22

22

புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதன்(கேபி) சனல் 4 தொலைக்காட்சியில்

இன்று 22ம் திகதி மாலை 7மணி (சனல்4) CH4 தொலைக்காட்சியில் புலிகளின் புதிய தலைவர் திரு செல்வராசா பத்மநாதனின் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் ஒளி பரப்பப்பட்டது. இதில் தாம் புலிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும், இலங்கை அரசு இன்று வரையில் அரசியல்த்தீர்வு யோசனையில் இல்லை என்பதையும்,
தமிழ்மக்கள் தமது சுதந்திர வாழ்விற்காகவே தான் மீண்டும் இந்த அமைப்பை பொறுப்பேற்றுள்ளதாகவும், தமது 1500 பேர்வரையிலான போராளிகள் இன்னமும் இலங்கைக் காடுகளில் இருப்பதாகவும், புலிகளால் மீண்டும் ஒரு இராணுவ தயார்படுத்தலை செய்ய முடியும் என்பதை மறைமுகமாகவும் தெரிவித்தார்.

இன்றய இந்த தனது வெளிப்படுத்தலின் மூலம் புலிகளின் இருப்பை திரு செல்வராசா பத்மநாதன் நிரூபிக்க முயற்ச்சித்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் புலிகள் இயக்கம் இல்லை. இலங்கையில் தமிழர்கள் முகாம்களில் துன்புறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக ஆயுதங்களை வாங்கி புலிகளை பலப்படுத்தியவர் இன்று அந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராகி தாம் ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் என CH4 தொலைக்காட்சி தெரிவித்தது.

ஈ.பி.டி.பி.யுடன் தமிழ் மக்கள் அணி திரண்டால் ஒளிமயமான எதிர்காலத்தை விரைவில் பெற முடியும் – தேவானந்தா

Douglas Devananda“13 ஆவது அரசியல் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மேலதிக அதிகாரங்களை வழங்குமாறு நாம் கேட்டுள்ளோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு ஏற்றுக்கொண்டு சர்வதேச சமூகத்திற்கும் எமது மக்களுக்கும் இதனை அறிவித்துள்ளார். அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எங்களுடைய அரசியல் அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் ஊடாக இந்த நகரசபைத் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நாம் அரசுடன் பேரம் பேசக்கூடிய அளவிற்கு சக்தி கொண்டவர்களாக வரமுடியும்’ என்று சமூகசேவைகள் சமூக நலத்துறை அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் ஈ.பி.டி.பி.யின் ஆறு வேட்பாளர்களையும் ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு செல்வராசா சந்திரகுமார் தலைமை தாங்கினார்.

அமைச்சர் தொடர்ந்தும் இங்கு பேசுகையில் குறிப்பிட்டதாவது;  “ஜனாதிபதித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி இந்தத் தேர்தலில் போட்டியிடப் போகின்றார்.  தமிழ் மக்களாகிய நாங்கள் பெருமளவு வாக்குகளை அவருக்கு வழங்குவதன் மூலம் அந்த உறுதி வெளிப்படுத்துவதன் ஊடாக எமது எதிர்கால அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

ஆயுதப் போராட்டத்திற்குரிய தேவை ஒரு கால கட்டத்தில் இருந்தது. அந்தப் போராட்டத்தின் ஊடாக இலங்கை இந்திய ஒப்பந்தம் என்றதொன்றை பெற்றிருந்தோம். அதனை நாம் சரிவரப்பயன்படுத்தவில்லை. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அதற்குப் பிறகும் பல வாய்ப்புகள் எமக்குக் கிடைத்திருந்தது. அதனையும் தமிழ்ச் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் ஜனநாயக வழியூடாக வந்த தலைவர்களும் சரி அல்லது ஆயுதப் போராட்டத்தின் ஊடாக வந்த தலைவர்களும் சரி அதனை சரிவரப் பயன்படுத்தவில்லை.  மீண்டும் ஒரு சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. அதனை சரிவரப் பயன்படுத்த வேண்டும். எமது மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளது. வீதிகள், குடிநீர்ப் பிரச்சினை, மின்சாரம், தடைகளற்ற போக்குவரத்து அவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளது. இதனை தீர்ப்பதற்காக திட்டங்களும் அதற்கான வலுவும் எங்களிடம் உள்ளது.

எங்களுக்கு தேவை மக்களுடைய ஆதரவு, பக்கபலம். இவை எங்களிடம் இருக்குமாக இருந்தால் நாங்கள் கடந்த 20 வருட தேவையற்ற யுத்தத்தில் அழிந்துபோன பிரதேசங்களை வரும் இரண்டு ஆண்டுகளில் கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்ய முடியும். எங்களோடு அணிதிரண்டு வந்தால் ஒரு விரைவான ஒளிமயமான எதிர்காலத்தை நாம் காண முடியும்’ என்றார்.

காலி மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை

galle-district.jpgகாலி மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த செனவிரத்ன இன்று காலை பெலிகஹா சந்தியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  தமது பிள்ளைகளுக்கு காலை உணவை கடையொன்றில் வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை விட்டு இறங்கிய போது துப்பாக்கிதாரிகள் கழுத்து பகுதியில் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
 
எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை

canada_flag.gifகனடாவில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கனடாவின் ஸ்கார்புறோ வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த பத்து நாட்களில் கனடாவில் இரண்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டெய்ஸி மார்ட் என்னும் கடைத் தொகுதிக்கு அருகாமையில் வைத்து நேற்று நள்ளிரவு 20 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இந்த இரண்டாவது படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறான மிலேச்சத் தனமான படுகொலைகள் தடுக்கப்பட வேண்டுமென கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். இன்னுமொரு இளைஞரை பரிதாபமாக பலிகொடுக்க நாங்கள் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990 மற்றும் 2000மாம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர் வன்முறைகள் அதிகமாகக் காணப்பட்டதாகவும் பின்னர் அந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வன்முறைகளைத் தடுத்து நிறுத்த விசேட செயற் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் எவரும் படுகொலை செய்யப்படக் கூடிய சூழ்நிலை காணப்படவில்லை எனவும், உலகின் மிகவும் அமைதியான சூழ்நிலை கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து கனடாவில் குடியேறியுள்ள சகல தமிழ் பெற்றோர்களும் தங்களது பிள்ளைச் செல்வங்களின் நலன் கருதியே இங்கு வந்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளியிடங்களுக்குச் செல்வதற்கானவாகன அனுமதி நடைமுறை கிழக்கில் நீக்கம்

images.jpgமட்டக் களப்பு ,மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதற்காக இதுவரை காலமும் அமுலிலிருந்த வாகன அனுமதி நடைமுறை (பாஸ்) இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு பாதுகாப்பு அமைச்சு வழங்கியதையடுத்து கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு உட்பட தென்பகுதிக்கு வாகனங்களில் வெடிப் பொருட்களும் ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதையடுத்தே வாகன பாஸ் நடை முறை 2006 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது.  இதற்கென தெரிவு செய்யபடப்ட பொலிஸ் சோதனை மையங்களில் வாகனங்கள் புறப்படும் தினத்தில் சோதனையிடப்பட்டு பயணிகள் உட்பட சகல விபரங்களும் பதிவு செய்யப்பட்டு 3 பிரதிகளை உள்ளடக்கிய பாஸ் வழங்கப்பட்டு வந்தது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புறப்படும் பயணிகள் 3 பிரதிகளில் ஓட்டமாவடி பாலம் பொலிஸ் சோதனைச் சாவடியில் முதலாவது பிரதியையும் இரண்டாவது பிரதியை மாவட்ட முடிவில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வழங்குவதோடு மூன்றாவது பிரதியை பயணம் முடியும் வரை வைத்திருக்க வேண்டும்

தற்போது இந் நடைமுறை நீக்கப்பட்டதையடுத்து இம் மாவட்டங்களிலிருந்து வெளியிடங்களுக்கான வாகனப் பயணங்களுக்கு பாஸ் அனுமதி பெற வேண்டிய தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகன உரிமையாளர்கள் இனிமேல் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதிப் பத்திரங்களைப் பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – யாழ் விமான சேவை திங்களன்று ஆரம்பம்! வாரமொன்றுக்கு மூன்று சேவைகள்

flight_domestic.jpgகொழும் பிலிருந்து யாழ்ப்பாணத்தக்கான  விமான சேவை அடுத்த திங்கள் முதல் நடத்தப்படவுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது. வாரமொன்றுக்கு மூன்று சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு நடத்தப்படும் என்றும் திங்கள்,  புதன்,  மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலேயே இச்சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவழிப் பாதைக்குமான கட்டணம் 19 ஆயிரத்து 100 ரூபாவாகும்.

இதேவேளை, கொழும்பிலிருந்து சீகிரியவுக்கு வாரமொருமுறை ஒரு சேவை நடத்தப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் கொழும்பிலிருந்து சீகிரியவுக்குச் செல்லும் விமானம் அன்றைய தினமே கொழும்பை வந்தடையும் இதற்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாவெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

petrol.jpgவட மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்;கள் அமைச்சின் செயலாளர் டப்ளியு.பீ.கணேகல தெரிவித்தார்.

புதிய மாற்றத்துக்கு ஏற்ப ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 6ரூபா 50 சதத்தாலும் டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபா 10 சதத்தாலும் மண்ணெண்ணெயின் விலை 5 ரூபா 60 சதத்தாலும் குறைவடைகிறது.

புதிய விலைக்கு ஏற்ப  ஒரு லீற்றர் பெற்றோல் 134 ரூபாவுக்கும் டீசல் ஒரு லீற்றர் 76 ரூபா 50 சதத்துக்கும் மண்ணெண்ணெய் 54 ரூபாவுக்கும் இன்று நலள்ளிரவு முதல் வட மாகாணத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

படக் காட்சியும் கருத்துக் களமும் : கனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையம்

little_terroristகனடிய தமிழ்த் திரைப்பட மேம்பாட்டு மையத்தின் செயற்பாடுகளில் ஒன்றான திரைப்படக் கருத்துக் களத்தின் நிகழ்வாக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திரைப்படக் காட்சியும் அதற்கான கருத்துக் களமும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் “Little Terrorist” ,  “Road to Ladkh” ஆகிய இரு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு அவை தொடர்பான விமர்சன நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

திரைப்பட ஆர்வலர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இடம்: 5310 FINCH AVENUE EAST, UNIT – 39, SCARBOROUGH

மேலதிக விபரங்களுக்கு: 416- 457- 8424 / 416- 450- 6833

மியன்மார் எதிரணி தலைவி சூகிக்கு மகாத்மா காந்தி அமைதி விருது

miyanmar_s.pngஅமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ கி பெற்றுள்ளார்.  இவ்விருது தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மகாத்மா காந்தி நிதியத்தினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு டர்பன் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏப்ரகிம் இஸ்மைல் ஏப்ரகிம்மால் வழங்கப்பட்ட இவ்விருதை ஆங் சாங் சூ கியின் சார்பாக மியன்மாரின் நாடு கடந்த அரசின் பிரதமர் தெய்ன்வின் பெற்றுக் கொண்டார்.

சூகி இராணுவ அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு அந்நாட்டிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட 20 ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையிலேயே இவ்விருது ஜூலை 20 ஆம் திகதி வழங்கப்படுவதாக அந்நிதியத்தின் உறுப்பினரான ப்படி கேர்னேய் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றும் மார்டின் லூதர் கிங் போன்று இவரும் அகிம்சை வழியை கடைப்பிடிக்கும் தலைவர். இவர் அகிம்சாவாதம், நீதி மற்றும் அமைதி என்பவற்றை உறுதியாகக் கடைப்பிடித்தமையினாலேயே இவ்விருது வழங்கப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விருது தனக்கு கிடைத்துள்ளது பற்றி ஆங் சாங் சூ கி அறிவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எமது தலைவர் எல காந்தி இது தொடர்பாக அறிவித்தலை மியன்மார் உயர்ஸ்தானிகர் மூலமாக அனுப்பியிருந்தார். இருப்பினும் அக்கடிதம் பிரித்துப்படிக்கப்படாமலே திருப்பியனுப்பப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆங் சாங் சூ கியிற்கும் மியன்மார் மக்களின் போராட்டத்திற்கும் முழு ஆதரவை தென்னாபிரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார்.  இவ்விருதை ஆங் சாங் சூ கி சார்பாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமென மியன்மாரின் நாடு கடந்த பிரதமர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் கியூபா டெங்கு நிபுணர்கள்

sri-cub.jpgகியூபா நாட்டு டெங்கு நோய் தொடர்பிலான நிபுணர்கள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வந்தடைந்துள்ளனர்.

கியூபாவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அராம்ஸ் மார்டினஸ், பிரதி தொற்று நோய் நிபுணர் திருமதி யெலினா ஆகியோர் நேற்று கொழும்பு வந்ததாகவும் இவர்கள் நேற்றைய தினமே அம்பாந்தோட்டை நோக்கிப் பயணமானார்கள், அங்கு டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கியூபாவின் பி.ரி.ஐ. பற்றீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்வதாகவும் சாதகமான நிலைமை காணப்பட்டால் உடனடியாகவே நடவடிக்கையிலிறங்க விருப்பதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னி நாயக்கா தெரிவித்தார். இன்று மாலை அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு திரும்பும் அவர்கள் மாலையில் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த பி.ரி.ஐ.பற்றீரியாவை பயன்படுத்துவதற்கான சாதகமான நிலை காணப்படின் வாரத்துக்கொரு தடவை அவை பயன்படுத்தப்படும்.

டெங்கு நோய் வேகமாக பரவியுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு தொடர்ச்சியாக நாடுமுழுவதும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க விருப்பதாகவும் வன்னிநாயக்கா தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க இலங்கையில் இதுவரையில் 18,300 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 190 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்த டாக்டர் பாலித மகீபால டெங்கு நோய் தொடர்ந்தும் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.