எகிப்தில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கியூபாவின் ஜனாதிபதி ராஉல் கஸ்ட்ரோவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இரு தலைவர்களுக்குமிடையிலான இந்த சினேகபூர்வ சந்திப்பு, மாநாடு நடைபெறும் ஷார்ம் அல் ஷெய்க்கிலுள்ள ரோயல் சுய்ட் சர்வதேச ஹோட்டலில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவரும் ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறார்.
இம்மாநாட்டுக்கு வருகை தந்திருந்த லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் அல்கடாபியை ஜனாதிபதி நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் கட்டியெழுப்பப்படும் புதிய இலங்கைக்கு நேசக் கரம் நீட்ட தமது அரசாங்கம் தயாராக உள்ளதாக இச்சந்திப்பின்போது லிபியத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.