வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ இல்லை என வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.
வவுனியா நகர சபையில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்தி்ப்பின் பின்னர் அந்தப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செய்தியளார்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகிய இந்தத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.
வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கூட செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.