அரசியல் அதிகாரம் குவிந்திருக்கும் பக்கம் மக்கள் திரட்டி அணிதிரள்வது இயல்பானது. அதேபோன்று அரசியல் அதிகாரம் இல்லாத இடத்திலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறிச் செல்வதும் தவிர்க்க முடியாத ஒரு பண்பாக வளர்ந்து காணப்படுகின்றது.
அபிவிருத்தி கலாசாரம் விருத்தி பெறுவதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்கின்ற ஒரு பிழையான கோட்பாட்டுக்குள் நமது மக்களை கட்டி வைத்து அரசியல் செய்கின்ற ஒரு செயற்பாட்டினையும் நமது அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.
மேற்படி கூறுகள் அராங்கத்தின் பால் சார்ந்து நின்றால் தான் எதனையும் சாதிக்கலாம் என்கின்ற பதிவை பரவலாக நமக்குள் விதைக்கும் பாதைகளின் திறப்பு பெருகிவரும் ஒரு சூழலும் நமக்குள் வெகுவாக ஆட்சி புரியத் தொடங்கி இருக்கின்றது.
நமது அரசியல் தலைமைகள் காட்டும் பந்தாக்களின் பின்னால் அள்ளுப்பட்டுச் செல்லும் ஒரு சமூகமாக நாமிருக்கும் வரை நமது சமூகத்தள மேம்பாட்டை நோக்கிய நகர்வுகள் கொண்ட ஓர் அரசியல் முறைமை நமக்குள்ளிலிருந்து விடை பெற்றுச் செல்வதும் தவிர்க்க இயலாது.
ஒரு சமூகத்தின் இருப்பில் கட்டிட வளர்ச்சி, பௌதிக வளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற நலன்கள், தொழிலில்லாப் பிரச்சினை இன்றி இருத்தல் போன்ற பக்கங்கள் முக்கிய பாத்திரத்தைக் கொண்டதாகும்.
ஆனால், இவைகளைப் பார்க்கிலும் அதிக கூடிய முக்கியத்துவம் கொண்ட சில பக்கங்கள் ஒரு சமூகத்தின் இருப்பையும் எழுச்சியையும் வலியுறுத்துவதிலும் நிலைப்படுத்துவதிலும் பங்கு கொள்கின்றன.
அவற்றினை தக்கவைத்துக் கொள்வதில் தான் நமது இருப்பு அசையாது வேரூன்றிக் கொள்ளும். இல்லையேல் ஆட்டம் கொண்ட அத்திவாரமாகவே நமது சமூக கட்டிடம் எழுந்திருக்கும். அது உறுதியான பிடியிலிருந்து அகன்று உருக்குலைவை நோக்கிய நகர்ச்சிக்குள் இலகுவாக அகப்பட்டுவிடக்கூடும்.
உரிமத்துவம், தனித்துவமான செறிவான குடியிருப்பு, ஒற்றுமை போன்ற உயரிய கூறுகளை மிகவும் வலுவாக பற்றிக் கொள்ள வேண்டிய தேவைகள் பெருக்கெடுத்துக் காணப்படும் தருணத்தில் வெறும் அபிவிருத்தி அரசியல் நகர்வே இன்றைய அவசியம் எனப் பிதற்றுவது அர்த்தமுள்ள நகர்வல்ல.
வீதி அபிவிருத்தி, கட்டிட வளங்கள், தொழில் வாய்ப்பு போன்ற விடயங்கள் இயல்பாக நடைபெறும் ஒரு கோணத்தை நமது நாட்டு அரசியல் போக்குகள் நிர்ணயித்து வைத்திருக்கின்றது. ஆதலால் இவைகள் இயல்பாக நடைபெறுவதற்கான ஏதுக்கள் நிறையவே உள்ளன.
சமூக இருப்பு அரசியல் என்பது இயல்பாக நிகழ்ந்து விடக்கூடிய ஒன்றல்ல. அதற்கென்று கடுமையாகப் பாடுபடவேண்டிய சூழலில் தான் தங்கி இருக்கின்றது. ஏனெனில், ஆளுந்தரப்புக்கள் கைக்கொள்ளும் ஆதிக்க வன்முறைகள்தான் பாதிப்புக்களையும், இழப்பீடுகளையும் ஒரு சமூகத்தின் மீது குறிப்பாக்கி பாய்ச்சும் போதே இந்நிலை தொடர்கின்றது அல்லது படிகின்றது.
இங்கு இருந்துதான் ஒரு சமூகத்தின் உரிமத்துவ அரசியல் தொடங்கப்பட காரணமாகின்றது. தனித்துவப் பதிவை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தை சுமத்துகின்றது. இதன் வழியில் பயணிக்கும்போது சில துன்பங்களையும் இழப்புகளையும் அனுபவிக்க நேரிடுவது யதார்த்தமானது.
அரசியல் அதிகாரமுடையோர்களுக்கு எதிராகவே உரிமத்துவ அரசியல் கூறுகள் அநேகமாக அமைந்திருக்கின்றன. இவற்றினை கட்டுடைப்பு அல்லது அறுத்தெறிந்து கொள்வதில் தான் நமது உரிமத்துவ அரசியல் போராட்டம் வெற்றியை நோக்கியதாகவும் அதனை அடைந்து கொண்டதாகவும் மாறும்.
இதற்கு சில விலைகளை நாம் செலுத்த நேரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனைப் பொறுப்பெடுக்க நமது சமூகம் தயார் இல்லையாயின் அரசியல் அதிகார வன்முறைகளுக்கு அடங்கி, கட்டுண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்காது.
இதுதான் நமக்குச் சாதகமானது என உறுதியாக நாம் நம்பத் தொடங்கிவிட்டால், நமது பிரச்சினைகள் என்று கதையாட வேண்டிய தேவையிலிருந்து எம்மை விடுதலையாக்குகின்றது. அரசியல் அதிகாரம் இருக்கும் பக்கம் நமது மக்களின் பார்வையும், விருப்பும் ஓட்டத் தொடங்கும்.
இந்த நெருக்கம் நமது பல பிரச்சினைகளில் சிலவற்றுக்குத் தீர்வாக அமையமுடியும். அதேநேரம் அடங்கி வாழ்ந்து சில சலுகைகளைப் பெறும்பேற்றைக் கொண்ட “சலுகை அரசியல் ‘ பண்பின் பின்னால் நமது செல்நெறியை மாற்றிக் கொள்ளவைக்கும். இதனை வேறுவார்த்தையில் செல்வதாயின் அடிமைப்பட்டவர்களாகவும் பாவப்பட்டவர்களாகவும் நமது மக்கள் வாழ்வதை வலியுறுத்தி நிற்கும்.
இன்று நாம் போராட வேண்டிய தேவையைக் கொண்டவர்களாக இல்லை என்கின்ற ஒரு மாயைத் தோற்றத்தினை நிஜமுகமாக நமது அரசியல் தலைமைகள் காட்டும் புள்ளியைத் தொடங்கி இருக்கின்றனர். அது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டதன் பின்னர்.
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் ஆயுதப் போராட்டத்திற்கு உந்துதள்ளிய வடுக்கள் காயங்கள் அனைத்தும் இல்லாமல் போய் இனப்பிரச்சினைகள் யாவும் ஓந்து விட்டனவா என்கின்ற வினாவை எழுப்பினால் அதன் விடை “பிரச்சினைகள் இன்னும் தீர்வுக்குவரவில்லை’ என்றே காணப்படும்.
இவ்வாறான ஒரு நிலையில் சலுகை அரசியல், அபிவிருத்தி அரசியல் என்கிற வட்டங்களுக்குள் நம்மை சிறைப்படுத்தமுனைவது ஆரோக்கியமான பதிவுகளைத் தருமா? என்கின்ற கேள்வி இவ்விடத்தில் முக்கியப்படுகின்றது.
தனிக்கட்சிகளின் ஊடாக எதனையும் சாதிக்கும் வல்லமையைப் பெறமுடியாது என்றும், இனி நமக்கான கட்சிகளின் அவசியமில்லை என்போர்களின் வரவு சற்று கூடிச் செல்லும் பாங்கைப் பெற்றிருக்கின்றது. அதேநேரம் தனிக்கட்சிகள் இனிப்பயனில்லை என்போர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனிக்கட்சித் தாயிலிருந்து பிறந்து பிறழ்ந்தவர்களே.
தனிக்கட்சி நமக்கு அவசியமில்லை என்ற கூற்றை ஒரு இயக்கமாக முன்னெடுக்கும் எத்தனங்கள் நிறையவே காணப்படுகின்றது. ஆனால் இதன் பின்னால் நிற்போர்கள் ஏதோ ஒரு சிறிய கட்சியின் தலைமைத்துவத்தின் பின்னாலிருப்பதை அவதானிக்கலாம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறிய அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி போன்றோர்களும் கட்சிகளை அமைத்து நமக்கு மத்தியில் அரசியல் செய்வது பிரத்தியட்மானது. தனிக் கட்சியினால் இனிப் பயனில்லை எனில் ஏன் இவர்களுக்கு கட்சியும் தலைமைத்துவமும் என்கின்ற பெரும் வினா எழுவது தவிர்க்க முடியாது.
முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு தமிழர், சிங்களவர்களை குறிப்பிட்டளவு அங்கத்துவத்தைக் கொண்டும் கட்சியை அமைத்துவிட்டால் அது தேசிய கட்சி என்ற வரையறைக்குள் ஆகிவிடும் என்கின்ற புதிய ஓர் அரசியல் கலாசாரத்தின் துவக்கமாக இதனைக் கொள்ள வேண்டும் என்கின்ற பாடத்தை சொல்லித்தர இவர்கள் முனைகின்றனரா?
அவ்வாறாயின், இந்நாட்டின் ஆளுங்கட்சிகளாக வரக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய பெருங்கட்சிகளுடன் நமது நேரடி அங்கத்துவத்தை வைத்துக்கொள்வது சலுகை அரசியல் அல்லது அதிகார அரசியல் வெதற்கும் கூடிய பயனை நெருங்கி இருந்து பெறுவதற்கும் மிகவும் இலகுவான வழியாகும்.
இதுதான் நமக்கான தனித்துவ அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கு முன்னிருந்த நிலையுமாகும். அதற்குள்தான் நாமின்றும் பயணிக்க விரும்புகின்றோம் என்றால், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளை கலைத்துவிடலாமே? அதனைச் செய்வதற்கு முன்வராத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மட்டும் குறிவைத்து குறைகூறி தேவையற்றது எனச் சாடுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் தமிழர், சிங்களவர் அங்கத்துவம் குறைவாகவும் முஸ்லிம்களின் பிரசன்னம் அதிகமாகவும் இருக்கின்றது. ஆகவே, இக்கட்சியை இலக்கு வைத்து விமர்சிப்பது முறையற்றதும் விமர்சிக்கத் தகுதியற்றதுமாகும். ஏனெனில், ஏனைய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கட்சிகளும் இதன் அங்கத்துவப் பாங்கையே கொண்டிருக்கின்றது.
ஆகவே, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தம்மிடமிருக்கும் அமைச்சுப் பதவியை வைத்து உருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்படி அல்ல. மக்களின் தேவை குறித்து பேசி அதனை நமது மக்களும் ரிகண்டு பாராளுமன்ற உறுப்புரிமையை உறுதிப்படுத்தி, அதன் ஊடாக அமைச்சுப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் மக்களே காலாக நின்று உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பேரம் பேசும் ஆற்றலுடனும் நிபந்தனையுடனும் ஆட்சியமைக்கும் கட்சியோடு கைகோர்த்து சமூகநலன் சார்ந்து உழைப்பதும் பெயரளவில் இணைந்துகொண்டு முழுக்க முழுக்க பெருங்கட்சிக்கு இரையாகிக் கொண்டும் செயற்படுவதும் ஒரே அந்தஸ்து கொண்ட செயற்பாடுகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்வதில் அதிக சிரமமில்லை.
கட்சியின் தலைமைத்துவம், அங்கத்துவம் போன்ற உரித்தை வைத்துக்கொண்டு தனிக்கட்சி அவசியமில்லை என கர்ஜிப்பது வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கூப்பாடேயாகும். ஏனெனில், அவர்களின் கட்சி பங்கு பற்றுதலே நமக்கான கட்சியின் அவசியத்தை வலியுறுத்தப்போதுமானது. இன்றைய சூழலிலும் தனிக் கட்சி தேவை அற்றுப் போகவில்லை என்பதையும் இது புலப்படுத்துகின்றது.
அரசியல் அதிகாரத்தின் பக்கம் சாய்ந்து கொள்வதுதான் இன்றைய காலத்திற்கு பொருத்தமானது என்று கொண்டால், அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் அதிகமிருக்கின்றது. ஏனெனில், இன்று நமக்குள் இருக்கும் அனைத்து அரசியல் பிரதிநிதித்துவத்திலும் முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவு நல்கப்பட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் பிரதிநிதிகளுக்குமாகும்.
ஆகவே, சமூகத்தளத்தில் நின்று செயற்பட வேண்டிய தேவைகளும் அவசியங்களும் நமக்குள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த முன் நிபந்தனையுமின்றி அரசாங்கத்துடன் சேர வேண்டும் என எதிர்பார்ப்பது உகந்ததல்ல.
இன்றிருக்கும் சூழலில் அராங்கம் சார்ந்த போக்கு நமக்கு சிறந்ததென்று உன்னிப்பாக நோக்கி உணரப்படும் கருத்தாக நம்பப்படுமாயின் அதற்கான ஓர் அரசியல் காநகர்த்தலாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை உபயோகித்துக் கொள்ளும் கையாள்தலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவறவிடுமாயின் அது பாரிய வரலாற்றுத் தவறாக எம்மை நோக்கி பதிவுசெய்யத் தவறாது என்பதையும் கருத்திற்கொண்டு செயற்படுவோமாக!
நன்றி: தினக்குரல் 27.07.2009