திருகோ ணமலை தொகுதியின் வடபகுதி எல்லைக் கிராமமான ரொட்டேவாவில் சுகாதார மத்திய நிலையம் ஒன்றை அமைத்து அப்பகுதி மக்களின் வைத்திய தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு மாகாணசபைப் பேரவையின் தவிசாளரும் திருகோணமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.எம்.பாயிஸ் கோரியுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்திலே தவிசாளர் பாயிஸ் இக்கோரிக்கையைச் சமர்ப்பித்தார்.
ரொட்டேவா கிராமம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் துறைகளில் இக்கிராமத்தில் அபிவிருத்தி வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும். சுகாதார மத்திய நிலையம் இக்கிராமத்தில் உடனே நிறுவப்பட வேண்டும் என்று தவிசாளர் பாயிஸ் தெரிவித்தார். அவரின் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார்.