புலிகளுடன் தொடர்புபடுத்தி என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. – மங்கள சமரவீர

mangala_saramaweera.jpgஎதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணிக்கு பயந்தே அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கு எதிராக கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். எந்த பிரச்சினை வந்தாலும் அடிபணியாது முகம்கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு கூட்டணியுடன் இணைந்து போராடுவேனெனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இது தொடர்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்; நான் புலிகளின் இலக்காக இருந்தவன். அவர்களுக்கு எடுத்துக் கூறியதுடன் அவர்கள் எமில் காந்தனை தெரியுமாவென கேட்டனர். ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடர்பில் இணைப்பாளராக நியமித்திருத்த வேளை அவரை சந்தித்திருந்தேன். வேண்டுகோளின் பேரில் அவரை தொடர்புபடுத்தியதாகவும் தெரிவித்தேன்.  இரு சந்திப்புக்கு பின்னர் அவரை சந்திக்கவில்லை. என்னுடனான சந்திப்பில் ஸ்ரீபதி சூரியாராச்சி, டிரான் அலஸ், பசில் ராஜபக்ஷவுடன் நானும் இருந்தேன் என்றேன். இந்த இரு சந்திப்புக்கு பின் நான் அவரை சந்திக்கவில்லை. அவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

அரசியல்வாதிகள் மீது தாக்குதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கு எதிராகக் கெடுபிடிகளை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.  சில தினங்களுக்கு முன் எனது கட்சியின் ஊடகப் பேச்சாளர் ரூபன் பேடினவின் வீட்டின் முன்னால் பத்திரிகை ஆசிரியர் லசந்த மீதான தாக்குதலில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளை ஒத்த குழுவினர் இருந்துள்ளனர்.

அதேபோல் எமது கட்சியின் செயலாளரான டிரான அலஸை புலனாய்வுப் பிரிவினர் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வருமாறு அழைத்து வாக்கு மூலங்களைப் பெற்ற நிலையில் என்னை அவர்கள் வியாழக்கிழமை அழைத்தனர். மக்கள் கவனத்தை திசைதிருப்பி ஆட்சியைத் தொடர்வதற்கே கெடுபிடிகள் எம்மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படையினர் இரத்தம், வியர்வை சிந்தி நாட்டை மீட்ட நிலையில் சமாதானத்தை ஏற்படுத்தாது சர்வாதிகார நடவடிக்கைக்கே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எவ்வாறான கெடுபிடிகள் வந்தாலும் அடிபணியாது நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் எதிர்கட்சிக் கூட்டணியுடன் இணைந்து போராடுவேன். இந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, ஜனநாயக மக்கள் முன்னணி உபதலைவர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *