ஆயுதக் குழுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் அவர்களை சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் செயல்திட்டங்களை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் ஆயுத மோதலும் சிறுவர்களும் என்பது பற்றிய அறிக்கையொன்றை பாதுகாப்பு சபைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் 18 வயதுக்கு குறைந்த முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு பொருத்தமான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கொழும்பை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மற்றும் ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை முன்னேற்றத்தை வென்றெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக நியூயோர்க்கில் வியாழக் கிழமையன்று பான் கீ மூனின் பேச் சாளர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆயுதக் குழுவிலிருந்து வெளியேறிய சகல சிறுவர்களினதும் அடையாளத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களை விடுவிக்க வேண்டும், புனர்வாழ்வளிக்க வேண்டும்.
அவர்கள் சமூகங்கள் மத்தியில் ஒருங்கிணைவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சர்வதேச தரத்திற்கமைவாக இவை தொடர்பான நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும்.
அத்துடன், மனிதாபிமானப் பணியாளர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்க அரசு வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பொருத்தமான பராமரிப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், இடம்பெயர்ந்த பிள்ளைகளின் போஷாக்கை அதிக உயர்ந்த பட்சத்துக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன் சிறுவர்களை படைக்கு திரட்டுவது தொடர்பாக எந்தவொரு பொறுமையையும் கடைப்பிடிக்கக் கூடாதெனவும் பான் கீ மூன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.