உதயன் தடையின்றி வெளிவருவதற்கு ஆசிரியரிடம் ஜனாதிபதி உத்தரவாதம்

uthayan_logo“எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் “உதயன்” நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கருத்து வெளியிடும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை நசுக்குவதற்கு இடமளிக்க முடியாது. அத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் சக்திகளைத் தேடிக் கண்டுபிடித்து அடியோடு அடக்குவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்படும். ஆரோக்கியமான ஊடகப்பண்பு நிலவுவதையே அரசுவிரும்புகின்றது. அந்த வகையில் “உதயன்” பத்திரிகையும் தனது பணியைத் தொடர்வதையே நாம் விரும்புகின்றோம்.

உதயன் பணியாளர்களும், நிறுவனமும் தமது கடமையை அச்சமின்றித் தொடரலாம். அத்தகைய அச்சமற்ற சூழ் நிலையை நாம் உறுதி செய்வோம்” இவ்வாறு “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியர் என்.வித்தியாதரனிடம் உறுதி தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

யாழ்ப்பாணத்தில் “உதயன்” நிறுவனத்துக்கு சில அநாமதேய சக்திகள் அச்சுறுத்தல் விடுத்திருப்பது பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இவ்விடயத்தை உடனடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இவ்வியடம் குறித்து “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் உரையாடல் ஒன்றை அமைச்சர் தொண்டமான் ஒழுங்குசெய்தார். இந்த உரையாடலின்போது “உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியரிடம் ஜனாதிபதி தெரிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

“எதிரணியைச் சேர்ந்த சில சக்திகளே அரசின்மீதும் என்மீதும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக இப்படித் தொலைபேசி மூலமும் பிறவழிகளிலும் ஒளிந்துகொண்டு இருந்து அச்சுறுத்தல் விடுக்க முயல்கின்றன. அத்தகைய சக்திகளை உரியமுறையில் ஒட்ட அடக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவை தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது.

“முடிந்தவை முடிந்துவிட்டன. இனிப் புது அத்தியாயத்தைத் தொடங்குவோம். பிரிவினைவாதத்தைக் கைவிட்டு நாடு ஐக்கியத்துடன் அபிவிருத்தியை நோக்கி முன்னேறுவதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு எனக்கு அவசியம்.

“ஊடகப் பணிக்குக் கெட்ட பெயர் ஏற்படாமல் அது நேர்சீராக நடப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசுஎடுக்கும். இதற்காகத் தேவைப்பட்டால் ஊடக அமைச்சை நேரடியாக எனக்குக் கீழ் கொண்டு வரலாமா என்றும் கூட சிந்திக்கின்றேன்.

“உங்கள் ஊழியர்களை உற்சாகமாகப் பணியாற்றச் சொல்லுங்கள். எதிரணியின் வலைக்குள் வீழ்ந்து எமது அரசுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்துவிடாதீர்கள்.

“இந்த விடயத்தை உடனடியாக எனது கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கைகளுக்குத் தூண்டிய அமைச்சர் தொண்டமானுக்கும் எனது நன்றிகள். உங் கள் நன்றியையும் தெரியப்படுத்துங்கள்.

“அரசுடன் நெருங்கிய தொடர்பாடல்களைப் பேணி தமிழ் மக்களுக்கு அரசின் செய்தியை “உதயன்”, “சுடர் ஒளி” ஊடகங்கள் எடுத்துச் செல்லவேண்டும். நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுவோம். வாருங்கள்” என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *