தனது கடைசி காலத்தில் தூக்கமின்மையால் தவித்த மைக்கேல் ஜாக்சன் , தூக்கத்திற்காக தன்னிடம் போதை மருந்து கேட்டு கெஞ்சினார் என்று அவரது உணவு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 25 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்த மைக்கேல் ஜாக்சன்,இறப்பதற்கு முன்னர் பல்வேறு நோய் மற்றும் காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.
அதிலும் வலி நிவாரணியாக அவர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட போதை மருந்துதான் அவரது உயிரை பறிக்கும் எமனாக அமைந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது உண்மைதான் என நிரூபிப்பது போன்று ஜாக்சனுக்கு உணவு ஆலோசகராக பணியாற்றிய செரிலின் லீ என்ற பெண், கடுமையான வலி மற்றும் அதனால் ஏற்பட்ட தூக்கமின்மையால் ஜாக்சன் தனது கடைசி காலத்தில் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் வலியை மறந்து தூங்கக்கூடிய போதை மருந்தை கேட்டு தம்மிடம் அவர் கெஞ்சியதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு தூக்கத்திற்காக போதை மருந்து எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் கெடுதலை ஏற்படுத்தும் என்று எச்சரித்து, அவரது கோரிக்கையை தாம் ஏற்கவில்லை என்றும் லீ கூறியுள்ளார்.
ஜாக்சன் இறப்பதற்கு 4 தினங்களுக்கு முன்னர், அதாவது ஜூன் 21 ஆம் தேதியன்று அவரது உதவியாளர் மூலம் தம்மை தொடர்பு கொண்டபோது, அவர் எப்படியோ தூக்கத்திற்காக ‘ டிப்ரிவான் ‘ அல்லது வேறு ஏதோ ஒரு போதை மருந்தை எடுத்திருக்கிறார் என்பதை அறிந்து தாம் மிகவும் அச்சமுற்றதாகவும் லீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது :
” ஜூன் 21 ஆம் தேதியன்று ஜாக்சனின் பணியாளர் ஒருவர் மிகுந்த பதற்றத்துடன் என்னை தொடர்பு கொண்டு , மைக்கேல் இப்போதே என்னை பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். நான் என்ன ஆயிற்று ? என்று கேட்டேன்.அப்போது மைக்கேல் அவரது உதவியாளருக்கு அருகிலிருந்து பேசுவதை கேட்க முடிந்தது.தனது உடலின் ஒரு பாதி எரிவதாகவும், மறுபாதி குளிர்ச்சியாக இருப்பதாகவும் மைக்கேல் கூறினார்.
உடனே நான் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன்.அதே சமயம் அவருக்கு யாரோ எதையோ கொடுத்துவிட்டார்கள் என்பதையும், அது அவரது மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளது என்பதையும் உணர்ந்து கொண்டேன். இருப்பினும் ஜாக்சன் எனது அறிவுரைப்படி மருத்துவமனைக்கு செல்லாமலேயே ஜூன் 25 ஆம் தேதியன்று மரணமடைந்துவிட்டார்.
அவருக்கு அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை; ஆனால் ஜாக்சன் தூக்கத்திற்காக போதை மருந்தை எடுத்துக் கொள்வதில் பிடிவாதமாக இருந்தார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் ” என்று லீ மேலும் கூறியுள்ளார்.