01

01

அமைச்சர் ரோஹித்த சீனாவுக்குப் பயணம்

18rohitha_bogollagama_.jpgவெளி விவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சீனாவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று பயணமானார். சீன வெளிவிவகார அமைச்சர் யங் ஜெச்சியின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் அமைச்சர் சீனாவின் உதவிப் பிரதமர் வின்சட் சீவ்வைச் சந்தித்து இரு நாடுகளினதும் சம கால விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடுவார்.

”இலங்கையின் கடந்த கால நெருக்கடியும் எதிர்கால நடவடிக்கைகளும்” என்ற தலைப்பில் சீனாவின் சர்வதேச கல்விக்கூடத்தில் அமைச்சர் உரையாற்றுவார். சீனாவின் வர்த்தக சமூகத்தினரையும் சீனாவில் வாழும் இலங்கையர்களையும் அமைச்சர் போகொல்லாகம் சந்தித்து உரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

உதயன் தடையின்றி வெளிவருவதற்கு ஆசிரியரிடம் ஜனாதிபதி உத்தரவாதம்

uthayan_logo“எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் “உதயன்” நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கருத்து வெளியிடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை நசுக்குவதற்கு இடமளிக்க முடியாது. அத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் சக்திகளைத் தேடிக் கண்டுபிடித்து அடியோடு அடக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்படும். ஆரோக்கியமான ஊடகப்பண்பு நிலவுவதையே அரசுவிரும்புகின்றது. அந்த வகையில் “உதயன்” பத்திரிகையும் தனது பணியைத் தொடர்வதையே நாம் விரும்புகின்றோம்.

உதயன் பணியாளர்களும், நிறுவனமும் தமது கடமையை அச்சமின்றித் தொடரலாம். அத்தகைய அச்சமற்ற சூழ் நிலையை நாம் உறுதி செய்வோம்” இவ்வாறு “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியர் என்.வித்தியாதரனிடம் உறுதி தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

யாழ்ப்பாணத்தில் “உதயன்” நிறுவனத்துக்கு சில அநாமதேய சக்திகள் அச்சுறுத்தல் விடுத்திருப்பது பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இவ்விடயத்தை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இவ்வியடம் குறித்து “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் உரையாடல் ஒன்றை அமைச்சர் தொண்டமான் ஒழுங்குசெய்தார். இந்த உரையாடலின்போது “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியரிடம் ஜனாதிபதி தெரிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

“எதிரணியைச் சேர்ந்த சில சக்திகளே அரசின்மீதும் என்மீதும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக இப்படித் தொலைபேசி மூலமும் பிறவழிகளிலும் ஒளிந்துகொண்டு இருந்து அச்சுறுத்தல் விடுக்க முயல்கின்றன. அத்தகைய சக்திகளை உரியமுறையில் ஒட்ட அடக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவை தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது.

“முடிந்தவை முடிந்துவிட்டன. இனிப் புது அத்தியாயத்தைத் தொடங்குவோம். பிரிவினைவாதத்தைக் கைவிட்டு நாடு ஐக்கியத்துடன் அபிவிருத்தியை நோக்கி முன்னேறுவதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு எனக்கு அவசியம்.

“ஊடகப் பணிக்குக் கெட்ட பெயர் ஏற்படாமல் அது நேர்சீராக நடப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசுஎடுக்கும். இதற்காகத் தேவைப்பட்டால் ஊடக அமைச்சை நேரடியாக எனக்குக் கீழ் கொண்டு வரலாமா என்றும் கூட சிந்திக்கின்றேன்.

“உங்கள் ஊழியர்களை உற்சாகமாகப் பணியாற்றச் சொல்லுங்கள். எதிரணியின் வலைக்குள் வீழ்ந்து எமது அரசுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்துவிடாதீர்கள்.

“இந்த விடயத்தை உடனடியாக எனது கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கைகளுக்குத் தூண்டிய அமைச்சர் தொண்டமானுக்கும் எனது நன்றிகள். உங் கள் நன்றியையும் தெரியப்படுத்துங்கள்.

“அரசுடன் நெருங்கிய தொடர்பாடல்களைப் பேணி தமிழ் மக்களுக்கு அரசின் செய்தியை “உதயன்”, “சுடர் ஒளி” ஊடகங்கள் எடுத்துச் செல்லவேண்டும். நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவோம். வாருங்கள்” என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

‘ போதை மருந்துக்காக கெஞ்சினார் மைக்கேல் ஜாக்சன் ‘

maical-jak.jpgதனது கடைசி காலத்தில் தூக்கமின்மையால் தவித்த மைக்கேல் ஜாக்சன் , தூக்கத்திற்காக தன்னிடம் போதை மருந்து கேட்டு கெஞ்சினார் என்று அவரது உணவு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 25 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்த மைக்கேல் ஜாக்சன்,இறப்பதற்கு முன்னர் பல்வேறு நோய் மற்றும் காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.

அதிலும் வலி நிவாரணியாக அவர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட போதை மருந்துதான் அவரது உயிரை பறிக்கும் எமனாக அமைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது உண்மைதான் என நிரூபிப்பது போன்று ஜாக்சனுக்கு உணவு ஆலோசகராக பணியாற்றிய செரிலின் லீ என்ற பெண், கடுமையான வலி மற்றும் அதனால் ஏற்பட்ட தூக்கமின்மையால் ஜாக்சன் தனது கடைசி காலத்தில் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் வலியை மறந்து தூங்கக்கூடிய போதை மருந்தை கேட்டு தம்மிடம் அவர் கெஞ்சியதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு தூக்கத்திற்காக போதை மருந்து எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் கெடுதலை ஏற்படுத்தும் என்று எச்சரித்து, அவரது கோரிக்கையை தாம் ஏற்கவில்லை என்றும் லீ கூறியுள்ளார்.

ஜாக்சன் இறப்பதற்கு 4 தினங்களுக்கு முன்னர், அதாவது ஜூன் 21 ஆம் தேதியன்று அவரது உதவியாளர் மூலம் தம்மை தொடர்பு கொண்டபோது, அவர் எப்படியோ தூக்கத்திற்காக ‘ டிப்ரிவான் ‘ அல்லது வேறு ஏதோ ஒரு போதை மருந்தை எடுத்திருக்கிறார் என்பதை அறிந்து தாம் மிகவும் அச்சமுற்றதாகவும் லீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது :

” ஜூன் 21 ஆம் தேதியன்று ஜாக்சனின் பணியாளர் ஒருவர் மிகுந்த பதற்றத்துடன் என்னை தொடர்பு கொண்டு , மைக்கேல் இப்போதே என்னை பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். நான் என்ன ஆயிற்று ? என்று கேட்டேன்.அப்போது மைக்கேல் அவரது உதவியாளருக்கு அருகிலிருந்து பேசுவதை கேட்க முடிந்தது.தனது உடலின் ஒரு பாதி எரிவதாகவும், மறுபாதி குளிர்ச்சியாக இருப்பதாகவும் மைக்கேல் கூறினார்.

உடனே நான் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன்.அதே சமயம் அவருக்கு யாரோ எதையோ கொடுத்துவிட்டார்கள் என்பதையும், அது அவரது மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளது என்பதையும் உணர்ந்து கொண்டேன். இருப்பினும் ஜாக்சன் எனது அறிவுரைப்படி மருத்துவமனைக்கு செல்லாமலேயே ஜூன் 25 ஆம் தேதியன்று மரணமடைந்துவிட்டார்.

அவருக்கு அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை; ஆனால் ஜாக்சன் தூக்கத்திற்காக போதை மருந்தை எடுத்துக் கொள்வதில் பிடிவாதமாக இருந்தார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் ” என்று லீ மேலும் கூறியுள்ளார். 

அரசியல் நடவடிக்கை ஊடாக நாட்டுக்கு ஏற்ற தீர்வு – ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் லக்ஷ்மன் யாபா தகவல்

laxman_yapa_abeywardena.jpgபயங்கர வாதத்திலிருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கையில் முடிவு காணப்பட்டது போன்று அரசியல் நடவடிக்கைகள் மூலமும் நாட்டுக்கு ஏற்ற தீர்வு ஒன்று காணப்படும் என்று ஆளும் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தத்தை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளினதும் பாராட்டுக்கும் இலக்கானது. மஹிந்த சிந்தனையின் கீழ் நாட்டுக்கு ஏற்ற ஒரு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயல்படுவதாகவும் இதன்போது பல வேறுபட்ட கருத்துக்களும் முன்வைக்கப்படலாம்.

அனுபவம் மிக் ஒரு அரசியல்வாதி என்ற வகையில்; எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முன் எந்த ஒரு ஆழத்தத்துக்கும் அடிபணியாத நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயல்பட்டு வருகின்றார். விவசாயத்துறையில் இரண்டு இலட்சத்து மூவாயிரம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ள விடயத்தை அறியாத நிலையில் இது வரை 192000 தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவிக்கின்றார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

புனித மடுத்தேவாலயத்தில் இம்முறை மிகப் பிரமாண்டமான வருடாந்த உற்சவம் – நான்கு இலட்சம் பக்தர்களுக்கு வசதி

madhu_mary.jpgபுனித மடுத்தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக அப்பிரதேசத்தில் உள்ள மிதிவெடிகளை அகற்றுவதற்கான வேலைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 33 வருட காலத்தின் பின்னர் எதுவித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமான முறையில் மடு தேவாலய உற்சவத்தை கொண்டாட வழியேற்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கத்தோலிக்க மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றம் நடைபெற்று 15 ஆம் திகதி வருடாந்த உற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உற்சவத்தில் இம்முறை நான்கு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒன்றுகூடுவர் என எதிர்பார்ககப்படுகின்றது.

இவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உட்பட அனைத்து வசதிகளையும் வழங்க உரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேவாலய நிருவாகப் பொறுப்பாளர் வண. பிதா டெஸ்மன்குலஸ் தெரிவித்துள்ளார்

விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: செ. பத்மநாதன் கோரிக்கை

lttepathmnathan.jpgஇந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன். அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கோரியுள்ளார்.

இது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியுள்ளார் சமீபத்திய போரில், இந்தியா, இலங்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முழு வகையில் உதவிகளைப் புரிந்தது.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்களும், தமிழ் மக்களும் பலிக்கடாவாகி விட்டோம். இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்தியா எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது எங்களுக்கு முழுமையாக தெரிந்தாலும் கூட, இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை.

இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும். இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.

இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும் – ஜனாதிபதியிடம் யசூசி அகாஷி உறுதி

akashi.jpgவடக்கில் புதைக்கப்பட்டுள்ள  கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதியுதவி அளிக்கும் என இலங்கை வந்திருக்கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் நேற்று சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களின் தேவைகளை அரசாங்கம் மிகவும் சிறப்பாக நிறைவேற்றிவருகின்றது எனவும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது முகாம் ஏற்கெனவே அங்கு நிலவிவந்த இடநெருக்கடி கணிசமாகக் குறைத்துள்ளது எனவும் அகாஷி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து அகாஷிக்கு விளக்கமளித்த ஜனாதிபதிää நிவாரணக் கிராமங்களின் தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.

2ää87ää000 க்கும் மேற்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது உண்மையிலேயே பாரியதொரு சவால் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதோடு அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றவேண்டியும் உள்ளது எனவும் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிவரும் அதேநேரம் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அதற்குச் சமாந்திரமாக முன்னெடுத்து வருகின்றது எனவும் முகாம்களில் தங்கியிருக்கும் சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களிடையே தங்கியிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூக நீரோட்டத்தில் இணைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தான் விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அது தொடர்பாக தன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இருப்பதாகத் தெரிவித்தார்.

பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டிலேயே கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்திக்கூறிய அவர் 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்போடு செயற்பாட்டுவருவதாகவும் கூறினார்.

இலங்கையில் சிங்களவருடன் இணந்து ஒரு ‘தமிழர் அரசு’ : சட்டசபையில் இன்று முதல்வர் உரை

karunanithi.jpg இலங் கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ‘தமிழர் அரசை’ அமைக்கும் நிலை உருவாகலாம்” என்று முதல்வர் கருணாநிதி கூறினார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டசபையில் இன்று சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்மீது, அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசாமி ஆகியோர் பேசினர். இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் அந்த மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் முயற்சிகளைத் தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களவர்களுக்கு இணையாக வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதற்குப் பதிலளித்து முதல்வர் கூறுகையில்,”இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெறும் பிரச்சினை என்பது சிங்களவர்களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை.

மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவுக்குப் பேசி வருகிறது. அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு. இவற்றுக்காக போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஓர் அரசு அமைய வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு ‘தமிழர் அரசை’ அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதே போன்று இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் இந்த உலகில் வேறு எவருமே இருக்க முடியாது.தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமிக்கதாக மாற்ற வேண்டும் என்பது முக்கியமா? அல்லது அந்நாட்டு ஜனாதிபதியைக் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக நாம் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை ‘பண்டார வன்னியன்’ என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

இலங்கைத் தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களைச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.

தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்கள் போய்ச் சேரும்.

இலங்கைத் தமிழர்களுக்குத் தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சர் தொண்டமான் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்.

ஒரு குழுவை அனுப்பி இலங்கை நிலைமையைப் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

இது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும், இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு நாம் தீர்வு காண்போம்”. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை குறித்த தனது கட்சியின் நிலையை விளக்கிக் கூறினார்.

இலங்கை மாணவர்கள்மீது அசிட் வீச்சு : ஆஸி.பொலிஸார் விசாரணை

010709police.jpgசிட்னியில் இரு இலங்கை மணவர்கள் அசிட் வீச்சுக்கு உட்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 17 ஆம் திகதி, நள்ளிரவு வேளை, வெஸ்ட்மீட், அலெக்ஸ்சான்ரா அவனியூவிலுள்ள தமது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சமயம் ஜெயஸ்ரீ வடவல(வயது22), சதுக்க வீரசிங்க (வயது 27) ஆகியோர் மீது அசிட் வீசப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான எமது வேலைத்திட்டம் குறித்த தகவலை இந்திய அரசுக்கு வழங்கி வருகிறோம்: மஹிந்த சமரசிங்க

mahinda-samarasinha.jpgஇலங் கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த விபரங்களை இந்திய மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த விபரங்கள் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பத்தையும் சென்றடையும் என்று நாங்கள் நம்புகின்றோம் என இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:

“தற்போதைய நிலைமையில் ஒரு விடயத்தை மட்டுமே எங்களால் கூற முடியும். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அந்த வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை மற்றும் அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இந்திய தலைவர்களிடம் தெளிவுபடுத்தியிருந்தனர். இந்நிலையில் நாங்கள் இந்திய மத்திய அரசுக்கு வழங்கியுள்ள விபரங்கள் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது வேலைத்திட்டம் தொடர்பான விபரங்களை தொடர்ந்தும் இந்திய மத்திய அரசுக்கு வழங்குவதற்கும் அது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.