கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறையாக மும்பை மாநகரை இன்று ராட்சத அலைகள் தாக்கின. கடும் சீற்றத்துடன் காணப்பட்ட கடல் மிகக் கொந்தளிப்பாக உள்ளது. ராட்சத அலைகள் தாக்கியதால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
மும்பையில் நேற்று முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பிற்பகலுக்கு மேல் ராட்சத அலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அகற்றப்பட்டு வந்தனர்.
பல பகுதிகளில் நகருக்குள் கடல் நீர் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். மும்பையி்ல 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை கடல் சீற்றம் கடுமையாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதற்கேற்ப நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது கடல். கடல் நீர் பல பகுதிகளில் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். கொலாபா, தாதர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. தாராவி, மாஹிம், பார்லே, சயான், சான்டாக்ரூஸ் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழையும் பெய்தது. பல இடங்களில் கடல் அலைகள் பெரிய அளவில் எழுந்தபடி இருந்தன. பல இடங்களில் கடல் நீர் புகுந்ததால் சாலையில் வெள்ளம் என கடல் நீர் ஓடியது. கொலாபா, கீதா நகர் பகுதியில் புகுந்த கடல் நீரால் பல வீடுகளுக்குள் தணணீர் புகுந்தது. சில குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் 5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெரிய அலைகள் வந்ததில்லை என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரைக்கு யாரும் போக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
தீயணைப்புப் படையினர், கடலோரக் காவல் படையினர், கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். செய்தித் தாள்கள், டிவி, ரேடியோக்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கைச் செய்திகள் விடப்பட்டன. இந்த நிலையில் இன்று மதியம் ராட்சத அலைகள் மும்பையை தாக்கத் தொடங்கின. ராட்சத அலைகள் அலை அலையாக வந்து கடலோரப் பகுதிகளைத் தாக்கின. இதனால் கடல் நீர் பெருமளவில் ஊருக்குள் புகுந்தது. ஆர்ப்பரித்து வந்த அலைகள் தாக்கியதால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தகவல் இல்லை. நகரின் பல இடங்களிலும் கன மழையும் பெய்து வருகிறது. கடலோரத்தில் வசித்து வந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
நாரிமன் பாயின்ட், கொலாபா, கபே பரேட், மெரைன் டிரைவ், ஹாஜி அலி, ஒர்லி கடல் பாலம், பந்த்ரா பஸ் நிலையம், ஜூஹு, வெர்சோவா, மார்வே, கோராய், பாந்துப், விக்ராலி ஆகிய பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது. இப்பகுதிகளில் அலைகளின் சீற்றம் மிகக் கடுமையாக காணப்பட்டது. பிரபாதேவி, ஒர்லி, ஜூஹு, பந்த்ரா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் கடல் நீர் ஓடுகிறது. தாஜ் மஹால் ஹோட்டல் மற்றும் டவர் ஹோட்டல் பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது.
மும்பை அருகே உள்ள கடலோரப் பகுதிகளான தானே, பயாந்தர், உட்டன், பல்கார், போய்சார், தாஹனு ஆகிய பகுதிகளிலும் ராட்சத அலைகள் தாக்கியுள்ளன. பிற்பகல் 2.05 மணிக்கு தாக்க ஆரம்பித்த ராட்சத அலைகள், இன்று இரவு 8 மணி வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ராட்சத அலைகள் தாக்குவதை நகரின் பல்வேறு உயர்ந்த கட்டடங்களிலிருந்து மும்பை மக்கள் பார்த்து வருகின்றனர். இருப்பினும் அலைகளில் யாரும் சிக்கி விடக் கூடாது என்பதற்காக கடற்கரை அருகே செல்ல போலீஸார் தடை விதித்துள்ளனர். பொரிவிலி, கான்டிவிலி, மலத், காரேகான், அந்தேரி, பந்த்ரா, மாஹிம், தெற்கு மும்பையில் உள்ள உயர்ந்த கட்டடங்கள் எங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் நின்று அலைகளை வேடிக்கை பார்த்தனர்.
இதேபோல நாளை பிற்பகல் 2.43 மணியளவில் 4.94 மீட்டர் உயரத்திற்கு அலைகள் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.