ஒருங்கி ணைக்கப்பட்ட கப்பல் மற்றும் ரயில் சேவையை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக சார்க் போக்குவரத்து அமைச்சர்களின் மாநாட்டில் இலங்கை முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். இதனால், சாதாரண வருமானம் பெறும் பிரிவினரும் இலகுவாக இரு நாடுகளுக்குமிடையில் சென்று வர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இம்மாநாட்டு அமர்வின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கப்பல் சேவையையும் அத்துடன் இணைக்கப்பட்ட ரயில் சேவையையும் இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்துவதான யோசனை முன்வைக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஜனாதிபதியின் 25 வருட கனவு நனவாகப் போகின்றது.
1985 ஆண்டுக்கு முன் போக்குவரத்து சேவை இடம்பெற்ற நிலையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. இதன்படி கொழும்புக்கும் கொச்சினுக்குமிடையில் போக்குவரத்து இடம்பெறுவதற்கு இலங்கை ரயில்வே திணைக்களம் தலைமன்னார் வரை ரயில் தண்டவாளம் போடும் அதேநேரம் இந்திய ரயில்வே பிரிவினர் ராமேஸ்வரம் வரை விஸ்தரிப்பர் இந்நிலையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் கப்பல் சேவை இடம்பெறும்.
தெற்காசியாவில் பல்வேறுபட்ட சமூகங்கள் உள்ள நிலையில் பிணைப்பை ஏற்படுத்த இது வழிவகுக்கும். தெற்காசிய அமைப்பில் இலங்கையும் மாலைதீவும் தவிர ஏனையவை நிலத் தொடர்புடையவையாகும். இதேவேளை இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு ரயிலூடாக நேரடியாக செல்வதற்கும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.