பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்த கூட்டுப்படைத் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, பிரபாகரனை இரண்டரை வருடத்துக்குள் ஒழித்த படையினருக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனவும் கூறினார்.
கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக நேற்று புதன்கிழமை பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
பாதாள உலகக் கோஷ்டியினருக்கு எதிரான நடவடிக்கைகளில் புலனாய்வுத் துறையினருக்கு நாம் பங்களிப்புச் செய்து வருகிறோம். எதிர்வரும் காலங்களில் எமது ஒத்துழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில் அதை தொடர்ந்தும் வழங்குவோம். விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் இரண்டரை வருடங்களுக்குள் ஒழித்த இராணுவத்துக்கு பாதாள உலகத்தினரை ஒழிக்க நீண்ட காலம் தேவையில்லையெனத் தெரிவித்தார்.