வரும் காலத்தில் இலங்கை மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியை அடையும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க கணிப்பொறியின் இயக்க மென்பொருளை முழுமையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் மைக்ரோசாப்ட் வடிவமைத்துக் கொடுத்துள்ளது.
இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இலங்கை அரசிடம் முறைப்படி ஒப்படைத்தது. இதற்கான நிகழ்ச்சி அதிபர் ராஜபக்சேவின் அலரிமாளிகையில் நடந்தது.
விழாவில் பேசிய ராஜபக்சே, ‘பிராந்திய மொழிகளில் கம்ப்யூட்டர்களை இயக்கும் முறை வந்துவிட்டால் இலங்கையின் கிராமப்புற மக்கள் பெரும் முன்னேற்றம் அடைவார்கள்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
அதில், இலங்கை இப்போது நல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதாகவும், எதிர்காலத்தில் மிகச் சிறந்த வளர்ச்சியை அந்நாடு எட்டும் என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஐடி துறையில் சாதனைகள் படைக்க இலங்கை தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் 450 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது