பயங்கரவாதம், சமாதானம் தொடர்பாக சர்வதேச சமூகம் தனது இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும்

111111.jpgஅணி சேராமைக்கு நடைமுறைசார் ஆழமான முக்கியத்துவத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.  எகிப்தின் சாம் அல் சேக் இல் இடம்பெற்ற அணிசேரா நாடுகள் அமையத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம மேலும் உரையாற்றுகையில்;

உலகின் மிகக் குரூரமான பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்து பொது மக்களை மீட்டு இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் முழுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ள இலங்கையின் வீரம்மிகு பாதுகாப்பு படைகளைப் பாராட்டினார். இலங்கையை ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுத்தி அதன் ஆட்புல ஒருமைப்பாடு, சுதந்திரம், இறைமை மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் உரிமைகள் என்பவற்றை மேலும் பலமூட்டியிருக்கும் இவ்வடைவு சாத்தியமடைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒரே குறிக்கோளுடனான கடப்பாடு, தரிசனம் மற்றும் விடாமுயற்சி என்பன வழிகோலியுள்ளன.

காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அணிசேரா கொள்கையினை திடமாக ஸ்தாபிப்பதற்கு முக்கிய பங்காற்றியமையை அவர் அங்கு தெரிவித்ததோடு, அதற்காக அன்னாருக்கு புகழாரம் செலுத்தினார்.

இன்று இக்கொள்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் ஆதரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கையின் வெளியுலகிற்கான ஈடுபாட்டில் செயல் ரீதியான நோக்கெல்லை மற்றும் ஆழமான முக்கியத்துவம் என்பன வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.

அமைதி மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒருமித்த கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றுகையில், பயங்கரவாதம், நாடுகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கான முக்கியமானதொரு சவாலென இனங்கண்டதோடு, அதனை எதிர்கொள்வதில் சர்வதேச சமூகம் இரட்டை நிலைப்பாட்டினை கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய சவால்கள் ஒருமித்த பதில் நடவடிக்கைகளின் தேவையின் அவசியத்தினை வலியுறுத்திய போகொல்லாகம, இவ்வாறான ஒன்றுபட்ட முயற்சிகளை முன்னெடுக்க அணிசேரா நாடுகளின் அமையம் தலைமைத்துவத்தை தாங்குமாறு அறை கூவல் விடுத்தார்.

15 ஆவது அணிசேரா நாடுகளின் அமையத்தின் உச்சி மாநாட்டிற்கு முன்பதாக இன்று இடம்பெற்ற இவ்விரு நாள் கூட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி, சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஆகியவற்றின் சீர்திருத்தம் மற்றும் வறுமை தணிப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆராயப்பட்டன.

நேற்று இடம்பெற்ற அமைச்சு மட்டத்திலான ஒன்று கூடலின் பின்புலத்தில் அமைச்சர் போகொல்லாகம தனது தென்னாபிரிக்க மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்தார். பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ராஜாங்க அமைச்சர்களும் அமைச்சருடன் இருதரப்பு சந்திப்புக்களை மேற்கொண்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *