பட மேலும் பல இஸ்லாமியப் பிரமுகர்கள் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் கையளித்தார்.
இவ்வைபவத்தில் தமிழில் ஆற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில், அலரி மாளிகைக்கு வந்த உங்கள் எல்லோரையும் நான் அன்போடு வரவேற்கிறேன். இது எமது தாய் நாடு. இந்த நாட்டில் வாழும் நாமெல்லோரும் ஒரு தாய் மக்களே! இந்த அழகான நாட்டின் அபிவிருத்தி வேலைகள் இப்போது மிகவும் வேகமாக இடம்பெறுகின்றன. மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைகளும் வேகமாக இடம்பெறுகின்றன. முஸ்லிம் சமயப் பிரமுகர்களான நீங்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.
சாந்தி, சமாதானம், சகோதரத்துவம்,சகவாழ்வு இவை இஸ்லாம் மார்க்கத்தின் அத்திவாரம். உணர்வுகளுக்கு அடிமையாகாமல், எப்போதும் புத்தியைப் பயன்படுத்துவோம். அதுதான் மிகமிக முக்கியம். அது எமக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை தரும். முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும், எமது தாய்நாடுதான் எமக்கு முக்கியம். இங்கே வாழும் எல்லா மக்களும் பயம், சந்தேகம் இல்லாமல் பாதுகாப்பாக, சமஉரிமையோடு வாழ வேண்டும். அது எனது பொறுப்பு!
நான் உங்கள் நண்பன்! நீங்கள் என்னை நம்பலாம். நாமெல்லோரும் ஒன்றுபட்டு இந்த அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
பலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ஜனாதிபதி முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்துகின்றார் – கபீர் ஹசீம் குற்றச்சாட்டு
இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீன போராட்த்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ஜனாதிபதி முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக அமெரிக்க தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் எந்தவித கருத்துக்களையும் வெளியிடாமை பெரும் ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் நெருக்கடியான பல சந்தர்ப்பங்களில் அரேபிய மற்றும் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு பெரும் தொகை உதவிகளை வழங்கியுள்ளமை எவராலும் மறுக்க முடியாததொன்றென அவர் குறிப்பிட்டுள்ளார். பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்து வரும் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீனத்திற்கு உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ள இலங்கை, இஸ்ரேலுக்கு பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அனுப்பி உறவுகளைப் வலுப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த இரட்டை நிலைப்பாடு பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களின் போது முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கப்படும் என ஆளும் கட்சி குறிப்பிட்ட போதிலும், நடைமுறையில் ஆளும் கட்சியின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் பூஜ்ஜிய நிலையிலேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதென கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.