அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூ கி பெற்றுள்ளார். இவ்விருது தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மகாத்மா காந்தி நிதியத்தினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு டர்பன் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏப்ரகிம் இஸ்மைல் ஏப்ரகிம்மால் வழங்கப்பட்ட இவ்விருதை ஆங் சாங் சூ கியின் சார்பாக மியன்மாரின் நாடு கடந்த அரசின் பிரதமர் தெய்ன்வின் பெற்றுக் கொண்டார்.
சூகி இராணுவ அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு அந்நாட்டிலேயே வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட 20 ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையிலேயே இவ்விருது ஜூலை 20 ஆம் திகதி வழங்கப்படுவதாக அந்நிதியத்தின் உறுப்பினரான ப்படி கேர்னேய் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றும் மார்டின் லூதர் கிங் போன்று இவரும் அகிம்சை வழியை கடைப்பிடிக்கும் தலைவர். இவர் அகிம்சாவாதம், நீதி மற்றும் அமைதி என்பவற்றை உறுதியாகக் கடைப்பிடித்தமையினாலேயே இவ்விருது வழங்கப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்தார்.
இவ்விருது தனக்கு கிடைத்துள்ளது பற்றி ஆங் சாங் சூ கி அறிவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எமது தலைவர் எல காந்தி இது தொடர்பாக அறிவித்தலை மியன்மார் உயர்ஸ்தானிகர் மூலமாக அனுப்பியிருந்தார். இருப்பினும் அக்கடிதம் பிரித்துப்படிக்கப்படாமலே திருப்பியனுப்பப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆங் சாங் சூ கியிற்கும் மியன்மார் மக்களின் போராட்டத்திற்கும் முழு ஆதரவை தென்னாபிரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார். இவ்விருதை ஆங் சாங் சூ கி சார்பாகப் பெற்றுக் கொள்ள முடிந்தமை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமென மியன்மாரின் நாடு கடந்த பிரதமர் தெரிவித்தார்.