வவுனி யாவில் முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் (ஐ.ஆர்.சி.) அனுப்பி வைக்கப்பட்டுள்ள 27 கொள்கலன் நிவாரணப்பொருட்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் தலையீட்டை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் கோரியுள்ளது.
இந்த 27 கொள்கலன்களும் இலங்கை சுங்கப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படாமல் உள்ளது. இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்குக் கடிதம் அனுப்பியிருப்பதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து இந்தியத் தூதரகத்துடன் தான் கதைத்ததாகவும் தாங்கள் கவனம் எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
இடம்பெயர்ந்தவர்களுக்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அனுப்பும் பொருட்களுக்கான சகல வரிகளையும் இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்காகச் சேகரித்து எம்.வி.கப்டன் அலிக் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கொழும்பில் இறக்க அரசு அனுமதி வழங்க மறுத்ததையடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்று பல நாட்களின் பின் இந்திய அரசின் அனுமதியுடன் (தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் தலையீட்டால்) சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்டது. அவற்றை பொறுப்பேற்ற இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கொலராடோ என்ற மற்றொரு கப்பலில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுப்பிவைத்திருந்தது. ஆனால், அப்பொருட்களை இறக்கி விநியோகிக்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கட்டண நிதி கோரியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் மூன்றாம் தரப்பு எவரிடமும் அவ்வாறு தாங்கள் கோரியிருக்கவில்லை என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருந்தது.
27 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் சுங்கப்பிரிவிலேயே வைக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக இந்திய தூதரகத்தினை தலையிடுமாறும் நேற்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.