16

16

வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்

kws-logo.jpg
கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.

குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.

காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )

வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.

இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.

இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.

சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.

இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.

இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.

இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.

யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )

இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார். 

வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.

ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

pattammal.jpgசுமார் 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் தமது 90 ஆவது வயதில் இன்று சென்னையில் காலமானார் இவர் சிறிது காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியுள்ளார். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமலஹாஸனின் ‘ஹே ராம்’ படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியவர் இவரே.

இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருக்கு மிகச்சிறந்த போட்டியாளராக இவர் திகழ்ந்தார். இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் இவர் பெற்றார்; என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை-தென்னாபிரிக்க ஜனாதிபதிகள் எகிப்தில் சந்திப்பு

sa-sl.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் ஸமாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு இன்று எகிப்தின் ஷார்ம் அஷ்ஷெய்க்கில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மெய்ட் இன்கோனா மஷபேன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

பயங்கரவாதம், சமாதானம் தொடர்பாக சர்வதேச சமூகம் தனது இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்

111111.jpgஅணி சேராமைக்கு நடைமுறைசார் ஆழமான முக்கியத்துவத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.  எகிப்தின் சாம் அல் சேக் இல் இடம்பெற்ற அணிசேரா நாடுகள் அமையத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் உரையாற்றுகையில்;

உலகின் மிகக் குரூரமான பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்து பொது மக்களை மீட்டு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ள இலங்கையின் வீரம்மிகு பாதுகாப்பு படைகளைப் பாராட்டினார். இலங்கையை ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுத்தி அதன் ஆட்புல ஒருமைப்பாடு, சுதந்திரம், இறைமை மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் உரிமைகள் என்பவற்றை மேலும் பலமூட்டியிருக்கும் இவ்வடைவு சாத்தியமடைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒரே குறிக்கோளுடனான கடப்பாடு, தரிசனம் மற்றும் விடாமுயற்சி என்பன வழிகோலியுள்ளன.

காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அணிசேரா கொள்கையினை திடமாக ஸ்தாபிப்பதற்கு முக்கிய பங்காற்றியமையை அவர் அங்கு தெரிவித்ததோடு, அதற்காக அன்னாருக்கு புகழாரம் செலுத்தினார்.

இன்று இக்கொள்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் ஆதரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கையின் வெளியுலகிற்கான ஈடுபாட்டில் செயல் ரீதியான நோக்கெல்லை மற்றும் ஆழமான முக்கியத்துவம் என்பன வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.

அமைதி மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒருமித்த கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றுகையில், பயங்கரவாதம், நாடுகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கான முக்கியமானதொரு சவாலென இனங்கண்டதோடு, அதனை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டினை கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய சவால்கள் ஒருமித்த பதில் நடவடிக்கைகளின் தேவையின் அவசியத்தினை வலியுறுத்திய போகொல்லாகம, இவ்வாறான ஒன்றுபட்ட முயற்சிகளை முன்னெடுக்க அணிசேரா நாடுகளின் அமையம் தலைமைத்துவத்தை தாங்குமாறு அறை கூவல் விடுத்தார்.

15 ஆவது அணிசேரா நாடுகளின் அமையத்தின் உச்சி மாநாட்டிற்கு முன்பதாக இன்று இடம்பெற்ற இவ்விரு நாள் கூட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி, சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றின் சீர்திருத்தம் மற்றும் வறுமை தணிப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆராயப்பட்டன.

நேற்று இடம்பெற்ற அமைச்சு மட்டத்திலான ஒன்று கூடலின் பின்புலத்தில் அமைச்சர் போகொல்லாகம தனது தென்னாபிரிக்க மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ராஜாங்க அமைச்சர்களும் அமைச்சருடன் இருதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டார்.

பாதாள உலகக் கும்பலை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லை

sarath-pon-eka.jpgபாதாள உலகக் குழுக்களை ஒழிக்கத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்த கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனை இரண்டரை வருடத்துக்குள் ஒழித்த படையினருக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனவும் கூறினார்.

கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக நேற்று புதன்கிழமை பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் புலனாய்வுத் துறையினருக்கு நாம் பங்களிப்புச் செய்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் எமது ஒத்துழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில் அதை தொடர்ந்தும் வழங்குவோம்.  விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் இரண்டரை வருடங்களுக்குள் ஒழித்த இராணுவத்துக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனத் தெரிவித்தார்.

இலங்கை சென்று திரும்பிய குழுவின் மாநாடு ஜேர்மனியில்.

அண்மையில் நடந்தேறிய அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தற்போது வன்னியில் தடுப்பு முகாம்களில் வசித்துவரும் தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் முகமாக ஜரோப்பிய முழுமையான அமைப்பொன்றை நிறுவுவதற்காக July 17ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை Germany – Stuttgart இல் கூட்டத் தொடர் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சலாந்து, பிரான்ஸ், ஜக்கிய இராச்சியம், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து எழுபதிற்கும் அதிகமான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மகாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த பங்குனி மாதம் ஸ்ரீலங்கா விஜயம் செய்து பசில் ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டாக்கடர் பாலித கோகன்ன ஆகியோருடன் 3 நாட்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன், செட்டிக்குளம் தடுப்பு முகாம்களுக்கும் விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ் விஜயத்தில் ஜக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி, சவுதி அரேபியா, சுவிற்சலாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து 21 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கை அரசின் அதிகாரிகளை தனிப்பட்டரீதியில் சந்தித்து பேசுவதை தவிர்த்து, ஒரு சர்வதேச அமைப்பாக இயங்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கம்.

மார்ச் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் இக்குழு இயங்கத் தொடங்கியுள்ளது. ஜரோப்பாவில் அமையவிருக்கும் இக்குழு அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளில் அமையவிருக்கும் குழுவுடன் இணைவாக பணிபுரியும் எனத் தெரியவருகின்றது.

வன்னி முகாம்களின் நிலை தொடர்ந்தும் மோசமானதாக உள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கியூபா தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

raaul-castroooo.jpgஎகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கியூபாவின் ஜனாதிபதி ராஉல் கஸ்ட்ரோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு, மாநாடு நடைபெறும் ஷார்ம் அல் ஷெய்க்கிலுள்ள ரோயல் சுய்ட் சர்வதேச ஹோட்டலில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி,  இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.

இம்மாநாட்டுக்கு வருகை தந்திருந்த லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் அல்கடாபியை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். 

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் புதிய இலங்கைக்கு நேசக் கரம் நீட்ட தமது அரசாங்கம் தயாராக உள்ளதாக இச்சந்திப்பின்போது லிபியத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடல்கோள் ஏற்படுமென அஞ்சத் தேவையில்லை

tsunami111.jpgஎதிர் வரும் 22 ஆம் திகதி கடல்கோள் ஏற்படுமென மக்கள் மத்தியில் பரவி வரும் செய்தியில் உண்மையில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  அத்துடன், கடல்கோள் அல்லது பூகம்பம் குறித்து பல நாட்களுக்கு முன்னரே அறிவிக்கும் முறை செயன்முறையில் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இவ்வாறு பரவிவரும் செய்திகளில் விஞ்ஞான ரீதியிலான உண்மை கிடையாதென கடற்கோள் முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜப்பானுக்கு அருகில் ஏற்படும் பூகம்பத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கமெதுவும் கிடையாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வதந்திகளால் மக்கள் பதற்றமடைய வேண்டாமெனவும் அரச நிறுவனங்களின் எச்சரிக்கைகளையே நம்புமாறும் கடற்கோள் எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

bill-gates.jpgவரும் காலத்தில் இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க கணிப்பொறியின் இயக்க மென்பொருளை முழுமையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மைக்ரோசாப்ட் வடிவமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில்  இலங்கை அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அதிபர் ராஜபக்சேவின் அலரிமாளிகையில் நடந்தது.

விழாவில் பேசிய ராஜபக்சே, ‘பிராந்திய மொழிகளில் கம்ப்யூட்டர்களை இயக்கும் முறை வந்துவிட்டால் இலங்கையின் கிராமப்புற மக்கள் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

அதில், இலங்கை இப்போது நல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகவும், எதிர்காலத்தில் மிகச் சிறந்த வளர்ச்சியை அந்நாடு எட்டும் என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஐடி துறையில் சாதனைகள் படைக்க இலங்கை தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 450 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

வவுனியா யாழ்ப்பாணம் தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அசம்பாவிதங்களோ இல்லை.

election.gifவவுனியா,  யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ இல்லை என வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியா நகர சபையில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்தி்ப்பின் பின்னர் அந்தப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செய்தியளார்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகிய இந்தத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.

வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கூட செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.