இலங் கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்த விபரங்களை இந்திய மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். அந்த விபரங்கள் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பத்தையும் சென்றடையும் என்று நாங்கள் நம்புகின்றோம் என இடர்முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இலங்கையின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:
“தற்போதைய நிலைமையில் ஒரு விடயத்தை மட்டுமே எங்களால் கூற முடியும். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றது. அந்த வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை மற்றும் அவர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இந்திய தலைவர்களிடம் தெளிவுபடுத்தியிருந்தனர். இந்நிலையில் நாங்கள் இந்திய மத்திய அரசுக்கு வழங்கியுள்ள விபரங்கள் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது வேலைத்திட்டம் தொடர்பான விபரங்களை தொடர்ந்தும் இந்திய மத்திய அரசுக்கு வழங்குவதற்கும் அது குறித்து தெளிவுபடுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.